ஞமலி என்பது நாயின் இனங்களில் ஒன்று. இது வேட்டையாடவும், இரவில் வீட்டுக்குக் காவலாகவும் பயன்பட்டது. இதனைப் பற்றியும் இதன் பயன் பற்றியும் சங்கப்பாடல்கள் பல சுவையான செய்திகளைக் குறிப்பிடுகின்றன.

தொடர்படு ஞமலி (புறநானூறு 74), ஞமலி நா (மலைபடுகடாம், அடி 42)
ஞமலி (ஞாளி) வீட்டைக் காக்கும் தொகு
  • ஞமலியை ஞாளி என்றும் வழங்குவர். இது புதியவர் வந்தால் குரைத்து வீட்டுக்காரர்களுக்குக் காட்டிக்கொடுத்துவிடும். [1]
  • தெருவில் உப்பு விற்றுக்கொண்டிருந்த பெண்ணைப் பார்த்து ஞமலி குரைத்தது. அதனைக் கண்டு அவள் வெருவினாள். [2]
ஞமலி வேட்டையாட உதவும் தொகு
  • முயல் வேட்டைக்கும் ஞமலி உதவும். [3]
  • ஞமலி மனவு என்னும் முள்ளம்பன்றியைக் கூட வேட்டையாடும். [4]
  • வேட்டைக்குச் செல்பவர் பல ஞமலிகளுடன் செல்வர். அவற்றைக் கண்டால் மகளிர் அஞ்சுவர். [5]
  • நான் எய்த அம்புக் காயத்துடன் ஆண்யானை ஒன்று இவ் வழியே வந்ததா என்று தலைவியை வினவிக்கொண்டே வந்த தலைவனோடு சினம் கொண்ட ஞமலி ஒன்றும் வந்தது. [6]
  • வேட்டுவன் அம்பு எய்வதற்கு ஏதுவாக அமையும்படி ஞமலி ஆண்முள்ளம்பன்றியை வளைத்துத் துரத்தியது. [7]
  • பொழுது போய் இருட்டும் வரையில் கடமானை வளைத்து வளைத்துத் துரத்திய ஞமலி கூட இளைப்பு வாங்குகின்றன. [8]
ஞமலி நாக்கு தொகு
  • கூத்தருடன் சேர்ந்து மலையேறும் விறலியரின் காலடிகள் மதம் பிடிக்காத ஞமலி நாக்கினைப் போலச் சிவந்து கசிவதை வெளிக்காட்டிக்கொண்டனர். [9]
ஞமலிக்குச் சங்கிலி தொகு
  • ஞமலியை இரும்புச் சங்கிலியால் கட்டி வைப்பர். [10]
ஞமலியின் நட்பு தொகு

அடிக்குறிப்பு தொகு

  1. வலம் சுரித் தோகை ஞாளி மகிழும்;
    அர வாய் ஞமலி மகிழாது மடியின், (அகநானூறு 122)
  2. உமணர் காதல் மடமகள்
    சில் கோல் எல் வளை தௌர்ப்ப வீசி,
    'நெல்லின் நேரே வெண் கல் உப்பு' எனச்
    சேரி விலைமாறு கூறலின், மனைய
    விளி அறி ஞமலி குரைப்ப,(அகநானூறு 140)
  3. பகனாட்,
    பகுவாய் ஞமலியொடு பைம்புத லெருக்கித்
    தொகுவாய் வேலித் தொடர்வலை மாட்டி
    முள்ளரைத் தாமரைப் புல்லிதழ் புரையு
    நெடுஞ்செவிக் குறுமுயல் போக்கற வளைஇக்
    கடுங்கட் கானவர் கடறுகூட் டுண்ணு (பெரும்பாணாற்றுப்படை அடி 112)
  4. சொன்றி
    ஞமலி தந்த மனவுச்சூ லுடும்பின்
    வறைகால் யாத்தது வயின்றொறும் பெருகுவிர் (பெரும்பாணாற்றுப்படை அடி 132)
  5. முளைவா ளெயிற்ற வள்ளுகிர் ஞமலி
    திளையாக் கண்ண வளைகுபு நெரிதர (குறிஞ்சிப்பாட்டு அடி 131)
  6. நொவ்வு இயற் பகழி பாய்ந்தென, புண் கூர்ந்து,
    எவ்வமொடு வந்த உயர் மருப்பு ஒருத்தல் நும்
    புனத்துழிப் போகல் உறுமோ மற்று?' என,
    சினவுக் கொள் ஞமலி செயிர்த்துப் புடை ஆட,
    சொல்லிக் கழிந்த வல் விற் காளை (அகநானூறு 388)
  7. கானவன் வெஞ் சிலை வணக்கி,
    உளமிசைத் தவிர்த்த முளவுமான் ஏற்றையொடு,
    மனைவாய் ஞமலி ஒருங்கு புடை ஆட,
    வேட்டு வலம் படுத்த உவகையன், (நற்றிணை 285)
  8. கல்லென் கானத்துக் கடமா வாட்டி
    எல்லும் எல்லின்று ஞமலியும் இளைத்தன (குறுந்தொகை 179)
  9. மதந்தபு ஞமலி நாவி நன்ன
    துளங்கியல் மெலிந்த கல்பொரு சீறடிக்
    கணங்கொள் தோகையிற் கதுப்பிகுத் தசைஇ
    விலங்குமலைத் தமர்ந்த சேயரி நாட்டத்து
    இலங்குவளை விறலியர் (மலைபடுகடாம் அடி 42)
  10. ஞமலியை இரும்புச் சங்கிலியால் கட்டிப்போடுவது போலத் தன்னைச் சிறைபிடித்த கோச்செங்கணான் குடவாயில் சிறைக்கோட்டத்தில் தன்னைச் சிறை வைத்திருந்தான் என சேரமான் கணைக்கால் இரும்பொறை குறிப்பிடுகிறான்.
    தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
    கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்,
    மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணியத்,
    தாம் இரந்து உண்ணும் அளவை
    ஈன்ம ரோ, இவ் உலகத் தானே? (புறநானூறு 74)
  11. கூர் உகிர் ஞமலிக் கொடுந் தாள் ஏற்றை ஏழகத் தகரோடு உகளும் முன்றில் (பட்டினப்பாலை - அடி 141)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞமலி&oldid=2081664" இலிருந்து மீள்விக்கப்பட்டது