சொர்ணமலைக் கதிரேசன் கோயில்
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி சொர்ணமலைக் கதிரேசன் கோயில், கோவில்பட்டி கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் சொர்ணமலையின் மீது அமைந்துள்ள அருள்மிகு சொர்ணமலைக் கதிரேசன் திருக்கோயில் முருகப்பெருமானின் திருத்தலமாகும். உலகிலேயே, தமிழ்நாட்டில் இருக்கும், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் அமைந்துள்ள சொர்ணமலைக் கதிர்வேல் முருகன் திருக்கோயிலில், ஆறு அடியில் ஐம்பொன்னில் மூலவர் வச்சிரவேலாக அமைந்து பொதுமக்களால் வணங்கப்படுவது இத்தலத்தின் சிறப்பாகும்.
தலவரலாறு
முற்காலத்தில் கோவில்பட்டியிலிந்து இலங்கை சென்று வணிகம் செய்து வந்த வணிகப்பெருமக்கள், இலங்கையிலுள்ள கண்டி கதிர்காமமுருகன் ஆலயத்தை வழிபாடு செய்து வியாபரம் செய்ய விரும்பினர். ஆனால், இவர்கள் செல்லும் நேரமெல்லாம் இவ்வாலயத்தின் நடை சாத்தப்பட்டிருக்கும். அதனால், ஏமாற்றமடைந்த வணிகப்பெருமக்களின் மனதில் ஓர் எண்ணம் தோன்றியது. அத்திருத்தலத்திலிருந்து பிடிமண் எடுத்துவந்து, தம் நகரிலுள்ள அத்தைகொண்டான் பகுதியில் முருகப்பெருமானின் திருத்தலம் அமைக்க ஏற்பாடு செய்தனர். அப்பொழுது அங்குவந்த முனிவர் ஒருவர், ஆகம விதிகளின்படி அமைந்துள்ள இவ்வூர் மிகவும் சிறப்புவாய்ந்தது என்றும், முருகப்பெருமானின் ஆலயம் இங்குள்ள குன்றின்மேல் இருப்பதே சிறப்பு என்றும் கூறினார். அதன்படி இவ்வூரின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள சொர்ணமலையின் மீது முருகப்பெருமானை வேல் வடிவில் பிரதிஷ்டை செய்து, கோயில் கட்டி, மாணிக்க விநாயகர், தண்டாயுதபாணி, பைரவர் ஆகிய சந்நிதிகளையும் அமைத்து வழிபாடு செய்து கதிர்வேல்முருகனின் அருள்பெற்று வியாபாரத்தைப் பெருக்கி வந்தனர்.
சிறப்பு
இம்மலையில் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து வீசும் மூலிகைக்காற்று வீசுவதால் நோய்களைத் தீர்க்கும் சிறந்த மருந்தாகி வருகிறது. மேலும், திருமண பாக்கியம், குழந்தைப்பேறு இல்லாதவர்களும் இத்திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானை வழிபாடு செய்து தங்கள் வேண்டுதல்களைப் பெற்று வருகின்றனர். இவ்வூரில் உள்ள மக்கள் இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானின் திருநாமமான கதிர்வேல்முருகன், கதிரேசன், கார்த்திகேயன் என்ற பெயர்களைத் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டி இறைவன் திருநாமத்தைப் போற்றி வருகின்றனர். இத்திருக்கோவிலுக்கு வந்து முருகனை தரிசித்து வந்தால் வியாபாரத்தடை நீங்கி வியாபாரம் அமோக இலாபம் பெரும்; திருமணத்தடை உள்ளவர்களுக்கு திருமணத்தடை நீங்கி திருமணம் நடைபெறும்; புத்திர பாக்கிய தோஷம் உள்ளவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும்; சத்ரு தோஷம் நீங்கும்; திருஷ்டி தோஷம் நீங்கும்; சகல ஐஸ்வரியமும் கிட்டும் என மக்கள் வழிபாடு செய்து முருகப்பெருமானின் திருவருள் பெற்று வருகின்றனர். இத்திருக்கோயிலின் மேற்குப்பக்கம், மலை அடிவாரத்தில் ஒளிர் குகை ஒன்று உள்ளது. அக்குகையில் முன்காலத்தில் முனிவர்கள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
வளர்ச்சி
தற்போது கடந்த 2006ம் ஆண்டு ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் செய்யப்பட்டு திருக்கோயில் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. திருக்கோயிலுக்கு பக்தர்கள் சென்றுவர படிக்கட்டுப்பாதைகள், மலை மீது வாகனங்கள் செல்ல சாலைவசதி, மின்விளக்கு வசதிகள்,குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இத்திருக்கோயில் திருப்பணி வேலைகள் நடைபெற்று, 17.03.2006ல் பங்குனி மாதம் 3ம் தேதி அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருவிழாக்கள்
மாத கார்த்திகை விழாக்கள், பௌர்ணமி கிரிவலம், வைகாசி விசாகம், கந்தசஷ்டி, திருகார்த்திகை, தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் ஆகிய விழாக்களும் நடைபெற்று வருகின்றன. பிரதிமாதம் பௌர்ணமிதோறும் பலஆயிரக்கணக்கான பக்தர்கள் அடிவார விநாயகர் கோவில் முன்பிருந்து மாலை 5.30 மணியளவில் கிரிவலம் தொடங்கி மலை மீது இருக்கும் கதிர்வேல் முருகனை தரிசித்து திருவருள் பெற்று வருகின்றனர்.
