சொட்டு நீர்ப்பாசனம்

(சொட்டுநீர் பாசனம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சொட்டு நீர்ப் பாசனம் அல்லது நுண்ணீர்ப் பாசனம் (Drip irrigation system) என்பது முதன்மை குழாய், துணைக் குழாய்கள், மற்றும் பக்கவாட்டுக் குழாய்கள் ஆகிய அமைப்புகள் வாயிலாக பயிர்களுக்கு தேவையான நீரை, துளித்துளியாக மண்ணின் மேற்பரப்பிலோ அல்லது, பயிர்களின் வேர்ப்பகுதியில் நேரடியாகவோ வழங்கும் ஒரு மேம்பட்ட நீர்ப்பராமரிப்பு முறையாகும். ஓவ்வொரு விடுகுழாய் அல்லது உமிழி மற்றும் புழைவாய், பயிர்களுக்கு தேவையான நீர், ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சிக்குத் தேவைப்படும் பொருள்களை, பயிர்களின் வேர்ப் பகுதியில், நேராக அளந்து அளிக்கிறது. நீராதாரம் குறைந்து வந்தாலும், சாகுபடி நிலப்பரப்பு குறைந்து வந்தாலும் வாழும் மக்களுக்கு உணவு அளிக்க விளைச்சல் (உற்பத்தித்) திறனை அதிகரித்து தரமான உணவு விளைவிப்பைப் பெருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கிடைக்கும் நீரைக் கொண்டு வேளாண்மையை நீடித்த நிலையான வருவாய் பெற வேண்டிய அவசியமான நிலையில் பயிர்த்தொழிலாளர்கள் (உழவர்கள்) உள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு துளி நீரையும் வீணாக்காது உணவு உற்பத்திக்குப் பயன்படுத்த உருவாக்கப்பட்ட திட்டமே நுண்ணீர்ப் பாசனத் திட்டமாகும் (சொட்டு நீர்ப் பாசனத் திட்டம்). உமிழி வழியாக நீர் மற்றும் ஊட்டச்சத்தானது, வேர் பகுதியில் இருக்கும் மண்ணில், புவி ஈர்ப்பு மற்றும் நுண்புழை ஆற்றல் மூலம் உள்ளே செல்கிறது. நீர் மற்றும் ஊட்டச்சத்தை எடுத்துக்கொண்ட உடனேயே, பயிர் நீர் நெருக்கடியிலிருந்து தவிர்க்கப்பட்டு, தரம் மேம்பட்டு போதுமான வளர்ச்சி மற்றும் அதிக மகசூல் கிடைக்க வழிவகுக்கிறது.

சொட்டு நீர்ப் பாசன முறையின் வடிவமைப்பு. நீரேற்றி, முதன்மைக்குழாய், விடுகுழாய் அல்லது உமிழி, வடிகட்டிகள், ஒருபோக்கி (valve) முதலிய அமைப்புகளும் படத்தில் காட்டப்பட்டுள்ளன
சொட்டுநீர் உமிழி

சொட்டு நீர்ப் பாசனத்தின் நன்மைகள்

தொகு
  • குறைந்த நீரைக் கொண்டு அதிகப் பரப்பில் பயிர் செய்யலாம்.
  • 75% நீரை இப்பாசனத்தின் மூலம் சேமிக்கலாம்.
  • சாகுபடி செலவு குறைந்து அதிக வருமானம் கிடைக்கும்.
  • பயிர் திடமாகவும் ஆரோக்கியமாகவும் வளர்வதோடு, வேகமாக முதிர்ச்சி அடையும்
  • தண்ணீரில் கரையும் உரங்களை நேரடியாகப் பயிருக்கு வேர்ப் பகுதியிலேயே வழங்கலாம்.
  • களை எடுக்க வேண்டியதில்லை.
  • ஆட்களுக்காக ஆகும் செலவும் குறைக்கப்படும்.
  • தரமான விளை பொருள்களுடன் அதிக விளைச்சல் கிடைக்கும்.

ஒரு அறிமுகம்

தொகு
  • சொட்டுநீர்ப்பாசனம் இன்றைய ஆப்கானிஸ்தானில் ஆராய்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு இஸ்ரேல் தேசத்தில் தொடங்கப்பட்டது.
  • தண்ணீரின் அளவு குறைவாக உள்ள இடங்களுக்கு சொட்டு நீர்ப் பாசனம் ஏற்ற முறையாகும்.
  • இதில் தண்ணீரானது மெதுவாகவும் குறைந்த அழுத்தத்திலும் செடியின் வேர்ப் பகுதியில் நேரடியாக அளிக்கப்படும்.
  • இவ்வாறு தண்ணீர் செடிகளுக்கு, பிளாஸ்டிக் குழாய்கள்மூலம் செலுத்தப்படுகிறது.
  • இந்த முறையில் பயிருக்கு செலுத்தப்படும் தண்ணீருடன் சேர்த்து செடியின் வளர்ச்சிக்குத் தேவைப்படும் உரங்களையும் அளிக்கும் முறை ஃபெர்ட்டிகேஷன் (Fertigation) என்று சொல்லப்படும்.

