ஜல்காரிபாய்
ஜல்காரிபாய் (Jhalkaribai, ஹிந்தி: झलकारीबाई, நவம்பர் 22, 1830-1890) 1857 இந்தியக் கிளர்ச்சியின்போது ஜான்சிப் போரில் முக்கிய பங்கு வகித்த ஓர் இந்தியச் சுதந்திரப் போராட்ட வீராங்கனை ஆவார். இவர் ஜான்சியின் ராணி லட்சுமிபாயினுடைய பெண்கள் படையில் சேர்ந்திருந்தார். வறிய குடும்பமொன்றில் பிறந்த ஜல்காரிபாய், ராணி லட்சுமிபாயின் பெண்கள் படையில் ஒரு சாதாரண படை வீராங்கனையாக இணைந்தாலும் பின்னர், மிக முக்கியமான முடிவுகளை எடுப்பதில் ராணி லட்சுமிபாயுடன் பங்குபற்றவும் அவருக்கு அறிவுரை கூறவும் கூடிய நிலைக்கு உயர்ந்தார். இந்தியக் கிளர்ச்சியின்போது ஜான்சிப் போரின் உச்சகட்டத்திலே, ஜல்காரிபாய் ஆங்கிலேய அரசை ஏமாற்றும் நோக்கத்தில் ராணி லட்சுமிபாயைப் போல் உடை அணிந்து கொண்டு படைக்குத் தலைமை தாங்கி, ராணி லட்சுமிபாய் கோட்டையை விட்டுப் பாதுகாப்பாக வெளியே செல்வதற்கு உதவி செய்தார்.
ஜல்காரிபாய் | |
---|---|
ஜல்காரிபாயைக் கௌரவிக்கும் முகமாக இந்திய அரசு வெளியிட்ட முத்திரை | |
பிறப்பு | போஜ்லா, ஜான்சிக்கு அருகில் | நவம்பர் 22, 1830
இறப்பு | 1890 (மறுப்புகள் உள்ளன.) |
அரசியல் இயக்கம் | சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 |
ஜல்காரிபாயின் வீர வரலாறு பல நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் கூடப் புந்தேல்கண்டில் நினைவுகூரப்பட்டு வருகின்றது. புந்தேல்கண்ட் பகுதியைச் சேர்ந்தவர்கள் பாடும் நாட்டுப்புறப் பாடல்கள் எல்லாம் ஜல்காரிபாயின் வாழ்க்கை வரலாற்றையும் பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் படையை எதிர்த்துப் போரிட்ட வீரத்தையும் சொல்கின்றன.
வாழ்க்கை
தொகுவிவசாயிகளான சடோபா சிங்-ஜமுனா தேவி தம்பதியினருக்குப் பிறந்தவர் ஜல்காரிபாய். இவர் 1830ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் திகதி ஜான்சிக்கு அருகிலுள்ள போஜ்லா எனும் கிராமத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே இவரின் தாயான ஜமுனா தேவி இறந்து போனார். அதன் பின்னர், சடோபா சிங் இவரை ஓர் ஆணைப் போல் வளர்த்தார். ஜல்காரிபாய் குதிரையேற்றத்தையும் ஆயுதங்களைக் கையாளும் விதத்தையும் அறிந்து கொண்டார். அக்கால சமூக நிலைமையின்படி, ஜல்காரிபாய் முறையான கல்வியைப் பெறவில்லை. ஆயினும் விரைவிலேயே நன்றாகப் பயிற்றப்பட்ட வீராங்கனையாக வந்தார். காட்டிலே ஒரு புலியால் தாக்கப்பட்டப் போது, தனது கோடரியைப் பயன்படுத்திப் புலியைக் கொன்றதிலிருந்து புந்தேல்கண்டில் ஜல்காரிபாயின் புகழ் பரவத் தொடங்கியது.[1] இன்னெர்ரு சந்தர்ப்பத்தில் செல்வர் ஒருவரின் வீட்டில் கொள்ளையிட வந்த ஆயததாரிகளிடம் சவால் விட்டு, அவர்களைப் பின்வாங்கச் செய்தார்.
ஜல்காரிபாய், தோற்றத்தில் ராணி லட்சுமிபாய் போலவே இருந்தார்.[2] இச்சந்தர்ப்பத்திலே, ராணி லட்சுமிபாயின் பீரங்கிப் படையைச் சேர்ந்த பூரண் சிங்கை ஜல்காரிபாய் திருமணம் செய்து கொண்டார். பூரண் சிங், ஜல்காரிபாயை ராணி லட்சுமிபாயிடம் அறிமுகம் செய்து வைத்தார். இதன் பின்னர், ஜல்காரிபாய் ராணி லட்சுமிபாயின் பெண்கள் படையில் இணைந்து கொண்டார். ஜான்சியின் படையில் இணைந்ததிலிருந்து போர் முறைகளின் அனைத்துப் பிரிவுகளிலும் மேலும் நிபுணத்துவத்தைப் பெற்றுக் கொண்டார் ஜல்காரிபாய். துப்பாக்கி சுடுவதிலும் பீரங்கிகளை இயக்குவதிலும் தனது திறமையை வளர்த்துக் கொண்டார். பார்ப்பதற்குத் தன்னைப் போல் இருப்பதால் ராணி லட்சுமிபாய்க்கு ஜல்காரிபாயின் மேல் ஒரு கரிசனம் உண்டாகியது. ராணி லட்சுமிபாய்க்கு மிகவும் பிடித்த போர் வீராங்கனையாக விளங்கினார் ஜல்காரிபாய்.
