ஜம்மு காஷ்மீர் இருப்பிடச் சான்று
ஜம்மு காஷ்மீர் இருப்பிடச் சான்று, (Jammu Kashmir Union Territory Residential Certificate) இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370 மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 35ஏ- கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புச் சலுகைகளை, 2019 ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்புச் சலுகைகளை இந்திய அரசு நீக்கியது.
சிறப்புச் சலுகைகள் நடைமுறையில் இருந்த வரை, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிரந்தரமாக தங்கியிருப்பவர்களுக்கு மட்டுமே மாநில அரசுப் பணிகள் கிடைக்கும் நிலை இருந்தது. மேலும் ஜம்மு - காஷ்மீரில், வெளி மாநிலத்தவர் யாரும் நிலம் வாங்க முடியாது; நிரந்தரமாக தங்கவும் முடியாது என்ற நிலையும் இருந்தது. சிறப்பு அந்தஸ்து நீக்கத்தால், ஜம்மு - காஷ்மீரில், கல்வி, வேலைவாய்ப்பில் உள்ளூர் மக்களின் உரிமை பறிபோகக்கூடும் என பல்வேறு அமைப்பினர் கவலை தெரிவித்தனர். மேலும் இந்தியாவின் வெளி மாநிலத்தவரால், நில உரிமை பறிக்கப்படலாம் என்ற அச்சமும் எழுந்தது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதிக்கான இருப்பிடச் சான்றுக்கான அரசாணையை 1 ஏப்ரல் 2020-இல் இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.[1]
ஜம்மு காஷ்மீர் இருப்பிடச் சான்று அரசாணையின் முக்கிய அம்சங்கள்
தொகு- இந்த அரசாணையின் படி, ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியில், 15 ஆண்டுகள் தங்கி இருந்தவர்கள் அல்லது ஏழு ஆண்டுகள் தங்கி, 10 அல்லது, பிளஸ் 2 வகுப்பு தேர்வு எழுதியவர்கள், ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசத்தின் இருப்பிட சான்றிதழ் பெற தகுதி பெற்றவர்களாக கருதப்படுவர்.
- ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் வசிப்பவர்களின் குழந்தைகள் வேலை, தொழில் அல்லது கல்வி காரணமாக வேறு மாநிலங்களில் குடியிருந்தாலும், அவர்கள் பெற்றோர் விரும்பினால், அவர்களுக்கு யூனியன் பிரதேசத்தின் இருப்பிட சான்றிதழ் வழங்கப்படும். இவர்கள், ஜம்மு - காஷ்மீர் அரசு பணிகளில் சேர தகுதி பெற்றவர்களாக கருதப்படுவர்.
- இந்திய அரசின் துறைகள், இந்தியப் பொதுத்துறை நிறுவனங்கள், இந்திய அரசின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற துறைகள், பொதுத்துறை வங்கிகள், அரசியல் சட்ட அங்கீகாரம் பெற்ற அமைப்புகள், மத்திய பல்கலைக்கழகங்கள். மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற ஆய்வு நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகள், ஜம்மு - காஷ்மீரில் குறைந்தது 10 ஆண்டுகள் பணியாற்றியவர்களும் மற்றும் அவர்களின் குழந்தைகளும் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் இருப்பிட சான்றிதழ் பெற தகுதியுடையவர்களாக கருதப்படுவர்.
- ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசத்தின் அரசு பணிகளில், 'குரூப் - 4' வரை, இருப்பிடச் சான்றிதழ் பெற்றவர்களுக்கே கிடைக்கும் வகையில், இடஒதுக்கீடு வழங்கப்படும்.[2]
இருப்பிடச் சான்று ஆணைக்கான எதிர்ப்புகள்
தொகு- இந்திய அரசு வெளியிட்டுள்ள இருப்பிடச் சட்டம், ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேச மக்களுக்கு செய்யப்பட்ட துரோகம், என முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதல்வர், ஒமர் அப்துல்லா போன்றோர் கூறியுள்ளனர்.[3]