சொட்டு நீர்ப் பாசன முறைகள்

தொகு

சொட்டு நீர்ப்பாசனம் இரண்டு விதமாக மேற்கொள்ளப்படுகிறது. 1. வெளிப்புறமாக குழாய்களைப் பதிப்பது 2. நிலத்துக்குக் கீழ் உட்புறமாக குழாய்களைப் பதிப்பது

இதில் இரண்டாவதாக சொல்லப்பட்ட முறை 'கீழ்மட்ட சொட்டு நீர்ப்பாசனம்' (Sub surface Drip Irrigation, SDI) எனப்படும். இம்முறை மூலம், களை எடுக்கும் போதும், அறுவடை செய்யும் போதும் குழாய்களுக்கு எந்த சேதமும் இல்லாமல் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

சொட்டு நீர்ப்பாசனக் காரணிகள்

தொகு

நில அமைப்பு

தொகு

தண்ணீரை தேக்கி வைக்க முடியாத மணல் பரப்புகளில் நீர்ப் பாசனம் அதிக அளவில் தேவைப்படும். அப்படிப்பட்ட நிலங்களில் சொட்டு நீர்ப் பாசனம் பேருதவியாக அமையும். மேலும் மலைச்சார்ந்த பகுதிகளில் தண்ணீர் வழிந்தோடுவது அதிகமாக இருப்பதனால், அப்படியான இடங்களில் சொட்டு நீர்ப் பாசனத்தின் மூலம் நீர் குறைவாகவும், கூடிய ஆற்றலுடனும் பயன்படுத்தப்படுவதனால் நீர் வீணாவது குறைக்கப்படும்.

காற்று வீச்சு

தொகு

அதிக வேகத்தில் காற்று வீசும் பொழுது தெளிப்பு நீர்ப் பாசனத்தின் (Sprinkler irrigation) மூலம் தண்ணீர் செலுத்துவது முடியாத காரியம். அப்படிப்பட்ட இடங்களில் சொட்டு நீர்ப் பாசனம் நீரை அதிக வினைத்திறனுடன் பயன்படுத்த மிகவும் உதவியாக இருக்கும்.

தண்ணீரின் அளவு

தொகு

கிடைக்கும் தண்ணீரின் அளவு குறைவாக உள்ள இடங்களில் சொட்டு நீர்ப் பாசனம் உதவியாக இருக்கும்.

தண்ணீரின் தரம்

தொகு

பயிருக்குச் செலுத்தப்படும் தண்ணீரில் உப்புத்தன்மை அதிகமாக உள்ளபோது, சொட்டு நீர்ப் பாசனம் மூலம் நீர் செலுத்தினால், தண்ணீரில் உப்பு தேங்கி பயிரை தாக்குவது குறைக்கப்படும்.

விளைவிக்கப்படும் பயிர்

தொகு

பொதுவாகவே சொட்டு நீர்ப் பாசனம் செய்ய ஆரம்பச்செலவு அதிமாக ஆவதால் இது பெரும்பாலும் பழ மரங்கள் உள்ள தோட்டங்கள் போன்ற அதிக வருவாய் ஈட்டும் பயிர் நிலங்களில் மட்டுமே உபயோகிக்கப் படுகிறது. இப்படிப்பட்ட சூழல்கள் நிலவக்கூடிய இடங்களில் சொட்டு நீர்ப் பாசனம் அதற்கே உரிய சிறப்பம்சங்கள் மூலம் முன்னிலையில் இருக்கிறது.

சொட்டு நீர்ப் பாசனத்தில் உபயோகிக்கப்படும் உபகரணங்கள்

தொகு

மேல் நிலைத் தொட்டி

தொகு
  • மேல் நிலைத் தொட்டி முக்கிய பகுதியில் இருக்கும்.

குழாய்கள்

தொகு
  • குழாய்ப் பகுதிகளில் 50, 75 மி.மீ. அளவிலான பி.வி.சி. குழாய்கள் அல்லது எச்.டி.பி,இ. குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன
  • துணைக் குழாய்ப் பகுதிகளில் 45, 50 மி.மீ. குழாய்கள் பயன்படுகின்றன.
  • பக்கவாட்டில் 12, 16 மி.மீ. அளவிலான குழாய்கள் உபயோகிக்கப்படுகின்றன.

சொட்டு குழாய்கள்

தொகு
  • 2, 4, 8 எல்.பி.ஹெச். போன்ற அழுத்தமுடைய குழாய்கள் ஏற்றவையாகும்.

