சொக்கநாத வெண்பா

சொக்கநாத வெண்பா என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குருஞான சம்பந்தரால் இயற்றப்பட்டது.

இந்த நூலில் 100 வெண்பாப் பாடல்கள் உள்ளன. இவை ‘சொக்கநாதா’ என முடிகின்றன. அதனால் இந்த நூலுக்குச் சொக்கநாத வெண்பா என்னும் பெயர் உண்டாயிற்று. மதுரைச் சொக்கந்தரைப் போற்றி இவை பாடப்பட்டவை. இந்த நூலில் உள்ள பாடல்கள் பொருள் தொடர்பு இல்லாமல் இருப்பதால் பல்வேறு காலகட்டங்களில் இவரால் பாடப்பட்டதாக அறிஞர்கள் கருதுகின்றனர். பாடல்களில் அருணகிரிநாதர் செய்த பேசா அனுபூதி, சிவஞான சித்தியார் முதலான நூல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

கருவிநூலாகத் தரப்பட்டுள்ள நூலில் இவரது பாடல்கள் 9 இடம்பெற்றுள்ளன. அவற்றில் 3 பாடல்கள் மட்டும் இங்கு எடுத்துக்காட்டாகத் தரப்படுகின்றன. [1]

அன்பர்க்கு அருள் புரிவது அல்லாமல் தேவரீர்
வன்பர்க்கு அருள் புரிய மாட்டீரேல் – உம்பர் தொழும்
நல்லார் புகழ் மதுரை நாதரே தேவரீர்க்கு
எல்லாமும் வல்ல சித்தர் ஏன். [2] [3]

வாக்கில் உரை பொய்யே மனம் நினைப்பதும் கவடே
ஆக்கை தினம் செய்வது அகிர்த்தியமே [4] – நோக்கில்
திரிவிதமும் [5] இப்படி நீ செய்வித்தால் முத்தி
தரு விதம் என் சொக்கநாதா [6]

பேரன்பன் அல்லன் பிழை செய்யான் தான் அல்லன்
ஓர் அன்பும் இல்லா உலுத்தனேன் – பேரன்பு
காட்டி எனைக் காட்டி உனைக் காட்டி இன்பத் தொட்டிலிலே
ஆட்டி வளர் சொக்கநாதா [7]

கருவிநூல்

தொகு
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005

அடிக்குறிப்பு

தொகு
  1. அவை பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளன
  2. நூலில் பாடல் எண் 79
  3. இது போல் சொக்கநாதா என முடியாமல் இந்நூலிலுள்ள 4 பாடல்களைப் பிற்சேர்க்கை எனச் சிலர் குறிப்பிடுகின்றனர்.
  4. கீர்த்தியம் என்பதன் எதிர்சொல் அகீர்த்தியம் < அகிர்த்தியம். செய்யுளுக்காக மாற்றப்பட்ட குறுக்கல் விகாரம்
  5. மாறுபட்ட தோற்றம்
  6. நூலில் பாடல் எண் 41
  7. நூலில் பாடல் எண் 68
"https://ta.wikipedia.org/w/index.php?title=சொக்கநாத_வெண்பா&oldid=2761460" இலிருந்து மீள்விக்கப்பட்டது