சேய்வழி அழைத்தல்

சேய்வழி அழைத்தல் (teknonymy) என்பது, பிள்ளைகளின் பெயரைக் கொண்டு பெற்றோரை அழைக்கும் முறை ஆகும். பெரும்பாலும், தந்தையைப் பிள்ளையின் பெயரைக்கொண்டு அழைக்கும் வழக்கம் சில பண்பாடுகளில் உள்ளது. இது தாய்த்தலைமைக் குடும்ப முறையில் எழுந்த ஒரு வழக்கம் எனச் சொல்லப்படுகிறது.

காரணங்கள்

தொகு

தாய்த்தலைமைக் குடும்ப முறையில், ஒரு ஆண்மகன் தனது மனைவியின் வீட்டில் வாழ்வது வழக்கம். சில சமூகங்களில் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழாமல் அவ்வப்போது வந்து போவார்கள். எனவே, இத்தகைய ஆண்கள் குடும்பத்தின் முதன்மை உறுப்பினர்கள் அல்ல. அதேவேளை, அவனுக்குப் பிறக்கும் பிள்ளைகள் அந்த வீட்டுக்கு உரியவர்கள் என்பதால், அக்குடும்பத்தின் முதன்மை உறுப்பினர் ஆகிறார்கள். இதனால், அக்குடும்பத்தினர் குறித்த ஆணை அப்பிள்ளைகளின் தந்தை என்ற வகையிலேயே குறிப்பிட்டு வந்தனர். இதுவே சேய்வழி அழைத்தல் உருவானதற்கான காரணம் ஆகும்.

எடுத்துக்காட்டுகள்

தொகு

தாய்த்தலைமைக் குடும்ப முறையின் எச்சமாக, தென்னிந்தியாவின் சில சமூகத்தினரிடையே இந்த முறை இன்றும் வழக்கில் உள்ளது. உலகின் பிற பகுதிகளிலும் ஆங்காங்கே சேய்வழி அழைத்தல் பயன்பாட்டில் இருப்பதைக் காண முடிகிறது.

அரபு நாடுகளில், "மலிக்" என்னும் பெயர் கொண்ட பிள்ளையின் தந்தையை "அபு மலிக்" (மலிக்கின் தந்தை) என்றும் தாயை "உம் மலிக்" (மலிக்கின் தாய்) என்றும் குறிப்பிடுவர்.
கோக்கோசுத் தீவு வாழும் கோக்கோசு மலாயர்களும் இம்முறையைப் பின்பற்றுவது உண்டு. செய்லா என்ற பெண் குழந்தையின் தந்தையைப் "பாக் செய்லா" என்றும் தாயை "மாக் செய்லா" என்றும் அழைப்பது வழக்கமாக உள்ளது.

உசாத்துணைகள்

தொகு
  • பக்தவச்சல பாரதி, பண்பாட்டு மானிடவியல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2003.
  • பக்தவச்சல பாரதி, மானிடவியல் கோட்பாடுகள், வல்லினம், புதுச்சேரி, 2005.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேய்வழி_அழைத்தல்&oldid=2746820" இலிருந்து மீள்விக்கப்பட்டது