சேர்வராயன் மலை

சேர்வராயன் மலைப் பகுதி தமிழ்நாட்டில் உள்ள சேலம் நகருக்கு அருகில் காணப்படும் மலைத்தொடர்ச்சியாகும். இது கல்வராயன் மலையின் மேற்கில் தனக்கென 400 ச. கி.மீ. பகுதியை கொண்டுள்ளது. வாணியாற்றுப் பள்ளத்தாக்கு கிழக்கு, மேற்கு பகுதியாக இம்மலையைப் பகுக்கின்றது. இம்மலை கடல்மட்டத்தை விட 4000 - 5000 அடி உயரம் கூடுதலாகும். இந்த மலையில் இயற்கையின் ஊற்றாக நிறைய மரங்களும், மூலிகைச் செடிகளும், காட்டு விலங்குகளும் இருக்கின்றன. மலையாட்கள் (மலையாளிகள் - மலை வாழ் பழங்குடிமக்கள்) மற்றும் வெள்ளாளர்கள் மிகுந்துக் காணப்படுகிறார்கள்.[1]. இம்மலையில் காப்பி (Coffee) ,பழவகைகள் விளைவிக்கப்படுகிறது. இம்மலையில் உள்ள பெரிய ஊரான ஏற்காடு நகரம் புகழ்பெற்ற ஒரு சுற்றுலா இடமாகும்.

சேர்வராயன் மலைப்பகுதி
1860 களில் சேர்வராயன் மலைப்பகுதிகளில் எடுக்கப்பட்ட இரு ஆண் மற்றும் பெண் மலையாளிகள் (மலைவாழ் பழங்குடிமக்கள்)

இது பண்டையக்காலத்தில் சேர மன்னன் நிலமாகவும் அவன் ஆண்ட நிலப்பகுதியாகவும் இருந்திருக்கக்கூடும். இதிலிருந்தே சேர்வராயன் என்றப் பெயர் மருவியிருக்கக் கூடும் என சொல்லப்படுகிறது.[சான்று தேவை]

அமைப்பு தொகு

சேர்வராயன் மலைகளானது மல்லாபுரம் மலைத்தொடருக்கும் மஞ்சவாடிக் கணவாய்க்கும் இடையில் பரந்து கிடக்கின்றன. இம்மலைத் தொடர் பதினேழு கல் நீளமும் பன்னிரண்டு கல் அகலமும் உடையது. இதன் பரப்பு 100 சதுர மைல் ஆகும். இத்தொடரின் தென் சரிவு செங்குத்தானது. கடல் மட்டத்திலிருந்து 4000 அடியிலிருந்து 4800 அடிவரை உயரமுடையது. இச்சரிவில் குண்டூர், தப்பக்காடு என்ற சிற்றூர்கள் இருக்கும் இடமும், பழமலை உயர்ந்து செல்லும் இடமுமே சமவெளிகளாம். ஆனால் வடசரிவு செங்குத்தானதல்ல. அது பரந்து சிறிது சிறிதாகத் தாழ்ந்து செல்லுகிறது.

இம்மலைத் தொடரானது நடுவில் ஓடும் வாணியாற்றின் பள்ளத்தாக்கால் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்படுகிறது. இவ்விரண்டு பிரிவுகளும் அமைப்பில் வேறுபடுகின்றன. கிழக்குப்பகுதி மழை நீரால் அரிக்கப்பட்ட் ஆற்றுப்படுகைகளைக் கொண்டது. மேற்குப்பகுதி பருத்து உயர்ந்த மலைகளைக் கொண்டது. கிழக்குப் பகுதியில் தலைச்சோலை, மாறமங்கலம் என்ற இரண்டு பீடபூமிகள் உள்ளன. அப்பீடபூமிகளை இணைக்கும் இடைநிலத்தில் கோட்டன்சேது என்ற சிற்றூர் அமைந்துள்ளது. மேற்குப் பகுதியை மேலும் இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். ஒன்று வாணியாற்றிற்கும் காடையாம்பட்டி ஆற்றிற்கும் இடைப்பட்ட பகுதி. மற்றாெரு பகுதி ஒழுங்கற்ற பீடபூமி. இப்பகுதியில்தான் ஏற்காடு அமைந்துள்ளது. இப்பீடபூமி வடக்கிலுள்ள சந்நியாசிமலை என்று கூறப்படும் டஃப் மலை (Duffs Hill-5231') யோடு முடிவுறுகின்றது. இதற்கு மேற்குப் பக்கத்தில் தாழ்வான மற்றாெரு மலை தலை நீட்டிக்கொண்டிருக்கிறது. அம்மலையின் மேலுள்ள பீடபூமி, கடல் மட்டத்திலிருந்து 2800-லிருந்து 2900 அடி உயரமுடையது. அதன்மீது தான் மலையாளிகள் (மைப் பழங்குடியினர்) வாழும் கொண்டையனூர், சோனப்பாடி என்ற ஊர்கள் உள்ளன.

