சோசிமஸ் (திருத்தந்தை)

திருத்தந்தை

திருத்தந்தை சோசிமஸ் (Pope Saint Zosimus) கத்தோலிக்க திருச்சபையில் உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் மார்சு 18, 417 முதல் திசம்பர் 26, 418 வரை ஆட்சிசெய்தார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் 41ஆம் திருத்தந்தை ஆவார்.[1][2].

புனித சோசிமஸ்
Saint Zosimus
41ஆம் திருத்தந்தை
ஆட்சி துவக்கம்மார்ச்சு 21, 417
ஆட்சி முடிவுதிசம்பர் 26, 418
முன்னிருந்தவர்முதலாம் இன்னசெண்ட்
பின்வந்தவர்முதலாம் போனிஃபாஸ்
பிற தகவல்கள்
இயற்பெயர்சோசிமஸ்
பிறப்புதுல்லியமாகத் தெரியவில்லை
மெசோரக்கா, கலாப்ரிய மாநிலம், இத்தாலி
இறப்பு(418-12-26)26 திசம்பர் 418
உறுதியாகத் தெரியவில்லை
புனிதர் பட்டமளிப்பு
திருவிழாதிசம்பர் 26

இவர் இத்தாலியின் கலாப்ரியா மாநிலத்தில் மெசோராக்கா என்னும் இடத்தில் பிறந்தார்.[3]

இவருக்கு முன்னால் திருத்தந்தைப் பதவியில் இருந்தவர் முதலாம் இன்னசெண்ட், இவருக்குப் பின் பதவியேற்றவர் திருத்தந்தை முதலாம் போனிஃபாஸ்.

"திருத்தந்தையர் வரலாறு" (Liber Pontificalis) என்னும் நூலின்படி, சோசிமஸ் ஒரு கிரேக்கர். அவருடைய தந்தை பெயர் ஆபிராம். இதிலிருந்து சோசிமசின் குடும்பம் யூத இனத்தைச் சார்ந்ததாக இருந்திருக்கலாம் என்று ஒருசிலர் கருதுகின்றனர். ஆனால் இது பற்றி உறுதியாகத் தெரியவில்லை.[4]

வரலாறு

தொகு

காண்ஸ்டான்டிநோபுள் நகரின் ஆயராக இருந்து, பின்னர் பதவியிறக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டவர் புனித யோவான் கிறிசோஸ்தோம். அவர்தான் சோசிமஸ் என்னும் குருவை முதலில் திருத்தந்தைக்கு முன்னால் பதவியிலிருந்த முதலாம் இன்னசெண்ட்டுக்கு அறிமுகம் செய்துவைத்தவர்.

இன்னசெண்டுக்குப் பின் திருத்தந்தையாகப் பதவியேற்ற சோசிமஸ் எளிதில் உணர்ச்சிவசப்படுபவராகவும், அரசியல் துறையில் அனுபவமில்லாதவராகவும், ஆட்சித் திறமை இல்லாதவராகவும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

முக்கிய தீர்மானங்கள்

தொகு

சோசிமஸ் திருச்சபையைப் பெரிதும் பாதித்த ஒருசில முடிவுகளை எடுத்தார்.

