சைனாடவுன், சிங்கப்பூர்

சிங்கப்பூரில் சைனாடவுன் என்பது, சீன மக்கள் செறிந்து வாழ்வதுடன், சீனப் பண்பாட்டுக் கூறுகளைச் சிறப்பாகக் கொண்டதுமான ஒரு குடியிருப்புப் பகுதி. இது ஊட்ரம் என்னும் பெரிய பிரிவுக்குள் அடங்குகிறது.

சைனாடவுன், சிங்கப்பூர்
பகோடா சாலையில் உள்ள சைனாடவுன் மரபுரிமை மையம். சிங்கப்பூரின் தொடக்க முன்னோடிகளின் நினைவுகளைப் பாதுகாக்கும் வகையில் திருத்தியமைக்கப்பட்டது.
சீனப் பெயர்
சீன எழுத்துமுறை
எளிய சீனம்
சொல் விளக்கம் "ox-cart water"
மலாய்ப் பெயர்
மலாய் Kreta Ayer
தமிழ்ப் பெயர்
தமிழ் சைனா டவுன்

சிங்கப்பூரின் பெரும்பான்மை இனத்தவராகச் சீன மக்களே இருப்பதால், முன்னரைப்போல் சைனாடவுனை ஒரு இனக்குடியிருப்புப் பகுதியாகக் கொள்ள முடியாது. சைனாடவுன் என்னும் பெயர் சிங்கப்பூர் பிரித்தானியரின் ஆட்சியில் இருந்தபோது அவர்களால் வழங்கப்பட்டது. சிங்கப்பூரர்கள் தொடர்ந்தும் அப்பெயரையே வழங்கி வருகின்றனர். இப்பகுதி இன்றும் அதன் வரலாறு மற்றும் பண்பாட்டு முக்கியத்துவத்தைப் பேணி வருகின்றது. இதன் பெரும் பகுதி தேசிய மரபுரிமைக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், நகர மீள்வளர்ச்சி அதிகாரசபையினால் பேணிக் காக்கப்படுவதற்காகக் குறித்து ஒதுக்கப்பட்டுள்ளது.

பகுதிகள்

தொகு

சிங்கப்பூரின் சைனாடவுன் பல பகுதிகளை உள்ளடக்கியது. கிரேத்தா ஆயர், தெலோக் ஆயர், தஞ்சோங் பாகர், புக்கிட் பாசோ, ஆன் சியாங் ஹில் என்பவை இவை.[1]

  • கிரேத்தா ஆயர் - நீர் வண்டி என்னும் பொருள் தரும் பெயர் கொண்ட கிரேத்தா ஆயர், சைனாடவுனின் இதயப் பகுதியாகக் கருதப்படுகிறது. சைனாடவுன் மரபுரிமை மையம், சைனாடவுன் உணவுத் தெரு, சைனாடவுன் இரவுச் சந்தை, கிரேத்தா ஆயர் மீன் சந்தை[2] என்பவற்றைக் கொண்டுள்ள இப்பகுதி, பெயர்பெற்ற சுற்றுலாப் பகுதியும், உள்ளூர் உணவுகளுக்காக விரும்பப்படும் பகுதியும் ஆகும்.
  • தெலோக் ஆயர் - சைனாடவுன் குடியேற்றப் பகுதியின் தொடக்க குவிமையம் இப்பகுதியே. சைனாடவுன் தொடங்கிய காலத்தில் இருந்தே இப்பகுதியில் பல சீனக் கோயில்களும், மசூதிகளும் இருந்துவருகின்றன. அண்மைக் காலத்தில் உணவுவிடுதிகளும், மதுச்சாலைகளும் தேலோக் ஆயர் தெருக்களை அண்டி உருவாகியுள்ளன.
  • தஞ்சோங் பாகர் - ஒரு காலத்தில் ரிக்சா வண்டி இழுப்பவர்களின் மையமாக இருந்த இவ்விடம், தற்போது பெருமளவு திருமண ஆடைகளுக்கான கடைகளைக் கொண்ட இடமாக உள்ளது. இரண்டாம் உலகப் போருக்கு முந்திய, பாதுகாக்கப்பட்ட கடைப்பகுதிகள் இங்கே உள்ளன. சிங்கப்பூரின் மிக உயரமான, வீடமைப்பு மற்றும் வளர்ச்சிச் சபையின் தொடர்மாடிக் குடியிருப்பும் இப்பகுதியிலேயே உள்ளது.
  • புக்கிட் பாசோ - இது வரலாற்று, மற்றும் தற்கால சீனப் பண்பாட்டுச் சங்கங்களின் இருப்பிடமாக உள்ளது. இப்பகுதியில் சிறிய விடுதிகளும், பன்னாட்டு உணவுச் சாலைகளும் உருவாகியுள்ளன.
  • ஆன் சியாங் ஹில் - 1800களில், சீன அரிவு ஆலை உரிமையாளர் ஒருவர் இவ்விடத்தை விலைக்கு வாங்கித் தனது இருப்பிடமாகப் பயன்படுத்தி வந்தார். அவரின் பெயரைத் தழுவியே இவ்விடத்துக்குப் தற்போதைய பெயர் ஏற்பட்டது. இப்பகுதியில் பல ஐரோப்பிய உணவுச்சாலைகள் உள்ளன. இதனால், அருகில் உள்ள மைய வணிகப் பகுதியில் பணிபுரியும் வெளிநாட்டவர் இப்பகுதியில் விரும்பிக் கூடுவர்.

மேற்கோள்கள்

தொகு
  1. Overview of Greater Chinatown
  2. Goldberg, Lina (24 February 2013). "10 of the world's best fresh markets". CNN Travel. பார்க்கப்பட்ட நாள் 24 February 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைனாடவுன்,_சிங்கப்பூர்&oldid=2247425" இலிருந்து மீள்விக்கப்பட்டது