சொணை பூச்சி

சொணை பூச்சி அல்லது சொணைப்புழு என்பது கம்பளிப் பூச்சி இனத்தைச் சேர்ந்த ஓர் உயிரி. இப்பூச்சியை சொணைப்புழு என்று அழைப்பதுதான் சரியானது. இப்புழு முருங்கை, பூவரசு ஆகியவற்றின் இலைகளை உண்ணும். இதன் உடலில் கம்பளி புழுவின் உடலில் உள்ளது போன்று கூரிய முடிகள் நிறைந்திருக்கும். அந்த முடிகள் மனிதர்களின் மீது பட்டால் அரிப்பை உண்டாக்கும்.

வாழ்க்கை வட்டம்

தொகு

இதன் வாழ்க்கை சுழற்சி பட்டாம்பூச்சியின் வாழ்க்கை சுழற்சி போன்றது. சொணை புழுவின் வளர்ச்சி நான்கு நிலைகளைக் கொண்டது. அவை 1.அந்து பூச்சி, 2.முட்டை பருவம், 3.புழுப்பருவம்(Larva), 4.கூட்டுப்புழு (Puppa).

அந்துப் பூச்சி

தொகு

இப்பூச்சி அரை செ.மீ நீளம் வரை வளரும். வெண்மை கலந்த பழுப்பு நிறத்துடனும், நான்கு சிறகுகளுடனும் காணப்படும். இரவில் ஒளியால் கவரப்பட்டு விளக்கைச் சுற்றி பறக்கும். பூச்சியை கையால் தொட்டால் வெண்மையான பொடி கையில் ஒட்டுவதைக் காணலாம். இவை இணை சேர்ந்து முருங்கை, பூவரசு மரங்களின் இலைகளின் அடிப்பாகத்தில் குவியலாக முட்டை இடும். முட்டையில் உள்ள பசை போன்ற அமைப்பு இலையில் ஒட்டிக்கொள்ள உதவும்.

முட்டை

தொகு

சூரிய ஒளீயின் வெப்பத்தால் முட்டைகள் பொரிந்து புழுக்கள் வெளிவரும்.

புழுப்பருவம்

தொகு

முட்டையிலிருந்து வெளிவந்த புழுக்கள் இலைகளை உண்ணத்தொடங்கும். புழுக்கள் பகல் நேரத்தில் ராணுவ அணிவகுப்பு போன்று வரிசையாக அடிமரத்தை நோக்கி ஊர்ந்து வந்து மறைவான இடத்தில் மறைந்து கொள்ளும். பிற உயிர்களின் கண்களூக்கு தெரியாத வகையில் புழுக்களின் நிறமும் மரத்தின் நிறமும் இருக்கும் தகவமைப்பு இதற்கு இருக்கிறது. இரவில் ஒவ்வொரு கிளையாக ஏறி அதிலுள்ள இலைகள் அனைத்தையும் தின்று முடித்தப்பின்தான் அடுத்த கிளைக்குச் செல்லும். புழுப்பருவத்தில் பல முறை தோலை உரிக்கும். முழு வளர்ச்சி அடைந்தபின் கூட்டுப்புழுவாக மாறி மரத்தை விட்டு வெளியேறும்.

கூட்டுப்புழு

தொகு

இலைகளைத் தின்று முழுவளர்ச்சி அடைந்த புழுக்கள் மரத்தை விட்டு வீட்டின் சுவர், கூரை போன்ற இடங்களுக்குச் சென்று தன் வாயிலிருந்து சுரக்கும் நீரால் தன்னைச் சுற்றி வலை பின்னி தன்னை மூடிகொள்ளும். இரு வாரங்களுக்குமேல் கூட்டு புழுவாக இருந்து பல மாற்றங்களை அடைந்து கூட்டை உடைத்துக்கொண்டு தாய் அந்து பூச்சியாக வெளி வரும்.

அழிக்கும் முறை

தொகு

சிலர் இப்புழுக்களை தீயிட்டு அழிக்கின்றனர். அதனால் மரத்தின் பட்டை தீயால் கருகி பாதிக்கப்படுகிறது. மேலும் எரிக்கும் போது பறக்கும் முடிகள் நம்மீது பட்டால் உடலில் அரிப்பு உண்டாகும். பூச்சிகொல்லி தூளை புழுக்களின் மீது தூவி அழிக்கலாம். அல்லது மரத்தின் அருகில் சிறு குழி தோண்டி குச்சியால் புழுக்களை மெதுவாக குழியில் தள்ளி மண்ணால் மூடிவிடுவதே நல்லது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சொணை_பூச்சி&oldid=2647966" இலிருந்து மீள்விக்கப்பட்டது