ஜெமினி திட்டம்
ஜெமினி திட்டம் (Project Gemini) என்பது நாசாவின் இரண்டாவது மனித விண்வெளிப்பறப்புத் திட்டம் ஆகும். ஐக்கிய அமெரிக்காவின் திட்டமான இது, 1961-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 1966-ஆம் ஆண்டில் நிறைவுபெற்றது. மெர்க்குரித் திட்டம் மற்றும் அப்பல்லோ திட்டங்களுக்கு இடையே இத்திட்டம் செயற்படுத்தப்பட்டது. ஜெமினி விண்கலமானது இரண்டு விண்வெளி வீரர்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. 1965-லிருந்து 1966-வரை பத்து பணிக்குழுக்கள் புவி தாழ்வட்டப்பாதையில் சென்று வந்தனர். சோவியத் ஒன்றியத்துடனான பனிப்போர் விண்வெளிப் போட்டியில் ஐக்கிய அமெரிக்கா முன்னிலை பெறுவதற்கு இத்திட்டம் வழிவகுத்தது.
திட்ட மேலோட்டம் | |
---|---|
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
பொறுப்பான நிறுவனம் | நாசா |
தற்போதைய நிலை | நிறைவுபெற்றது |
திட்ட வரலாறு | |
திட்டக் காலம் | 1961–1966 |
முதல் பறப்பு | ஏப்ரல் 8, 1964 |
பணிக்குழுவுடனான முதலாவது பறப்பு | மார்ச் 23, 1965 |
கடைசிப் பறப்பு | நவம்பர் 11–15, 1966 |
வெற்றிகள் | 12 |
தோல்விகள் | 0 |
பகுதியளவிலான தோல்விகள் | 2: |
ஏவுதளம்(கள்) | கென்னடி விண்வெளி மையம் |
ஊர்தித் தகவல்கள் | |
ஊர்தி வகை | விண்கலம் |
பணிக்குழுவுடனான ஊர்தி(கள்) | ஜெமினி |
பணிக்குழுக் கொள்ளளவு | 2 |
ஏவுகலம்(கள்) |
|
அப்பல்லோ திட்டத்தின் குறிக்கோளான - நிலவில் விண்வெளி வீரர்களை தரையிறக்கத்துக்குத் - தேவையான விண்பறப்புத் தொழில்நுட்பங்களைக் கட்டமைத்து மேம்படுத்துவதே ஜெமினி திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். நிலவுக்கு சென்று திரும்பும் அளவுக்கு அதிக காலம் விண்ணில் இருப்பதையும், விண்கலத்துக்கு வெளியில் பணிபுரிவதையும், விண்ணிலேயே இருவேறு விண்கலங்களை பொருத்தி இணைத்தல் தொழில்நுட்பத்தையும் இத்திட்டத்தின் மூலம் செயல்படுத்தி மேம்படுத்தினர். இவ்வாறு அடிப்படையான தொழில்நுட்பங்களையும் செயல்முறைகளையும் மேம்படுத்திய பின்னர், அப்பல்லோ திட்டம் அதன் முக்கிய குறிக்கோளில் முழுக்கவனத்தையும் செலுத்தி வெற்றிகரமாக செயல்படுத்த வழிவகை ஏற்பட்டது.