முகலாயக் கட்டிடக்கலை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
முகலாயக் கட்டிடக்கலை என்பது 16 ஆம் 17 ஆம் நூற்றாண்டுகளில் முகலாயர், இன்றைய இந்தியா, பாகிசுத்தான், வங்காளதேசம் என்பவற்றை உள்ளடக்கி இருந்த அன்றைய இந்தியாவை ஆண்ட காலத்தில் தோன்றி வளர்ந்த ஒரு தனித்துவமான கட்டிடக்கலைப் பாணி ஆகும். இது, இசுலாமிய, பாரசீக மற்றும் இந்தியக் கட்டிடக்கலைகளின் கலப்பினால் உருவானது.
வரலாற்றுப் பின்னணி
தொகுமுகலாய மரபு 1526 ஆம் ஆண்டில் பேரரசர் பாபருடன் தொடங்கியது. பாபர், இப்ராகிம் லோடியை வென்றதை நினைவு கூருமுகமாக பானிப்பட் என்னுமிடத்தில் ஒரு மசூதியைக் கட்டினார். இதே காலப் பகுதியில் டிஸ்ட் மொராபாத் என்னும் இடத்தில் உள்ள சம்பாலில் இன்னொரு மசூதியும் கட்டப்பட்டது. தொடக்க முகலாயக் கட்டிடக்கலையின் எடுத்துக்காட்டுகளாக இன்றும் நிலைத்திருக்கும் கட்டிடங்கள் பேரரசர் சேர் சா சூரி என்பவரின் காலப்பகுதியைச் சார்ந்தவை. இவர் 1540 தொடக்கம் 1545 வரையிலான ஐந்தாண்டு காலமே ஆட்சியில் இருந்தார். இவர் உண்மையில் ஒரு முகலாயரும் அல்லர். இக் காலக் கட்டிடங்களுள், தில்லிக்கு அருகில் உள்ள கிலா இ குகுனா (1541), போரியல் கட்டிடக்கலை சார்ந்த தில்லியின் பழைய கோட்டை, வங்காளதேசத்தின் டாக்காவில் உள்ள லால் பாக் இன்றைய பாகிசுத்தானின் செலூம் என்னுமிடத்துக்கு அருகில் உள்ள ரோத்தாசு கோட்டை என்பவை அடங்கும். செயற்கை ஏரியொன்றின் நடுவில் அமைந்த மேடை ஒன்றின் மேல் எண்கோண வடிவில் அமைக்கப்பட்ட இவருடைய சமாதிக் கட்டிடம், சாசாராம் (Sasaram) என்னும் இடத்தில் உள்ளது. இக் கட்டிடம் இவரது மகனான இசுலாம் சா சூரியின் (கிபி 1545-1553) காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது.
அக்பர் காலம்
தொகுபேரரசர் அக்பர் (1556-1605) காலத்தில் பல கட்டிடங்கள் கட்டப்பட்டன. இவரது ஆட்சிக் காலப் பகுதியில் முகலாயக் கட்டிடக்கலைப் பாணி பெருமளவு வளர்ச்சி பெற்றது. குசராத்திலும் பிற இடங்களிலும் காணப்படுவது போல இவரது காலக் கட்டிடங்களில் முசுலிம், இந்து ஆகிய கட்டிடக்கலைகள் சார்ந்த கூறுகள் காணப்படுகின்றன. 1500 களின் இறுதிப் பகுதியில், அக்பர், ஃபத்தேப்பூர் சிக்ரி என்னும் அரச நகரைக் கட்டினார். இது ஆக்ராவில் இருந்து 26 மைல்கள் (42 கிமீ) தொலைவில் உள்ளது. பத்தேப்பூர் சிக்ரியில் உள்ள பல கட்டிடங்கள் இவர் காலக் கட்டிடக்கலையின் பாணியைத் தெளிவாகக் காட்டுகின்றன. அங்குள்ள பெரிய மசூதி சீரிய தோற்றமும், கட்டிடக்கலைத் தாக்கமும் கொண்டது. இந் நகரின் தெற்கு நுழைவாயில் மிகவும் பெயர் பெற்றது. அளவிலும், அமைப்பிலும் இந் நுழைவாயில் இந்தியாவில் உள்ள இது போன்ற வேறெந்த அமைப்புக்கும் ஈடாகக் கூடியது. முகலாயர்கள் பல கவர்ச்சியான சமாதிக் கட்டிடங்களைக் கட்டியுள்ளனர். அக்பரின் தந்தையான உமாயூனின் சமாதியும், சிக்கந்திராவில் உள்ள அக்பரின் சமாதியும் இவற்றுள் குறிப்பிடத் தக்கவை.