வடிக்கும் பகுதி

தொகு

• பெரிய மண் துகள்களை வடிக்க மணல் வடிப்பான் பயன்படுத்தப்படுகிறது. • நுண்ணிய துகள்களை வடிக்க சல்லடை வடிப்பான் (120 மைக்ரான்) பயன்படுத்தப்படுகிறது

உர பகுதி

தொகு
  • கரைத்த உரங்கள் மற்றும் நீர்ம உரங்கள் அளிப்பதற்கு உரத்தொட்டி உபயோகப்படுத்தப்படுகிறது.
  • இதன் அழுத்தத்தை 0.5 முதல் 2.5 வரை மாற்றிக்கொள்ளலாம்,

பின்நோக்கிய நீரோட்டத்தை கட்டுப்படுத்தும் கருவி

தொகு
  • இது குழாய்களில் செலுத்தப்பட்ட நீர் பின்னோக்கி செல்லுவதைத் தடுத்து நிறுத்துகிறது. இது மேல்நிலைத் தொட்டியருகே அமைந்திருக்கும்.

அழுத்த மானி

தொகு

• இது செலுத்தப்படும் தண்ணீரின் அழுத்தத்தை மாற்றிக்கொள்ள உபயோகமாகிறது.

நன்மை, தீமைகள்

தொகு

சொட்டு நீர்ப் பாசனத்தின் பயன்கள்

தொகு
  • உரங்கள் வீணாக்கப்படுவது குறைவு
  • தண்ணீர் வீணாக்கப்படுவது குறைவு
  • நிலங்களை சமன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை
  • எப்படிப்பட்ட வடிவத்தில் உள்ள நிலங்களிலும் பாசனம் செய்யலாம்.
  • வேர்ப்பகுதியில் ஈரப்பதம் நிலை நிறுத்தப்படுகிறது.
  • மிகக் குறைந்த மணல் அரிப்பு.
  • எல்லா இடங்களிலும் ஒரே அளவிளான தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.
  • குறைந்த பணியாளர் ஊதியம் அளித்தால் போதும்.
  • மிகக் குறைந்த மின்சார அளவே போதுமானது.
  • சருகுகள் காய்ந்த நிலையிலேயே இருப்பதால் நோய் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு.
  • தண்ணீர் குறைந்த அளவில் செலுத்தப்படுவதால் ஆவியாதல், வழிந்தோடுதல் போன்ற பிரச்சனைகள் இல்லை.

சொட்டு நீர் பாசன அமைப்பின் மூலம் நீரில் கரையக்கூடிய உரங்களை துல்லியமாக இட்டு உரமேலாண்மையை மேற்கொள்ள இயலும். நீர் சிக்கனம் குறைந்த களைகள் சீரான காற்றோட்டம் மலர் மற்றும் காய்கள் உதிராமை, மண்ணின் மேற்பரப்பு வறண்டு இருப்பதால் குறைந்த பூச்சி, பூசண தாக்குதல் மண் 60 சத ஈரப்பதம் 40 சத காற்றோட்டம் பெற்றிருப்பதால் அபரிமிதமான வேர் வளர்ச்சி பரவல் பாசன முறையில் பாசனம் மேற்கொள்ளும் போது ஏற்படும் நீரிழப்பு தவிர்க்கப்படுவதால் 40-60 சத நீர் சேமிக்கப்படுகிறது[1].

சொட்டு நீர்ப் பாசனத்தின் பாதகங்கள்

தொகு
  1. ஆரம்பச்செலவு மிகவும் அதிகம்.
  2. தண்ணீர் சரியாக வடிக்கப்படாத நிலையில் நீர் அடைப்பு ஏற்படுவது அதிகம்
  3. குழாய்கள் அடிக்கடி சுத்தம் செய்யப்பட வேண்டும்.
  4. ஒவ்வொரு அறுவடைக்குப் பின்னரும் குழாய்கள் சரியாக பாதுகாக்கப்பட வேண்டும்.
  5. குழாய்கள் சரியாகப் பராமரிக்கப்படாவிட்டால் தண்ணீர், நேரம் ஆகியவை வீணாகலாம்.
  6. உப்பு அளவு அதிகமாக இருக்கும் பொழுது தண்ணீர் அடைப்பு அதிகமாக காணப்படும்.
  7. அணில்,எலி போன்ற ஜந்துக்கள் நுண்நீர்க்குழாய்களை கடித்து சேதப்படுத்துவதால் மிகுந்த விரயம்.

