சோரிக்து கான் ஏசுதர்
சோரிக்து கான் (மொங்கோலியம்: Зоригт хаан ᠵᠣᠷᠢᠭᠲᠤ; மரபுவழிச் சீனம்: 卓里克圖汗) என்பவர் வடக்கு யுவான் அரசமரபின் ககான் ஆவார். இவர் 1388 - 1391இல் ஆட்சி புரிந்தார்.[1] சோரிக்து கானின் அடையாளப்படுத்துதலானது விவாதத்திற்குரியதாக உள்ளது. சில அறிஞர்கள் சோரிக்துவும் ஏசுதரும் ஒரே நம்பர் என்று நம்புகின்றனர். ஏசுதர் என்பவர் அரிக் போகேயின் ஒரு வழித்தோன்றல் ஆவார். ஏசுதருக்குப் பின் வந்த என்கே கான் ஏசுதரின் மகன் ஆவார். அதே நேரத்தில் எர்தெனீன் தோப்சி என்ற மங்கோலிய நூல் சோரிக்து கான் மற்றும் என்கே கான் ஆகிய இருவருமே ஒரே நபர் என்றும், அவர்களின் பட்டங்கள் மட்டும் வெவ்வேறானவை என்றும் நம்புகிறது. இவரது பட்டமான "சோரிக்து கான்" என்பதன் பொருள் மொங்கோலிய மொழியில் "துணிச்சலான பேரரசர்" என்பதாகும்.
ஏசுதரால் உஸ்கல் கான் தோகுஸ் தெமுர் கொல்லப்பட்டதற்குப் பிறகு ஒன்றிணைந்திருந்த மங்கோலியப் பழங்குடியினங்கள் சீக்கிரமே சிதறுண்டன. சகதாயி கானின் ஒரு வழித்தோன்றலான குணசிறீ தற்போதைய சிஞ்சியாங்கில் அமி என்ற இடத்தில் காரா தெல் என்ற அரசை நிறுவினார்.[2] உஸ்கல் கானின் முன்னாள் மந்திரியான நேசெலை 1389இல் மிங் அரசமரபுக்குப் பணிந்தார். தற்போதைய உள் மங்கோலியா மாகாணத்தில் நேசெலையின் கீழ் தியூவானின் (அல்லது மூன்று பாதுகாவலர்கள்) என்ற ஒரு மங்கோலியப் பாதுகாவலர்களை மிங் அரசமரபு நிறுவியது. எனினும், பிந்தைய கானான சிங்சாங், சிர்மேன் ஆகியோர் ஏசுதருடன் இணைந்தனர். நேசெலையைக் கொன்றனர்.
இலியாவோவின் முந்தைய இளவரசரும், மூன்று பாதுகாவலர்களின் தலைவர்களில் ஒருவருமான அசசிர் ஏசுதருடன் தன்னுடைய கூட்டணியை 1389ஆம் ஆண்டுக்குப் பிறகு சில காலத்தில் ஏற்படுத்திக் கொண்டார்.
உசாத்துணை
தொகு- ↑ Guush Luvsandanzan. தங்கச் சுருக்கம்.
- ↑ Amitai-Preiss, Reuven; Morgan, David (2000). The Mongol Empire and Its Legacy. Brill. p. 294. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789004119468.