ஜெய்சுக்லால் காதி

2ஆவது மக்களவை உறுப்பினர்

ஜெய்சுக்லால் காதி (Jaisukh lal Hathi)(19 சனவரி 1909 - 2 பிப்ரவரி 1982) என்பவர் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள சௌராஷ்டிராவில் முலியில் பிறந்தார். இவர் இந்திய அரசாங்கத்தில் மத்திய அமைச்சராகவும் பஞ்சாப் மற்றும் அரியானா ஆளுநராகவும் பணியாற்றினார். இவர் அரசியல் நிர்ணய சபை, மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். 1909-ல் சுரேந்திரநகரில் பிறந்த காதி, 1982-ல் இறந்தார்.[1]

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

காதியின் தந்தை இலால்சங்கர் காதி சவுராட்டிராவை சேர்ந்தவர். இவர் 27 மே 1927-ல் பத்மாவதியை மணந்தார். இவருக்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.[2] இவர் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள ஆல்பிரட் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். இதன் பிறகு பம்பாய்க்குச் சென்று வழக்கறிஞர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்று இந்திய வழக்குரைஞர் கழகத்தில் சேர்ந்தார்.

நிர்வாக பணி தொகு

1943-ல், அவர் முந்தைய ராஜ்கோட் மாநிலத்தில் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1948-ல், இவர் சௌராஷ்டிரா மாநிலத்தின் தலைமைச் செயலாளராக ஆனார்.

பாராளுமன்ற பணி தொகு

இவர் சௌராஷ்டிரா மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் நிர்ணய சபையின் (1946-47) உறுப்பினராக இருந்தார். இவர் 1950-ல் தற்காலிக பாராளுமன்றத்திற்கும் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மாநிலங்களவை உறுப்பினராக 3 ஏப்ரல் 1952 முதல் 12 மார்ச் 1957 வரை பணியாற்றினார். மீண்டும் இவர், 1957-ல், இந்திய தேசிய காங்கிரசைப் பிரதிநிதித்துவப்படுத்தி இரண்டாவது மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்றாவது முறையாகக் காதி ஏப்ரல் 1962-ல் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஏப்ரல் 3, 1968 வரை பணியாற்றினார். இதைத் தொடர்ந்து இதே நாளில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஏப்ரல் 2,1974 வரை பணியாற்றினார்.[3]

அமைச்சர் மற்றும் கவர்னர் தொகு

காதி 1952-1962 வரை நீர்ப்பாசனம் மற்றும் மின்சாரம், வழங்கல், உள்துறை, பாதுகாப்பு ஆகிய துறைகளை வகித்து மத்திய அமைச்சர்கள் குழுவில் துணை அமைச்சராகவும், அமைச்சராகவும், நீர்ப்பாசன அமைச்சராகவும் பணியாற்றினார். இவர் 1962-64 மற்றும் 1967-69 வரை தொழிலாளர் மற்றும் மறுவாழ்வுத் துறை அமைச்சராக பணியாற்றினார். இவர் 14 ஆகத்து 1976-ல் அரியானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். மேலும் இப்பதவியில் இவர் 23 செப்டம்பர் 1977 வரை பணியாற்றினார்.[4][5] இதனைத் தொடர்ந்து 24 செப்டம்பர் 1977 அன்று பஞ்சாபிற்கு மாற்றப்பட்டார். இங்கு இவர் ஆகத்து 26, 1981 வரை பணியாற்றினார். உடல்நிலை காரணமாகப் பஞ்சாப் ஆளுநர் பதவியிலிருந்து விலகினார்.

பிற நிர்வாக பதவிகள் மற்றும் பொது வாழ்க்கை தொகு

காதி, 1974-ல் மருந்துகள் மற்றும் மருந்து பொருட்கள் ஆணையத்தின் தலைவராக இருந்தார். இந்தப் பொறுப்பின் போது காதி அணைய அறிக்கை (1975) என அறியப்படும் அறிக்கையைச் சமர்ப்பித்தார்.[6] தேசிய வழக்கறிஞர்கள் மன்றத்தின் தலைவராகவும் பணியாற்றினார். பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியாவின் இயக்குநராக இருந்தார். இவர் பாரதிய வித்யா பவனின் தொடக்கத்திலிருந்து பன்னாட்டுப் பிரிவின் தலைவராகவும் மத்திய குழுவின் தலைவராகவும் பணியாற்றினார். சோமநாத் மற்றும் துவாரகா கோவில்களின் அறங்காவலராகவும் பணியாற்றியுள்ளார்.

வெளியீடுகள் தொகு

இந்தியக் கூட்டமைப்பில் இந்திய மாநிலங்கள் வகிக்கும் பங்கினை வரையறுக்கும் நோக்கத்துடன் இவர் 1939-ல் "இந்தியக் கூட்டமைப்பில் மாநிலங்களின் நிலை" எனும் புத்தகத்தினை எழுதினார். "சைடுலைன்சு ஆன் இண்டியன் பிரின்சசு (Sidelights on Indian Princes)" என்பது 1975-ல் வெளியிடப்பட்ட இவரது இரண்டாவது வெளியீடாகும். 1970-1974 வரை பவன் ஆய்விதழில் பல சிறுகதைகளையும் எழுதினார். இவரது வாழ்க்கை வரலாறு "அப்படி நடந்தது" எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.[7]

மேற்கோள்கள் தொகு

  1. "Members Bioprofile". பார்க்கப்பட்ட நாள் 2019-08-10.
  2. "Eminent Parliamentarians" (PDF). Lok Sabha Digital Library. பார்க்கப்பட்ட நாள் 5 June 2020.
  3. "Rajya Sabha Members" (PDF). Raja Sabha. பார்க்கப்பட்ட நாள் 5 June 2020.
  4. "Former Governors". Haryana Raj Bhawan. பார்க்கப்பட்ட நாள் 5 June 2020.
  5. "Former Governors". Punjab Raj Bhawan. பார்க்கப்பட்ட நாள் 5 June 2020.
  6. "Hathi Commission Report on Essential Drugs". Lok Sabha Digital Library. பார்க்கப்பட்ட நாள் 5 June 2020.
  7. Hathi, Jaisukhlal. "As it happened! : autobiography of Jaisukhlal Hathi". WorldCat. Bharatiya Vidya Bhavan. பார்க்கப்பட்ட நாள் 5 June 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெய்சுக்லால்_காதி&oldid=3658366" இலிருந்து மீள்விக்கப்பட்டது