சதுர அடி என்பது, இம்பீரியல் அளவை முறையில் பரப்பளவைக் குறிக்கப் பயன்படும் ஒரு அலகு. இம்பீரியல் அளவை முறையைப் பயன்படுத்தும் ஐக்கிய அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இது பொதுவாகப் பயன்படுகிறது. மெட்ரிக் அளவை முறைக்கு மாறிய ஐக்கிய இராச்சியம், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலும் கூட இவ்வலகும் பயன்பாட்டில் உள்ளதைக் காணமுடிகிறது. ஒரு அடி நீளமுள்ள பக்கங்களைக் கொண்ட சதுரம் ஒன்றின் பரப்பளவே ஒரு சதுர அடி என வரைவிலக்கணம் கூறப்படுகிறது. தமிழில் இதைச் சுருக்கமாக எழுதும்போது "ச.அடி" அல்லது அடி2 எனக் குறிப்பது வழக்கம்.

பயன்பாடுகள் தொகு

அளக்கப்படுகின்ற பரப்பின் அளவைப் பொறுத்தே சதுர அடியா அல்லது வேறு அலகுகளா பயன்படும் என்பதைத் தீர்மானிக்க முடியும். நாடுகளின் பரப்பளவு போன்ற மிகப்பெரிய அளவுகளும், வயல்கள் போன்ற பெரிய நிலத் துண்டுகளும் சதுர அடியிலும் கூடிய அளவு கொண்ட அலகுகளினால் (எ.கா: சதுர மைல், ஏக்கர் போன்றவை) அளக்கப்படுகின்றன. மிகச் சிறிய பரப்புகள் சதுர அங்குலத்தில் அளக்கப்படுகின்றன. இவற்றுக்கு இடைப்பட்ட அளவுகளே சதுர அடியில் அளக்கப்படுகின்றன. வீடுகள், கட்டிடங்கள் போன்றவற்றின் தளப்பரப்புக்கள் சதுர அடியில் அளக்கப்படும் பரப்புகளுக்கான எடுத்துக்காட்டுகள்.

கட்டுமானத்துறையில், இம்பீரியல் முறையைப் பயன்படுத்தும் நாடுகளில், சுவருக்குச் சாந்து பூசுதல், நிலத்துக்குக் கல்பதித்தல், தளவிரிப்புக்கள் போன்றவை சதுர அடியிலேயே அளக்கப்படுகின்றன. இவற்றுக்கான செலவுகளைக் கணக்கிடும்போதும் சதுர அடிக்கு இவ்வளவு என்ற அடிப்படையிலேயே கணக்கிடப்படுகின்றன.

அலகு மாற்றம் தொகு

435.6 சதுர அடி கொண்டது ஒரு செண்ட் இடம் ஆகும். நூறு செண்ட் என்பது ஒரு ஏக்கர் நிலம் ஆகும்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-04-22. பார்க்கப்பட்ட நாள் 2015-06-27.

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சதுர_அடி&oldid=3552815" இலிருந்து மீள்விக்கப்பட்டது