சைவ நாற்பாதங்கள்
சைவ நாற்பாதங்கள் என்பது சைவ மக்கள் பிறவித் துன்பம் நீங்கி, பிறவாமையாகிய பேரின்பத்தை வேண்டி, இறைவனின் பாதங்களை அடைவதற்கு அனுசரிக்க வேண்டிய படிமுறைகளாகும். இதன் மறுபெயர்களாக சைவ நன்னெறிகள், சைவ நாற்படிகள், சிவ புண்ணியங்கள், நால்வகை நெறிகள் என்பன அறியப்படுகின்றன. [1]
சைவ நாற்பதங்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
- சரியை - தாதமார்க்கம் (தாச மார்க்கம்)
- கிரியை - சற்புத்திர மார்க்கம்
- யோகம் - சகமார்க்கம்
- ஞானம் - சன்மார்க்கம் [2]
சரியை
தொகுசரியை சைவ நாற்பாதங்களில் முதலாவது படியாகக் கூறப்படுவதாகும். அன்பின் துணையோடு உடம்பினால் செய்யும் இறைபணிகள் அனைத்தும் சரியை நெறியாகும். [3] இலகுவில் செய்யக்கூடிய ஆரம்ப முயற்சியான இதற்குத் தூய தெய்வ பக்தியில் இறையம்சமும் துணை நிற்கவேண்டும்.
ஆலயங்களில் இறைவனை வழிபடல், வழிபாட்டின் பொருட்டுத் திருக்கோயிலைக் கூட்டுதல், மெழுகுதல், கழுவுதல், திருவிளக்கு ஏற்றல், திருநந்தவனம் அமைத்தல், பூ எடுத்தல், பூமாலை தொடுத்தல், இறைவன் புகழ் பாடுதல், சிவனடியார்களைக் கண்டால் அவர்களை வணங்கி அவர்களுக்குச் சேவை செய்தல், உழவாரப்பணி செய்தல், பழங்கோயில்களை வேண்டும் அளவில் புதுப்பித்தல், புராணபடனம் செய்தல், கேட்டல், புராணக் கதை படித்தல், யாத்திரை செய்தல் ஆகியவையும் சரியையில் அடங்கும்.
- சரியையிற் சரியை - சரியை நெறியில் திருக்கோயிலில் திருவிளக்கிடுதல் முதலான தொண்டுகள்.
- சரியையிற் கிரியை - ஒருமூர்த்தியை வழிபடல்.
- சரியையில் ஞானம் - சரியை வழிபாட்டால் அனுபவம் வாய்க்கப் பெறுவது.
திருநாவுக்கரசர் சரியை நெறி நின்றே இறைவனை வழிபாடு செய்தார்.
கிரியை
தொகுகிரியை சைவ நாற்பாதங்களில் இரண்டாவது படியாகக் கூறப்படுவதாகும். மந்திர தந்திரங்களைக் குரு மூலமாக அறிந்து சமய, விஷேட, நிர்வாண தீட்சைகளைப் பெற்றோர் மேற்கொள்ளும் வழிபாட்டு முறை கிரியைநெறியாகும். தம்பொருட்டு தம்மளவில் செய்யும் ஆன்மார்த்த பூசையும், பிறர் பொருட்டு ஆலயங்களில் செய்யப்படும் பரார்த்த பூசையும் இந்நெறியுள் அடங்கும். மந்திரங்களை ஓதுவது கிரியை என்று முரு பழ இரத்தினம் செட்டியார் குறிப்பிடுகிறார் [4]
திருமலர்கள், திருமஞ்சனம் முதலியவற்றால் ஒப்பனை, தூபம், தீபம், உபசாரங்களை ஏற்படுத்தல், வலம்செய்தல், பணிதல் தோத்திரம் என்பவற்றைச் செய்து வேண்டி நிற்றல்(பிரார்த்தனை) என்னும் இவ்வகைத் தொண்டே கிரியையாகும்.
