சேக் சயித் பின் சுல்தான் அல் நகியான்
சேக் சயத் பின் சுல்தான் அல் நகியான் (அரபு மொழி: زايد بن سلطان آل نهيان), (1918 — 2 நவம்பர் 2004) அபுதாபி அமீரகத்தின் முன்னாள் ஆட்சியாளரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் சனாதிபதியும் ஆவார். 1971 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகம் உருவானதிலிருந்து, 30 ஆண்டுகாலம் அதன் சனாதிபதியாகப் பணியாற்றினார். ஏழு தனித்தனியான அமீரகங்களை இணைத்து ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்குவதில் இவரது பங்கு காரணமாக இவர் அந்நாட்டின் சிற்பி என அழைக்கப்படுகிறார்.
சேக் சயத் பின் சுல்தான் அல் நகியான் الشيخ زايد بن سلطان آل نهيان | |||||
---|---|---|---|---|---|
அபுதாபியின் ஆட்சியாளரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் சனாதிபதியும் | |||||
ஆட்சி | 6 ஆகத்து, 1966 – 2 நவம்பர், 2004 | ||||
முன்னிருந்தவர் | சேக் சக்புத் பின் சுல்தான் அல் நகியான் | ||||
சேக் கலீபா சயத் அல் நகியான் | |||||
| |||||
மரபு | நகியான் குடும்பம் | ||||
அடக்கம் | 3 நவம்பர், 2004 (வயது 86) சேக் சயத் பெரிய மசூதி, அபுதாபி |
பின்னணி
தொகுசேக் சயத், 1922 ஆம் ஆண்டு முதல் 1926 ஆண்டு வரை அபுதாபி அமீரகத்தின் ஆட்சியாளராக இருந்த சேக் சுல்தான் பின் சயத் பின் கலீபா அல் நகியானின் கடைசி மகன். 1855 முதல் 1909 வரை அபுதாபியை ஆண்ட இவரது புகழ் பெற்ற பாட்டனாரான சேக் சயத் பின் கலீபா அல் நகியானின் பெயரே இவருக்கு இடப்பட்டது. இவரது தந்தையைத் தொடர்ந்து ஆட்சிபீடம் ஏறிய இவரது மூத்த சகோதரர் சேக் சக்புத் பின் சுல்தான் அல் நகியான், இரத்தம் சிந்தா அரண்மனைப் புரட்சி ஒன்றின் மூலம் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட பின் சயத் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். 1971 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகம் தோற்றுவிக்கப்பட்ட போது, ஒன்றியத்தின் அமீரகங்களின் ஆட்சியாளர்கள் உறுப்பினராகவுள்ள நாட்டின் ஆட்சிக் குழுவினால் சனாதிபதியாக முதன்முதலாகத் தெரிவு செய்யப்பட்டார். அதன் பின்னர் 1976, 1981, 1986, 1991 ஆகிய ஆண்டுகளிலும் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டார். இவர் பொதுவாக ஒரு தாராண்மைத் தன்மை கொண்ட தலைவர் எனக் கருதப்படுகிறார்.
இயல்புகள்
தொகுசுற்றியுள்ள பிற நாடுகளின் தலைவர்களுடன் ஒப்பிடும்போது இவர் ஓரளவு மத நல்லிணக்கத் தன்மை கொண்டவராக இருந்தார். இதனால் இவர் பழமைவாத நாடுகளால் விமர்சிக்கப்பட்டதும் உண்டு. எனினும் நாட்டை ஒற்றுமைப்படுத்துவதில் இவரது திறமையான பணி காரணமாக, இவர் உலக அளவில் நற்பெயர் கொண்டவராக விளங்கினார். ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சொந்தமானதாகக் கருதப்பட்ட மூன்று தீவுகளை பாரசீகக் குடாவுக்கு எதிர்ப்பக்கத்தில் உள்ள ஈரான் நாடு ஒருதலையாகக் கைப்பற்றி வைத்திருந்தபோதும், அந் நாட்டுடன் இணக்கமான உறவுகளைப் பேணுவதில் விருப்பம் காட்டி வந்தார்.
சில வேளைகளில் சர்ச்சைகளுக்குள் மாட்டிக்கொண்டபோதும், அரபு உலகத்தின் சமகால நிகழ்வுகள் குறித்துத் தான் நியாயமெனக் கருதும் கருத்துக்களை அவர் வெளியிடத் தயங்கியதில்லை. ஈராக், குவைத்தைக் கைப்பற்றிக் கொண்ட பின்னர், ஐக்கிய நாடுகள் அவை அதன் நாட்டின்மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. இதனால் ஈராக் நாட்டுப் பொதுமக்கள் துன்பங்களுக்கு உள்ளாவதைக் கருத்தில் கொண்டு, பொருளாதாரத் தடைகளை மீளப் பெறவேண்டுமென வாதிட்டார்.