பிரச்சனைகளுக்கான தீர்வு

தொகு
  • சல்பேட், பாஸ்பேட், போன்ற உரங்களின் அளவு அதிகமாக இருக்கும் பொழுது குழாய்களில் உப்பு தேங்கி அடைப்பை ஏற்படுத்தும். இப்பிரச்சனைக்கு தீர்வாக, மாதம் ஒரு முறை குழாய்களில் "குளோரின்" செலுத்தப்படுவதனால் குழாய்களில் உள்ள அடைப்புகளை நீக்கலாம்.

•மழைக்காலங்களில் பாசி அதிகமாகப் படியும் என்பதால், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை "குளோரின்" செலுத்தப்பட வேண்டும். •மேலும் கால்சியம் கார்பனேட் அடைப்பு ஏற்படும்போது, அதனை நீக்க ஹைட்ரோகுளோரிக் அமிலம் பைப்புகளில் செலுத்தப்பட வேண்டும்.

பாசன முறைகளோடு ஓர் ஒப்பீடு

தொகு

•கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் இரு வகைப் பாசனங்களில் பயிருக்குத் தேவைப்படும் தண்ணீரின் அளவும், சொட்டு நீர்ப் பாசனத்தால் மீதப்படும் தண்ணீரின் அளவும் காட்டப்பட்டுள்ளது. அத்துடன் சொட்டு நீர்ப் பாசனம் செய்ய ஒரு ஹெக்டருக்கு ஆகும் செலவு போன்ற விவரமும் கொடுக்கப்பட்டுள்ளது.

[தொடர்பிழந்த இணைப்பு]
பயிர் சொட்டு நீர்ப்பாசனம்
தேவைப்படும் நீரினளவு
மற்ற முறைகள்
தேவைப்படும் நீரினளவு
மீதப்படும் நீரினளவு செலவு (ஹெ.ஏ)
தேங்காய் 75-100 200-300 45 30,000
திராட்சை 25-40 90-100 48 50,000
மாம்பழம் 30-50 90-150 40 28,000
கொய்யா 20-30 70-100 50 34,000
சப்போட்டா 20-30 70-100 50 28,000
வாழை 8-12 30-40 45 56,000
எலுமிச்சை 10-20 25-65 60 50,000
பப்பாளி 5-8 18-26 68 56,000
கத்தரிக்காய் 1-2 4-8 53 5,000
வெண்டை 1-2 4-6 40 75,000
மிளகாய் 1-2 3-6 62 75,000

இந்திய அரசு மானியம்

தொகு

சொட்டு நீர்ப் பாசனம் அமைத்திட ஆகும் மொத்தச் செலவுத் தொகையில் 65% இந்திய அரசு விவசாயிகளுக்கு மானியமாக வழங்குகிறது. சொட்டு நீர்ப் பாசனம் செய்ய ஆகும் ஆரம்பச் செலவில் மானியமாக ரூ.40,000 / ஹெ.ஏ. அரசிடம் இருந்து அளிக்கப்படுகிறது. இது தவிர விதை, நீரில் கரையும் உரங்களுக்காக ரூ.25,000 / ஹெ.ஏ வழங்கப்படுகிறது.

பழப் பயிர்கள், காய்கறிகள், பூக்கள், தென்னை, கரும்பு ஆகிய பயிர்களில் நுண்ணீர்ப் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. ஓர் உழவர் குடும்பத்துக்கு அதிக அளவாக 5 எக்டேர் வரை மானியம் வழங்கப்படுகிறது. சொட்டு நீர்ப் பாசனம் அமைக்க விருப்பமுள்ள விவசாயிகள் தங்கள் நிலத்தின் சிட்டா, அடங்கல், வரைபடம், ரேஷன் கார்டு நகல், மண், நீர் பரிசோதனை முடிவறிக்கை மற்றும் நிறுவன விலைப்புள்ளியுடன் சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக் கலை உதவி போன்றவற்றுடன், இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

நூல்களின் பட்டியல்

தொகு
  • Drip and Micro Irrigation Design and Management for Trees, Vines, and Field Crops, 3rd Edition, by Charles M. Burt and Stuart W. Styles, published by the Irrigation Training and Research Center, 2007
  • Irrigation, 5th Edition,Engr Muhammad Irfan Khan Yousafzai, Claude H. Pair, editor, published by the Irrigation Association, 1983
  • Trickle Irrigation for Crop Production, F.S. Nakayama and D.A. Bucks, editors, published by Elsevier, 1986, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-444-42615-9
  • S. Blass, Water in Strife and Action (Hebrew), published by Massada limited, Israel, 1973
  • Maintenance Manual, published by Jain Irrigation, 1989

வெளியிணைப்பு

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. ”வேளாண்மை செயல்முறைகள்” (மேநி) தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், முனைவர். ச. மோகன் பதிப்பு 2015
"https://ta.wikipedia.org/w/index.php?title=சொட்டு_நீர்ப்பாசனம்&oldid=3816320" இலிருந்து மீள்விக்கப்பட்டது