- கிரியையிற் சரியை - பூசைப் பொருட்களைத் திரட்டல்.
- கிரியையிற் கிரியை - புறத்தில் பூசித்தல்.
- கிரியையில் யோகம் - அகத்தில் பூசித்தல்.
- கிரியையில் ஞானம் - மேற்கூறிய கிரியைகளால் ஓர் அனுபவம் வாய்க்கப் பெறுதல்.
திருஞானசம்பந்தர் கிரியை நெறியில் நின்றே இறைவனை வழிபாடு செய்தார்.
யோகம்
தொகுயோகம் சைவ நாற்பாதங்களில் மூன்றாவது படியாகக் கூறப்படுவதாகும். சரியை, கிரியை ஆகிய நெறிகளை விட மேலானதாக இந்நெறி சாத்திர நூல்களில் கூறப்படுகின்றது. இதற்கு இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய அட்டாங்க யோக உறுப்புக்கள் உள்ளன. இவ்வட்டாங்க யோகங்களிலும் பயிற்சி பெற்று படிப்படியாகத் தேறியவரே யோக நெறியை அனுசரிக்க முடியும். இதனை யோகியரிடம் பயின்ற திடசித்த முடையவர்களே அனுட்டித்து ஈடேற முடியும்.
- யோகத்திற் சரியை - இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம்.
- யோகத்திற் கிரியை - பிரத்தியாகாரம், தாரணை.
- யோகத்தில் ஞானம் - சமாதி.
சுந்தரமூர்த்தி நாயனார் யோக நெறி நின்றே இறைவனை வழிபாடு செய்தார்.
ஞானம்
தொகுஞானம் சைவ நாற்பாதங்களில் நாலாவது படியாகக் கூறப்படுவதாகும். ஞானமானது ஆன்மாவாகிய தன்னை சிவார்ப்பதிதஞ் செய்தல். அதாவது சிவனை உருவம், அருவம், அருவுருவம் ஆகிய மூன்று திருமேனிகளையும் கடந்து சச்சிதானந்தப் பிழம்பாய் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை அறிவால் வழிபடுதலாகும். கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என்னும் நான்கு அங்கங்கள் இந்நெறிக்கு உண்டு. முன்னைய மூன்று நெறிகளிலும் நின்று பக்குவம் பெற்ற சாதகனை இறைவன் குரு வடிவிலே வந்து தீட்சை உபதேசம் செய்து ஞானத்தை அளித்து முத்தியை வழங்குவார்.
- ஞானத்திற் சரியை - ஞானநூல்களைக் கேட்டல்.
- ஞானத்திற் கிரியை - ஞானநூல்களைச் சிந்தித்தல்.
- ஞானத்தில் யோகம் - ஞானநூல்களைத் தெளிதல்.
- ஞானத்தில் ஞானம் - ஞான நிட்டை கூடல்.
மாணிக்கவாசகர் ஞான நெறி நின்றே இறைவனை வழிபாடு செய்தார்.
பொது விளக்கம்
தொகுநாம் மனிதப் பிறவி எய்தியதன் நோக்கம், இறைவன் நமக்குக் கொடுத்தருளிய உடம்பு, அறிகருவிகள், உலகம், நுகர்வுப் பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டு, இறைபணி நின்று, முத்தி அடைவதே ஆகும். முத்தியடைவதற்கு மெய்யுணர்வாகிய ஞானத்தைப் பெறுதல் வேண்டும். அந்த ஞானத்தைப் பெறுவதற்குச் சாதனமாகச் சரியை, கிரியை, யோகம் என்பவற்றைச் சைவாகமங்கள் எடுத்துக் கூறுகின்றன. சிவாகமங்கள் இருபத்தெட்டும் சரியா பாதம், கிரியாபாதம், யோகபாதம், ஞானபாதம் எனத் தனித்தனியே நான்கு பாதங்களை உடையன. சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கும் நாம் இறைவனை அடைவதற்குரிய சாதனங்களாதலால் இவை சைவ சாதனங்கள் என்றுஞ் சொல்லப்படும். நம் புற வாழ்வையும் அக வாழ்வையும் நெறிப்படுத்தி, ஈற்றில் வீடுபேற்றைத் தரும் சாதனங்களே இவை. ஆகவே இவற்றிடையே ஏற்றத்தாழ்வு கூறுமுடியாது.
