ஞானாவரண விளக்கம்
ஞானாவரண விளக்கம் என்பது ஒரு உரைவிளக்க நூல். இது தோன்றிய காலம் 16-ஆம் நூற்றாண்டு. நூலாசிரியர் குருஞான சம்பந்தர். சிவஞான சித்தியார் என்னும் நூலை இது ‘ஞானாவரணம்’ [1] எனக் குறிப்பிட்டுக்கொண்டு உரை எழுதுவதால் இந்த உரைநூலுக்கு இப் பெயர் அமைந்தது. இது பொருளுரையும் விரிவுரையுமாக அமைந்துள்ளது. சிவஞான சித்தியார் நூலில் உள்ள பரபக்கம், சுபபக்கம் என்னும் இரு பகுதிகளுக்கும் இந்த உரைவிளக்கம் உள்ளது. இந்த உரைவிளக்க நூல் முழுமையும் கிடைக்கவில்லை. சிற்சில பகுதிகள் மட்டுமே கிடைத்து அச்சிடப்பட்டுள்ளன.
இந்த நூல் இரண்டு பிரிப்பாக அச்சிடப்பட்டுள்ளது.
- முதல் பிரிப்பில் பரபக்கம், ஞானாந்தம் ஞானத்தின் முடிவெல்லை அளவியல் ஆகிய 3 பகுதிகள் உள்ளன.
- இரண்டாம் பிரிப்பு சுப பக்கம் பற்றியது. இதில் 4 பகுதிகள் உள்ளன.
இதில் சிவஞான சித்தியார் பாடல்களை விளக்க இந்த விளக்கவுரையின் ஆசிரியர் சில பாடல்களைத் தாமே இயற்றி இணைத்துள்ளார்.
இந்த விளக்கவுரைக்கு உரையாக வெள்ளியம்பலத் தம்பிரான் என்பவர் ‘அரும்பத விவேகம்’ என்னும் பெயரில் மேலும் ஒரு உரை எழுதியுள்ளார். இவர் ஞானாவரண விளக்கம் என்னும் நூலை ‘ஞானாவரண தீபிகை’ என்றும், தமது உரையை ‘அஸ்பஷ்ட பத போதனீயம்’ என்றும் குறிப்பிடுகிறார். திருவாரூர் நிர்மலமணி தேசிகரிடம் இவர் அருட்பேறு பெற்று இந்தப் பதவுரை நூலைச் செய்தாராம்.
ஞானாவரண விளக்கத்தில் 1161 செய்யுடகளுக்கு விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. விளக்கங்களின் ஊடே அருள்நமச்சுவாயர் செய்த ஞானபூசைத் திருவிருத்தம், [2] தத்துவப் பிரகாசம், [3] திருவாய்மொழிப் பாடல் [4] ஆகியவை மேற்கோள் பாடல்களாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
- குருஞான சம்பந்தர் தாமாகப் பாடிச் சேர்த்த பாடல்
- எடுத்துக்காட்டு [5]
கருது உயிர் அசத்தனுந்தான் [6] கணிசம் [7] என்பவரைப் போலத்
தரும் உயிர், சிவன் போல், என்று சைவம் ஓரிடத்தில் சொல்லும்,
பொருளை முற்றுவமை ஆக்கிப் புகல்பவர்க்கு என்றும் ஈசன்
அருள் செயான், அவரைக் கண்டால், அம்ம நாம் அஞ்சுமாறே. [8]
கருவிநூல்
தொகுமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005
அடிக்குறிப்பு
தொகு- ↑ ஞானம் ஆவரணம், ஞானம் என்பது உள்ளுணர்வு. ஆவரணம் என்பது மறைப்பு. உலகியலறிவு உள்ளுணர்வை மறைத்திருக்கிறது என்பது பொருள்.
- ↑ 18 பாடல்
- ↑ 2 பாடல்
- ↑ பாடல் எண் 3016
- ↑ பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது.
- ↑ உயிர் – அசத்து, உடல் – சத்து
- ↑ காலம், காலக் கணிப்பு
- ↑ உயிர் என்பது சிவன்(சீவன்). இது அசத்து. உடல் சத்து என்னும் சத்தி. இரண்டையும் காலம் சேர்த்துவைக்கும். இது சைவக் கோட்பாடு. இதனை உணராமல் பொருளே முற்றும் என்று என்று கொண்டவருக்கு ஈசன் அருள் கிட்டாது. அவரைக் கண்டால் நாம் அஞ்சி ஒதுங்க வேண்டும்.