உலகின் மிகப் பெரிய பணக்காரர்களுள் ஒருவராகவும் இவர் கருதப்பட்டார். போர்ப்சு சஞ்சிகை இவரது செல்வம் 24 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கக்கூடும் எனக் கணித்தது. இச் செல்வத்தின் பெரும் பகுதி அபுதாபி அமீரகத்தின் எண்ணெய் வளத்தினால் பெறப்பட்டது ஆகும். இவர் பெருமளவுக்கு மிதமானதும், மரபார்ந்ததுமான வாழ்க்கை முறையையே பின்பற்றி வந்தார். குதிரையேற்றம், வல்லூறுகளின் உதவியுடன் வேட்டையாடுதல் போன்றவற்றில் விரும்பி ஈடுபட்டார். சுடுகலன்களைப் பயன்படுத்தி வேட்டையாடுவதில் திறமையுள்ளவராக இருந்தபோதும், காட்டுயிர்ப் பாதுகாப்பு தொடர்பில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கவேண்டும் என்ற விருப்பினால் பிற்காலத்தில் அதனைத் தவிர்த்து விட்டார்.
கொள்கைகளும் தொண்டும்
தொகுபாரசீகக் குடாப் பகுதியில் இருந்து பிரித்தானியர் அகன்ற பின்னர், அரபு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதற்காக அபுதாபி நிதியம் ஒன்றை உருவாக்குவதில் ஈடுபட்டார். அபுதாபியின் எண்ணெய் வளத்தின் மூலம் கிடைத்த செல்வத்தைப் பயன்படுத்தி, ஆப்பிரிக்கா, ஆசியா ஆகிய கண்டங்களைச் சேர்ந்த நாற்பதுக்கு மேற்பட்ட வளம் குறைந்த இசுலாமிய நாடுகளின் வளர்ச்சிக்கு உதவி அளித்தார். பாலைவனத்தின் கடும் சூழலைக் குறைப்பதற்காக எண்ணெய் வருமானத்தைப் பயன்படுத்திப் பல திட்டங்களை முன்னெடுத்தார். இதன் மூலம் பாலைவனத்தைப் பசுமையாக மாற்றியவர் என்ற புகழும் இவருக்கு உண்டு.
1988 ஆம் ஆண்டு, ஐக்கிய அமீரகத்தின் குடிமக்களில் ஒரு பகுதியினர் இன்னும் வாடகை வீடுகளில் குடியிருப்பதை கேட்டறிந்த அவர் அதிர்ச்சியும் கடுஞ்சினமும் கொண்டார், அமீரகத்து மக்கள் வாடகை வீடுகளில் வாழ்வதை கவுரவக்குறைச்சலாக நினைத்த அவர் ,அந்த குடிமக்களுக்கு வீடுகளும் பண்ணை நிலங்களும் கொடுத்து உதவினார்.
இறுதிக் காலம்
தொகு1999 ஆம் ஆண்டில், சில சோதனைகளுக்காக சேக் சயத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஐக்கிய அரபு அமீரக மக்கள் அவருக்கு நன்றி தெரிவித்து, 15 இலட்சம் கையெழுத்துக்களுடன் கூடிய கடிதம் ஒன்றை அவருக்கு அனுப்பினர். 2000 ஆவது ஆண்டில் சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்காக ஐக்கிய அமெரிக்காவில் உள்ள கிளீவ்லாந்து கிளினிக் என்னும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
2004 நவம்பர் 2 ஆம் தேதி சேக் சயத் இறந்துவிட்டதாக அபுதாபி தொலைக் காட்சி அறிவிப்பு வெளியிட்டது. இறக்கும்போது அவருக்கு 86 வயது. அவரது உடல் அபுதாபியில் உள்ள சேக் சயத் பெரிய மசூதியின் முற்றத்தில் அடக்கம் செய்யப்பட்டது. சேக் சயத்தைத் தொடர்ந்து அவரது மூத்த மகனான சேக் கலீபா பின் சயத் அல் நகியான் அபுதாபியின் ஆட்சியாளராகவும், ஐக்கிய அரபு அமீரகத்தின் சனாதிபதியாகவும் தெரிவுசெய்யப்பட்டார். அபுதாபி அமீரகத்தின் முடிக்குரிய இளவரசராக அறிவிக்கப்பட்டிருந்த இவர், 1990 களிலிருந்தே அரசாங்க அலுவல்களில் கூடிய ஈடுபாடு காட்டிவந்தார்.
வெளியிணைப்புக்கள்
தொகு- சேக் சயத்தின் இணையதளம் பரணிடப்பட்டது 2004-02-27 at the வந்தவழி இயந்திரம்
- சயத் பின் சுல்தான் அல் நகியான்