1857-58ஆம் வருடங்களில் ஜான்சிக் கோட்டையின் மீது ஆங்கிலேய அரசு பல முறை படை எடுத்தது. ஒவ்வொரு முறையும் ராணி லட்சுமிபாய் அந்தப் படையெடுப்புக்களைச் சாமர்த்தியமாக எதிர்கொண்டு முறியடித்தார். 1857 இந்தியக் கிளர்ச்சியின்போது, 1858ஆம் ஆண்டு ஏப்பிரல் 3ஆம் திகதி ஹீ ரோஸ் பாரிய படையுடன் வந்து ஜான்சியை முற்றுகையிட்டார். ராணி லட்சுமிபாய் பாரிய படையை எதிர்த்துப் போர் புரியக்கூடிய நிலையில் இருக்கவில்லை. அவர் கல்பியிலுள்ள ஏனைய புரட்சிப் படைகளுடன் இணைவதாகவே திட்டம் போட்டிருந்தார். இதனையடுத்து, ஜல்காரிபாய் தான் ஜான்சி ராணி போல் முன்னின்று போர் புரிவதாகவும் அச்சந்தர்ப்பத்தில் ராணி லட்சுமிபாய் கோட்டையை விட்டுத் தப்பிச் செல்ல முடியும் என்று ஒரு வேண்டுகோளை ராணி லட்சுமிபாயிடம் முன்வைத்தார். ஜல்காரி பாயும் பெண் படையைச் சேர்ந்த சிலரும் ராணி லட்சுமிபாயை மிகுந்த பிரயாசைக்குப் பிறகு தப்பிச் செல்ல வைத்தார்கள். ஏப்பிரல் 4ஆம் திகதி இரவில் ராணி லட்சுமிபாய் கோட்டையிலிருந்து தப்பித்துக் கல்பிக்கு விரைந்து சென்றார். அதே சமயத்தில், ஜல்காரிபாய் ராணி லட்சுமிபாயைப் போல் உடை அணிந்து கொண்டு, படைக்குத் தலைமை தாங்கியபடி ஹீ ரோசின் முகாமுக்குச் சென்றார். ஜல்காரிபாய் மிகுந்த பராக்கிரமத்துடன் ஆங்கிலேயப் படையுடன் சண்டையிட்டார். ஆனால், கடைசியில் அவர்களிடம் பிடிபட்டார். ஆங்கிலேய அதிகாரிகள், தாம் ராணி லட்சுமிபாயை உயிருடன் பிடித்ததாக எண்ணி ஜல்காரிபாயிடம் அவரை என்ன செய்ய வேண்டும் என்று கேட்டனர். ஜல்காரிபாய் துணிச்சலுடன் தூக்கிலிடுங்கள்! என்று கூறினார்.[3] ஆனாலும் ஆங்கிலேயர்கள் உண்மையைச் சிறிது தாமதமாக அறிந்து கொண்டனர். ஆனால், அதற்குள் ராணி லட்சுமிபாய் நீண்ட தூரம் சென்றிருந்தார். ஆங்கிலேய அதிகாரிக்கு ஜல்காரிபாயின் வீரமும் எசமான விச்வாசமும் மிகவும் பிடித்துப் போயிற்று. ஆகவே, அவர் ஜல்காரிபாயை மிகுந்த மரியாதையாக நடத்தி விடுதலையும் செய்தார்.
ஜல்காரிபாயின் பிற்கால வாழ்க்கை பற்றிய மூலாதாரங்கள் சிலவே கிடைத்துள்ளன. ஜான்சிப் போரில் ஜல்காரிபாய் இறந்ததாகச் சில ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. ஆனாலும் சில ஆதாரங்கள் ஜல்காரிபாய் ரோசால் விடுதலை செய்யப்பட்டு 1890 வரை வாழ்ந்ததாகக் குறிப்பிடுகின்றன.
தொலைக்காட்சித் தொடரில்
தொகு- ஜீ தமிழ்த் தொலைக்காட்சியில் 2010ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் திகதியிலிருந்து 2012ஆம் ஆண்டு சனவரி 27ஆம் திகதி வரை ஒளிபரப்பப்பட்ட ஜான்சி ராணி... ஒரு வீரப்பெண்ணின் கதை என்ற ராணி லட்சுமிபாயின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட வரலாற்றுத் தொலைக்காட்சித் தொடரில் ஜல்காரிபாயைப் பற்றியும் குறிப்பிடப்படுகின்றது.[4] இத்தொடரில் ஜல்காரிபாயாக இஷிதா வியாஸ் நடித்திருந்தார்.[5] ஜான்சிப் போரில் ஜல்காரிபாய் இறந்ததாக இத்தொடரில் காட்டப்பட்டுள்ளது.[6]
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ ஜல்காரி பாய் (?-1890) (ஆங்கில மொழியில்)
- ↑ ஜான்சி ராணிக்கு டூப் போட்ட ஜல்காரிபாய்
- ↑ ஜல்காரி பாய், குடியேற்ற இந்தியாவில் ஒரு பெண்ணின் வீரத்தின் சிறிதே தெரிந்த பாகம் (ஆங்கில மொழியில்)
- ↑ அத்தியாய வழிகாட்டி (ஆங்கில மொழியில்)
- ↑ [தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு] ஜான்சி ராணியும் அவரின் தோற்றத்தை உடையவரும் கைகோக்கின்றனர் (ஆங்கில மொழியில்)[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ ஜான்சி ராணி சன. 17 '12