சேக் சயத் மசூதி
சேக் சயத் மசூதி, ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரமான அபுதாபியில் அமைந்துள்ளது. இது அந் நாட்டின் மிகப்பெரிய மசூதியும், உலகிலுள்ள மசூதிகளில் ஆறாவது பெரியதும் ஆகும்.[1][2][3] ஐக்கிய அரபு அமீரகத்தின் நிறுவனர்களில் ஒருவரும், அதன் முன்னாள் சனாதிபதியுமான சேக் சயத் பின் சுல்தான் அல் நகியானின் பெயர் இம் மசூதிக்கு இடப்பட்டது. இவ்விடத்திலேயே சேக் சயத்தின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது. இது 2007 ஆம் ஆண்டின் இசுலாமிய ரமழான் மாதத்தில் திறந்து வைக்கப்பட்டது.
சேக் சயத் மசூதி | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | அபுதாபி![]() |
புவியியல் ஆள்கூறுகள் | 24°24′44″N 54°28′28″E / 24.41222°N 54.47444°E |
சமயம் | இசுலாம் |
வடிவமைப்பு தொகு
சேக் சயத் மசூதியின் வடிவமைப்பு, முகலாயக் கட்டிடக்கலையையும், மூரியக் மசூதிக் கட்டிடக்கலையையும் தழுவியது. இதில் லாகூரில் உள்ள பாத்சாகி மசூதியினதும், கசாபிளங்காவில் உள்ள இரண்டாம் அசன் மசூதியினதும் நேரடியான செல்வாக்குக் காணப்படுகின்றது. சிறப்பாக, குவிமாடங்களின் தளக் கோலம் பாத்சாகி மசூதியைப் பின்பற்றியதாக உள்ளது. இம் மசூதியில் உள்ள வளைவுவழிகள் அடிப்படையில் மூரியப் பாணியையும், மினார்கள் அராபியக் கட்டிடக்கலைப் பாணியையும் சார்ந்துள்ளன. எனவே இது முகலாய, மூரிய மற்றும் அராபியக் கட்டிடக்கலைகளின் கலப்புப் பாணியைச் சார்ந்தது எனலாம்.
அளவு தொகு
இம் மசூதி 40,000 பேர் வழிபடுவதற்கான இடவசதி கொண்டது. பெரிய தொழுகை மண்டபத்தில் 9,000 பேர் வரை தொழலாம். இதன் அருகேயுள்ள இரண்டு மண்டபங்கள் ஒவ்வொன்றும் 1,500 பேரை அடக்கக்கூடியது. இவை பெண்களுக்குரியவை. மசூதியின் நான்கு மூலைகளிலும் அமைந்துள்ள மினார்கள் ஒவ்வொன்றும், 115 மீட்டர்கள் (380 அடிகள்) உயரமானவை. முதன்மைக் கட்டிடத்தினதும், சூழவுள்ள இடங்களின் கூரைகளிலும் மொத்தம் 57 குவிமாடங்கள் உள்ளன. குவிமாடங்கள் சலவைக் கற்களால் அழகூட்டப்பட்டுள்ளன. உள்ளக அலங்காரத்திலும் சலவைக்கற்கள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
உலக சாதனைகள் தொகு
இம் மசூதி தொடர்பில் சில உலக சாதனைகளும் உள்ளன:
- இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள தளவிரிப்புக் கம்பளம் உலகின் மிகப் பெரிய கம்பளம் ஆகும். ஈரானியக் கம்பள வடிவமைப்புக் கலைஞரான அலி காலிக்கி என்பவரால் வடிவமைக்கப்பட்ட இக் கம்பளம், ஈரானியக் கம்பள நிறுவனம் ஒன்றால் உற்பத்தி செய்யப்பட்டது.[4] இதன் பரப்பளவு 5,627 சதுர மீட்டர்கள் (60,570 சதுர அடி). இதனை உற்பத்தி செய்வதில் 1,200 நெசவாளர்களும், 20 நுட்பியலாளரும், 30 பிற தொழிலாளரும் ஈடுபட்டனர். 47 தொன் நிறை கொண்ட இக் கம்பளத்தைச் செய்வதில் 35 தொன் கம்பளி, 12 தொன் பருத்தி என்பன பயன்பட்டன. இக் கம்பளத்தில் 2,268,000 முடிச்சுக்கள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
- உலகின் மிகப் பெரிய தொங்கு சரவிளக்கும் இம் மசூதியிலேயே உள்ளது. செருமனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஏழு தொங்கு சரவிளக்குகள் இங்கே உள்ளன. இவை அனைத்தும் செப்பினால் செய்யப்பட்டு பொன் பூச்சுப் பூசப்பட்டவை. இவற்றுட் பெரியது 10 மீட்டர் (33 அடி) விட்டமும், 15 மீட்டர் (49 அடி) உயரமும் கொண்டது.[5]
இவ்விரு உலக சாதனைகளையும் முன்னர் ஓமானில் உள்ள சுல்தான் கபூஸ் பெரிய மசூதி கொண்டிருந்தது.
இவற்றையும் பார்க்கவும் தொகு
குறிப்புகள் தொகு
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2009-06-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090601072337/http://www.halcrow.com/html/our_projects/projects/grand_mosque.htm.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2016-03-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303225036/http://palme-middleeast.com/melda/Press_Release_6.html.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2021-09-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210901090754/https://platform.twitter.com/widgets/widget_iframe.f88235f49a156f8b4cab34c7bc1a0acc.html?origin=http%3A%2F%2Fwww.eyeofdubai.com.
- ↑ "Webindia123.com — உலகின் மிகப்பெரிய கம்பளம் ஈரானில் செய்யப்படுகிறது." இம் மூலத்தில் இருந்து 2018-02-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180211071841/https://news.webindia123.com/news/Articles/World/20070728/726654.html.
- ↑ "காலீஜ் டைம்ஸ் — சேக் சயத் மசூதி ரமழான் மாதத்தில் திறக்கப்பட உள்ளது." இம் மூலத்தில் இருந்து 2014-03-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140323093535/http://www.khaleejtimes.com/DisplayArticle.asp?xfile=data%2Ftheuae%2F2007%2FAugust%2Ftheuae_August282.xml§ion=theuae.