மற்றாெரு பகுதி பல மலைச்சிகரங்களை இணைக்கும் தொடர் ஒன்றைக் கொண்டு விளங்குகிறது. அத்தொடரின் மேற்கில் நாகலூர் பீடபூமியும், கிழக்கில் பச்சை மலைப் (Green Hill) பீடபூமியும் உள்ளன. இத் தொடருக்கு அருகில் குறிப்பிடத்தக்க வேறுபல சிகரங்களும் உள்ளன. அவை சேர்வராயன் சிகரம் (5,342') பிளேன் ஃபில் சிகரம் (5,410'), பாலமடி சிகரம் (5,370') காவேரி சிகரம் (5,086') என்பன. புலிவாரை சிகரத்தை (4,576') நோக்கி இடதுபுறம் செல்லும் தொடரும், வாணியாற்றின் பள்ளத்தாக்கை நோக்கி வலதுபுறம் செல்லும் தொடரும் காவேரி சிகரத்தில் இரண்டாகப் பிரிக்கப்படுகின்றன.

நாகலூர் பீடபூமியின் எல்லாப் பகுதிகளும் அநேகமாகக் கடல் மட்டத்திலிருந்து 4000 அடிக்குக் குறைந்தே இருகின்றன. இப்பீடபூமியிலிருந்து நோக்கினால் வேப்பாடிப் பள்ளத்தாக்கு நன்றாகத் தென்படும். வேப்பாடிப் பள்ளத்தாக்கிற்கு மேற்கில் ஏரிமலைத் தொடர் உள்ளது. பச்சைமலைப் பீடபூமியிலிருந்து பார்ப்போருக்கு வாணியாற்றின் பள்ளத்தாக்கும், ஹாதார்ன் சிகரம் (Hawthorne cliff—4,899') தேன் சிகரம் (Honey Rocks 4,533) முதலிய அழகிய உச்சிகளும் தென்படும். தேன் சிகரத்திற்கு எதிரில் ஒருகல் தொலைவில், கடல் மட்டத்திலிருந்து 2,490' உயரத்தில் வாணியாறு இழிந்து செல்கிறது. இந்த மலைப்பகுதிகளில் தொப்பூர் ஆறு, சரபங்க, வாணியாறு ஆகியவை தோன்றுகின்றன.[2]

கால நிலை தொகு

சேர்வராயன் மலையின் மிதமான தட்ப வெப்பம் நிலவுகிறது. சேர்வராயன் மலைகளில் அதிகபட்ச அளவாக 82° வெப்பமும் குறைந்தபடச அளவாக 60 1/2° இருந்துள்ளது. அநேகமாகக் கோடைக் காலங்களில் 80° க்கு மேல் வெப்பநிலை இருப்பதில்லை. அநேகமாகக் கோடை நாட்களில் (ஏப்ரல், மே) 77° தான் இருப்பது வழக்கம். குளிர் காலங்களில் (திசம்பர்) வெப்ப நிலை 67° தான் இருப்பது வழக்கம். எப்பொழுதாவது ஓரிரு நாட்களில் வெப்பநிலை 64° க்கு வருவதுண்டு. சேர்வராயன் மலைகளின் மீது ஆண்டுக்குச் சராசரி 41 அங்குல மழை பெய்கிறது.

வளங்கள் தொகு

கி. பி. 1886-ஆம் ஆண்டு அளவையின்படி சேர்வராயன் மலைக்காடுகள் 113 சதுரமைல் பரப்புள்ளதாக இருந்தது. சேர்வராயன் மலைகளில் ஜெரேனியம் பச்சோலி, பெப்பெர் மெண்ட், யூக்கலிப்டஸ், சிற்றடோரா என்ற மணச் செடிகள் விளைகின்றன. இந்தியாவிலேயே இச்செடிகள் வளர்வதற்குரிய தட்ப வெப்பநிலை இங்கு தான் ஏற்றதாக உள்ளது என்று கூறப்படுகிறது. இந்த மலைப்பகுதியில் சுண்ணாம்புக்கல், பாக்சைட் போன்ற கனிமங்கள் கிடைக்கின்றன.

சேர்வராயன் மலைகளின் அடிவார்களில் குறைந்த அளவு கடமான்கள் காணப்படுகின்றன. மலைப்பகுதிகளில் கரடி, சிறுத்தை நாகப் பாம்பு, கட்டுவிரியன், பச்சைப் பாம்பு, குறுமலைப் பாம்பு[2] சேர்வராயன் மலை மண் பாம்பு[3] போன்ற உயிரினங்கள் காணப்படுகின்றன.

பழங்குடிகள் தொகு

சேர்வராயன் மலைகளில் வாழும் பழங்குடிகள் மலையாளிகள் எனப்படுகின்றனர். இவர்கள் மொழி கொச்சைத் தமிழ். ‘கவுண்டர்’ என்ற சாதிப் பெயரைத் தங்கள் பெயருடன் சேர்த்து வழங்குகின்றனர். இவர்கள் தங்களுக்குச் சொந்தமான நிலங்களில் பயிர்த் தொழில் செய்தும், காபித் தோட்டங்களில் கூலிகளாகப் பணி செய்தும் வாழ்கின்றனர். சேர்வராயன் மலை உச்சியில் இவர்களுடைய குல தெய்வமான சேர்வராயன் கோயில் உள்ளது.[2]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேர்வராயன்_மலை&oldid=3678108" இருந்து மீள்விக்கப்பட்டது