சேது புராணம்

சேது புராணம் என்னும் நூல் நிரம்ப அழகிய தேசிகர் என்பவரால் 16 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. சேது என்பது இராமர் இலங்கைக்குச் செல்லக் கட்டியதாகச் சொல்லப்படும் பாலம். பாலம் கட்டப்பட்ட ஊர் இராமேசுவரம். எனவே சேது புராணம் இராமேசுரம் கோயில் பற்றிய புராணம். [1]

ஆசிரியர் இந்த நூலை ஒரு தலபுராணமாக மட்டும் செய்யாமல், ஒரு காப்பியம் போலவே படைத்துள்ளார். இந்த நூல் இராமநாத மாமுனிவர் என்பவரை வாழ்த்தி முடிகிறது. எனவே இந்த மாமுனிவரின் வேண்டுகோளின்படி இந்நூல் செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

45 சருக்கங்களும், 3438 பாடல்களும் கொண்ட விரிவான நூல் இது.

நூல் அமைதி

தொகு
  • விநாயகர், சபாபதி நடராசர். சரசுவதி ஆகியோருடன் சிவஞானபோதம் சொன்ன மெய்கண்டாருக்கும் வணக்கம் கூறுவது அந்த நூலில் இவருக்கு இருந்த ஈடுபாட்டைப் புலப்படுத்துகிறது. சேதுவில் இராகவன் இராமநாதனை நிறுவிய கதையை இந்நூல் பாடுகிறது.
  • அணையை நளனைக்கொண்டு கட்டுமாறு சமுத்திர-ராசன் ஆணையிட்டானாம்.
  • சேதுவில் இராமன் தன் பெயரில் இலிங்கம் அமைத்தான்.
  • நூலின் இறுதியில் உள்ள சேதுபாலச் சருக்கத்தில் இங்கு நீராடி வழிபடுவோர் அடையும் பலன் கூறப்பட்டுள்ளது.
  • துதிப்பாடல்கள் மிகுதியாக உள்ள இந்த நூலில் அடுக்குப் பாடல்கள் பத்துக்கு மேல் அடுக்கப்பட்ட பாடல்களாக உள்ளன.[2]
  • தேவாரம், திருவாசகம், கம்பராமாயணம் முதலான நூல்களின் சந்தங்களும் கருத்துக்களும் இந்நூலில் பரந்து காணப்படுகின்றன.
  • பாடல் (எடுத்துக்காட்டு) [3]
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
வீடானைப் பிறவானை நினையானை மறவானை
..வேறொன் றோடும்
கூடானைப் பிரியானைக் குணங்குறியொன்(று) இல்லானைக்
..குகப்பி ரானை
நீடானை முகத்தானைப் பயந்தானைத் தொழுதமரர்
..நிரப்பு நீங்கும்
ஆடானை நகருமுடைத்(து) அன்னதமிழ் நாடதன்சீர்
..அளவிற்(று) ஆமோ.

இது தத்துவமும் இயைபுத்தொடை அடுக்கும் கொண்ட பாடல்

கருவிநூல்

தொகு
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம், பதிப்பு 2005

அடிக்குறிப்பு

தொகு
  1. சேதுராயர், சேது சமுத்திரத் திட்டம் என்பனவற்றில் உள்ள சேது இதன் அடிப்படையில் தோன்றியவை.
  2. ‘போற்றி’ என முடியும் இராமநாதன் துதி 10 (சருக்கம் 44), அகத்தியன் துதி 10 (சருக்கம் 11), வணங்குதும் யாமே என்று முனிவர் இராமனைத் துதிக்கும் பாடல் 13 (சருக்கம் 39), அனுமன் இரானைத் துதித்தல் 12 (சருக்கம் 39), அனுமன் சீதையைத் துதித்தல் 10 (சருக்கம் 39)
  3. பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேது_புராணம்&oldid=2782645" இலிருந்து மீள்விக்கப்பட்டது