முத்தியில் நாட்டமுடையவர்கள் இவற்றுள் எதனைப் பின்பற்றி ஒழுகினாலும் அது முடிவிலே ஞானத்துக்கு இட்டுச் சென்று இறைவனோடு இரண்டறக் கலத்தலாகிய பரமுத்தியை நல்கியே விடும். ஞானத்தை நாம் ஒரு கனிக்கு ஒப்பிட்டால், சரியையை அரும்பு என்றும், கிரியையை மலர் என்றும், யோகத்தைக் காய் என்றும் கூறலாம். அரும்பாகத் தோன்றியது, இடையூறு ஒன்றுமில்லாது விட்டால் அது படிப்படியாக வளர்ச்சியடைந்து கனியாக மறுவது இயல்பு. அது போலவே சரியை நெறியைக் கடைப்பிடிப்பவர்கள், அவமரணம் போன்ற இடையூறுகள் நேராவிட்டால் படிப்படியாக பக்குவம் முதிர்ந்து, ஞானத்தை அடைந்து முடிவிலே மேலான வீடுபேற்றை அடைவது உறுதி.
இவை தாச மார்க்கம், சற்புத்திர மார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம் என்னும் நான்கு மார்க்கங்களாக அடியார்களால் அனுசரிக்கப்பட்டன. இவை ஒவ்வொன்றும் சரியையில் சரியை, சரியையில் கிரியை, சரியையில் யோகம், சரியையில் ஞானம் என நான்காய் விரிவடைந்து பதினாறுபடிகளாய் அமையும். இப்படிகள் ஒவ்வொன்றும் உபாய மார்க்கம், உண்மை மார்க்கம் என இவ்விரண்டாக நோக்க முப்பத்திரண்டாகக் கொள்ளப்படுகிறது.
உபாய மார்க்கம் என்பது உலக வாழ்வில் நின்றபடி இறையருளை வேண்டி ஏதாவது வழிமுறையைப் பின்பற்றி ஒழுகுதலாகும். உண்மை மார்க்கம் என்பது உலகப்பற்றை மெல்ல மெல்ல விட்டவர்கள் அம்மார்க்கங்களிலேயே தமக்கேற்ற ஒரு வழியைப் பின்பற்றி இறையருளை நாடி நின்று வேறு பயன் கருதாது ஒழுகுதலாகும். இவ்வாறான மார்க்கங்களில் நின்று ஒழுகிய பெரியார் சரிதைகளைப் பெரியபுராணம் குறிப்பிடுகின்றது.
மேற்கோள்களும் குறிப்புகளும்
தொகு- ↑ சைவ சமயம் (நூல்) கொழும்பு விவேகாநந்த சபை வெளியீடு பக்கம் 43
- ↑ :சன்மார்க்கம் சகமார்க்கம் சற்புத்திர மார்க்கம் :தாதமார்க்கம் மென்றுஞ்சங் கரனை யடையும் :நன்மார்க்கம் நாலவைதாம் ஞான யோகம் :நற்கிரியா சரியையென நவிற்றுவதும் செய்வர் - சிவஞானசித்தியார்
- ↑ உருவத்தை உடலால் வணங்குவது சரியை - முரு பழ இரத்தினம் செட்டியார் திருநாவுக்கரசர் தேவாரத்தில் சைவ சித்தாந்தக் கருத்துகள் - ச.சாம்பசிவானார்
- ↑ திருநாவுக்கரசர் தேவாரத்தில் சைவ சித்தாந்தக் கருத்துகள் - ச.சாம்பசிவானார்