சகாங்கீர்
தொகுபேரரசர் சகாங்கீர் (1605–1627) காலத்தில் முகலாயர் கட்டிடங்களில் இருந்து இந்துக் கூறுகள் முற்றாகவே மறைந்து விட்டன. லாகூரில் உள்ள இவர்காலத்துப் பெரிய மசூதி பாரசீகக் கட்டிடக்கலைப் பாணியைத் தழுவியது. ஆக்ராவில் உள்ள 1628 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட இத்திமாத் உத் தௌலாவின் சமாதி முழுவதுமாக வெள்ளைச் சலவைக்கல்லால் ஆனது. இதன் மேற்பரப்பு முழுவதும் கல்லிழைப்பு (pietra dura)வேலைப்பாடுகளினால் மூடப்பட்டுள்ளது. இது இத்தகைய வேலப்பாடுகளுக்கான சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக விளங்குகிறது. காசுமீரின் தால் ஏரிக் கரையில் அமைந்துள்ள சாலிமார் பூங்காவும் அதனோடிணைந்த மண்டபங்களும் சகாங்கீரினால் கட்டப்பட்டவையே. இவர் தனது வளர்ப்பு விலங்கான மானொன்றுக்கும், பாகிசுத்தானில் உள்ள சேக்குபுரா என்னுமிடத்தில் இரான் மினார் என்னும் சமாதி ஒன்றைக் கட்டினார். இவர் இறந்த பின்னர் இவர்மீது கொண்ட அன்பின் காரணமாக இவரது மனைவி இவருக்கா ஒரு சமாதிக் கட்டிடத்தை லாகூரில் எழுப்பினார்.
ஷாஜகான்
தொகு.
பேரரசர் ஷாஜகான் காலத்தில்,முகலாயக் கட்டிடக்கலை நுணுக்கமான நளினத் தோற்றம், வேலைப்பாடுகளில் மெருகு என்பவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. இது, அவர் காலத்தில் ஆக்ரா, தில்லி ஆகிய நகரங்களில் கட்டப்பட்ட பெரிய அரண்மனைகள் வாயிலாக அறியக்கிடக்கிறது. இந்தியாவில் கட்டப்பட்ட சமாதிக் கட்டிடங்களுள் மிகச் சிறப்பு வாய்ந்ததும், உலகப் புகழ் பெற்றதுமான கட்டிடம் ஷாஜகான் தனது மனைவியான மும்தாசுக்காக ஆக்ராவில் கட்டிய தாஜ் மகால் ஆகும். ஆக்ராக் கோட்டையில் உள்ள மோத்தி மசூதி, தில்லியில் உள்ள ஜமா மசூதி என்பன சா சகான் காலத்துக் கட்டிடக்கலையின் வடிவமைப்பு நுட்பங்களைத் திறம்பட எடுத்துக் காட்டுகின்றன. சா சகான், லாகூர்க் கோட்டையுள் அமைந்துள்ள சமாதிக் கட்டிடம், மோத்தி மசூதி, சீசு மகால், நௌலாகா மண்டபம் போன்ற கட்டிடங்களையும் கட்டினார். இவர் தத்தா என்னும் இடத்தில் அவரது பெயரில் அமைந்த சா சகான் மசூதி என்னும் ஒரு மசூதியையும் அமைத்துள்ளார். சேக் இல்ம் உத் தீன் அன்சாரி என்னும் அரண்மனை மருத்துவரால் கட்டப்பட்ட லாகூரில் உள்ள வாசிர் கான் மசூதியும் சா சகான் காலத்தைச் சேர்ந்ததே.
ஔரங்கசீப் காலமும் பிற்கால முகலாயக் கட்டிடக்கலையும்
தொகுஔரங்கசீப்பின் (1658–1707) காலத்தில், கட்டிடங்களில் செவ்வகக் குற்றிகளாக வெட்டப்பட்ட கற்களினதும், சலவைக் கற்களினதும் பயன்பாடு குறைந்து, செங்கற்களும், கண்ட கற்களும் பயன்பாட்டுக்கு வந்தன. இவற்றின்மேல் சாந்தினால் அழகூட்டல்கள் செய்யப்பட்டன. முன்னரே கட்டப்பட்ட லாகூர்க் கோட்டையில் சில கட்டிட வேலைகளை இவர் செய்துள்ளார். அங்குள்ள 13 நுழைவாயில்களுள் ஒன்று ஔரங்கசீப்பினால் கட்டப்பட்டதே. இது பின்னர் இவரது பெயரில் "அலாம்கீர்" என வழங்கப்பட்டது. இவர் காலத்தில் கட்டப்பட்ட மிகக் கவர்ச்சியான கட்டிடம், லாகூரில் 1674 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட பாத்சாகி மசூதி ஆகும். லாகூர்க் கோட்டைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள இது, தொடராகச் சிவப்பு மணற்கற்களால் கட்டப்பட்டு வந்த பல பெரிய மசூதிகளில் கடைசியானதாகும். இது சா சகானால் சாசகானாபாத்தில் கட்டப்பட்ட மசூதியின் வடிவமைப்பிற்கு நெருக்கமாக ஒத்துள்ளது.
பீபி கா மக்பாரா (Bibi Ka Maqbara) (ஆங்கிலம்:"Tomb of the Lady")[2] முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் மனைவியான தில்ரஸ் பானு பேகத்தின் நினைவாக, அவரது மகன் முகமது ஆசம் ஷாவால் மகாராட்டிர மாநிலம், அவுரங்காபாத் நகரத்தில் கிபி 1651 - 1661களில், ரூபாய் 16,68,203 பொருட் செலவில் எழுப்பட்ட நினைவிடக் கட்டிடம் ஆகும்.[3] இக்கட்டிடம் தாஜ்மகால் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளதால், இதனை சிறு தாஜ்மகால் என்றும் அழைப்பர். இந்தியத் தொல்லியல் ஆய்வகம், பீபி கா மக்பாரா நினைவிடத்தை பராமரிக்கிறது.