  • சோசிமஸ் தமக்கு முன் பதவியிலிருந்த முதலாம் இன்னசெண்ட் திருச்சபையின் ஒற்றுமை கருதி எடுத்த ஒரு முக்கிய முடிவைத் தலைகீழாக மாற்றினார். அதாவது, கடவுளின் தனி உதவியின்றியே மனிதர் கடவுளுக்கு ஏற்புடையவராகலாம் என்னும் தவறான கொள்கையைப் போதித்த பெலாஜியுஸ் மற்றும் அவருடைய சீடர் செலேஸ்தியுஸ் ஆகியோரை முதலாம் இன்னசெண்ட் சபைவிலக்கம் செய்திருந்தார். ஆனால் சோசிமஸ் பெலாஜியுசையும் செலேஸ்தியுசையும் மீண்டும் திருச்சபையோடு சேர்த்தார். அவர் எடுத்த முடிவு தவறானது என்று ஆப்பிரிக்க ஆயர்கள் சுட்டிக் காட்டியதைத் தொடர்ந்து சோசிமஸ் தம் முடிவைப் பின்வாங்கினார்.
  • தெற்கு பிரான்சு பகுதியில் ஆர்ல் (Arles) நகரத்தின் ஆயராக பாத்ரோக்லுஸ் என்பவரை சோசிமஸ் நியமித்தார். ஆர்ல் மற்றும் வீயன் (Vienne) அதைச் சூழ்ந்த பகுதிகள் ஆகிய இடங்களுக்கு ஆயர்களை நியமிக்கும் அதிகாரத்தை சோசிமஸ் பாத்ரோலுசுக்குக் கொடுத்தார். ஒருவிதத்தில் பிரான்சு பகுதியில் திருத்தந்தையின் தூதுவர் போலவே பாத்ரோக்லுஸ் செயல்பட சோசிமஸ் வழிகோலினார். இது ஆட்சிப் பொறுப்பை முறையாகச் செயல்படுத்தாதற்கு எடுத்துக்காட்டு ஆயிற்று.
  • சோசிமஸ் பெலாஜியுசையும் செலேஸ்தியுசையும் திருச்சபையோடு சேர்த்ததற்கு ஒரு வரலாற்றுப் பின்னணி இருந்தது. பெலாஜியுஸ் தவறான கொள்கைகளைப் பரப்பினார் என்பதற்காகத்தான் சபைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். பெலாஜியுஸ் தான் கிறித்தவக் கொள்கைகளை ஏற்பதாக ஓர் ஆவணம் தயாரித்து முதலாம் இன்னசெண்டுக்கு அனுப்பியிருந்தார். அந்த ஆவணம் இன்னசெண்டின் இறப்புக்குப் பின்னரே உரோமை வந்து சேர்ந்தது. அதை சோசிமஸ் பார்த்தார். அதோடு சோசிமஸ் பெலாஜியுசின் சீடரான செலேஸ்தியுசையும் சந்தித்தார். உடனேயே அவர் ஆப்பிரிக்க ஆயர்களுக்குக் கடிதம் எழுதி, பெலாஜியுஸ் உண்மையான கொள்கையை ஏற்றுக்கொண்டுவிட்டார் என்றும், ஆப்பிரிக்க ஆயர்கள் அவரை சபைநீக்கம் செய்திருக்கக்கூடாது என்றும் கூறி அவர்களைக் கடிந்துகொண்டார். இக்கடிதத்தைப் பெற்ற ஆப்பிரிக்க ஆயர்கள், புனித அகுஸ்தீன் உட்பட, கொதித்தெழுந்தனர். அவர்கள் சோசிமசுக்குக் கடிதம் எழுதி, சோசிமசின் முன்னோடியான முதலாம் இன்னசெண்ட் எடுத்த முடிவு சரியே என்றும், அந்த முடிவுக்கே தாங்கள் ஆதரவு தருவதாகவும் கூறிவிட்டார்கள். ஆப்பிரிக்க ஆயர்கள் பேரரசர் ஹோனோரியசுக்கு இதுபற்றிக் கடிதம் எழுதி அவருடைய ஆதரவையும் பெற்றார்கள். கார்த்தேஜ் நகரில் 418இல் ஒரு சங்கம் கூட்டப்பட்டது. அதிலும் பெலாஜியுசின் கொள்கை கண்டனம் செய்யப்பட்டது. இறுதியில் சோசிமஸ் திருச்சபை முழுவதற்கும் ஒரு கடிதம் எழுதி, பெலாஜியுஸ் கொள்கை தவறு என்பதை எடுத்துக் கூறினார்.
  • சோசிமஸ் எடுத்த இன்னொரு தவறான முடிவு, ஒரு தல ஆயரால் சபைநீக்கம் செய்யப்பட்டிருந்த ஆப்பியாரியுஸ் என்னும் குருவுக்கு ஆதரவு அளித்தது ஆகும்.

இறப்பும் திருவிழாவும்

தொகு

சோசிமசின் இறுதி நாட்களில் பல குருக்கள் அவரது ஆட்சி குறித்து அதிருப்தி அடைந்தார்கள். ரவேன்னா நகரில் அரசவையை அணுகி, நடவடிக்கை எடுக்கக் கோரினார்கள். சோசிமஸ் அவர்களை சபைநீக்கம் செய்ய எண்ணிக்கொண்டிருந்த வேளையில் நோய்வாய்ப்பட்டு, இறந்தார்.

சோசிமஸ் உரோமை நகருக்கு வெளியே அமைந்த புனித லாரன்சு பெருங்கோவிலில் அடக்கம் செய்யப்பட்டார்.[5] ஒன்பதாம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட புனிதர் நூலில் சோசிமஸ் ஒரு புனிதராகக் குறிக்கப்படுகிறார்.

சோசிமசின் திருவிழா திசம்பர் 26ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர் உரோமை ஆயர்
திருத்தந்தை

417-418
பின்னர்

குறிப்புகள்

தொகு
  1.    "Zosimus (Bishop)". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. 
  2.    "Pope St. Zosimus". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம். 
  3. http://www.initalytoday.com/calabria/mesoraca/index.htm
  4. Louis Duchesne, Histoire ancienne de l'église, 111, 228, note
  5. Giovanni Battista de Rossi, Bulletino di arch. christ., 1881, 91 sqq
  •   இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பில் உள்ள வெளியீடு ஒன்றின் பகுதிகளைக் கொண்டுள்ளது:  "Pope St. Zosimus". Catholic Encyclopedia. (1913). நியூயோர்க்: இராபர்ட் ஆப்பில்டன். 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோசிமஸ்_(திருத்தந்தை)&oldid=2710805" இலிருந்து மீள்விக்கப்பட்டது