திருக்கோயில் அமைப்பு
இத்திருக்கோயில் கோவில்பட்டி திருத்தலத்தின் தென்மேற்கு மூலையில் உள்ள சொர்ணமலையின் மீது அழுகுற அமைந்துள்ளது. இக்கோயிலில் கதிர்வேல்முருகன், விநாயகர், பைரவர், தண்டாயுதபாணி என நான்கு சந்நிதிகளும், மூன்று கோபுரங்களும், இரு சாலைக்கோபுரங்களும் உள்ளன. மேலும் பக்தர்கள் வசதிக்காக மண்டபம், தங்கும் விடுதி மற்றும் பூங்கா உள்ளன. 08-04-2017 அன்று தமிழக முதல்வர் மாண்புமிகு பழனிசாமி அவர்களால் அன்னதானத் திட்டம் தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இக்கோயிலின் முக்கிய வாயில் வடக்கு வாயில் ஆகும். கதிர்வேல் முருகன் வேல் வடிவில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இரவு நேரத்தில் இக்கோயிலும், சொர்ணமலையும் மின்விளக்கு ஒளியில் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். மேலும் இரவு நேரத்தில் இக்கோயிலில் இருந்து கோவில்பட்டியைப் பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாய்க் காட்சியளிக்கும்.
பாடல்
பர்வதைய ளங்கண ரருட்பாலா
கர்வாசு ரந்தக வயிலோனே
பிர்மிரரனைமு னஞ்சிறை யிடுதீரா
சர்வுநல மங்கல மருள்தேவே
நிர்மலவ விண்டரி மருகோனே
மர்மமெழு மெண்புவி யதிகாரா
தர்மநெறி யின்படி உயிராளச்
சொர்ணமலை தங்கிய பெருமானே. 1
கர்மவினை மயிலிற் றொடர்வாகுந்
துர்நினைவ தகலத் தெருளோதிப்
புர்வமிசை நினையத் தருவாயோ
வர்ணவரி மருகப் பிடிநாதா
பரவதம ததிரப் பகைமாயத்த
நிர்குணவ நிகரிற் றுணைவோனே
சொர்ணமணி மிளிரொப் பிலிதேகா
சொர்ணமலை முருகப் பெருமானே. 2
போக்குவரத்து வசதிகள்
காசி – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி பிரிவில் 0.5 கி.மீ தூரத்தில் மதுரையிலிருந்து 100 கி.மீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 60 கி.மீ தொலைவிலும் தூத்துக்குடியிலிருந்து 60 கி.மீ. தொலைவிலும், இத்திருத்தலம் மலை மேல் அமைந்துள்ளது. மதுரையிலிருந்து கன்னியாகுமரி செல்லும் சுற்றுலா பயணிகள் அனைவரும் இந்த முருகன் திருத்தலத்திற்கு வந்து வழிபட்டு செல்வது ஒரு சிறப்பாகும்.
திருக்கோயில் நேரம்:
காலை 6.30 மணி முதல் பகல் 11.30 மணி வரை மாலை 4.30 மணி முதல் பகல் 8.30 மணி வரை
தற்போது பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக திருநெல்வேலிக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து இணைப்புச் சாலை, தங்கும் மண்டபம், குளியல் அறைகள், பூங்கா மற்றும் மின்விளக்குகள் வசதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்புக்கு
இத்திருக்கோயில் தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் இருந்து வருகிறது. இத்திருக்கோயிலை கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்பாள் உடனுறை அருள்மிகு பூவனநாதசுவாமி திருக்கோயில் செயல்அலுவலரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இத்திருக்கோயிலுக்கு காணிக்கைகள், நன்கொடைகள் செலுத்த விரும்புபவர்கள் அனுப்பி வைக்க வேண்டிய முகவரி: செயல்அலுவலர், அருள்மிகு சொர்ணமலைக் கதிரேசன் திருக்கோயில், கோவில்பட்டி – 628 501. தூத்துக்குடி மாவட்டம். தொலைபேசி எண்: 04632 220248.