ஞான வெட்டியான் (நூல்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஞான வெட்டியான் என்பது சித்தர்களின் கொள்கைகளை விளக்கும் நூல்களுள் ஒன்று. ஞான வெட்டியான் என்பதற்கு அறிவுநெறியைக் காட்டுகின்றவன் என்று பொருள். வெட்டியான் ஒருவன் உயர் வகுப்பினரை நோக்கிக் கூறுவது போல இந்நூல் பாடப்பட்டுள்ளது. வெட்டியான் ஒருவன் அறிவுரை கூறுவதால் ஞான வெட்டியான் என்று பெயர் வழங்கப்படுகிறது.
நூலாசிரியர்
தொகுஞான வெட்டியான் திருவள்ளுவரால் இயற்றப்பட்ட நூலாகும்.சித்தர்களின் வரலாற்றை ஆய்ந்தவர்கள் பலர் இந்நூலை வள்ளுவர் பாடியதாக நம்புகின்றனர். இந்நூல் திருவள்ளுவரால் பாடப்பட்டது என்றாலும் திருக்குறளைப் பாடிய வள்ளுவர் வேறு, ஞான வெட்டியான் பாடிய வள்ளுவர் வேறு என்று கொள்ளவேண்டும் என்று சிலர் சொன்னாலும் திருக்குறளின் பல கருத்துகள் ஞான வெட்டியானில் காணப்படுவதால் இந்நூல் வள்ளுவர் பாடியதெனக் கூறுகின்றனர்.
காலம்
தொகுஞான வெட்டியானில் அதிவீரராம பாண்டியன் பெயரும் அவர் இயற்றிய நைடதத்தின் பெயரும் காணப்படுகிறது.
- "சாயாமல் அதிவீரராமபாண்டியன் சொல்லும் தமயந்தி சரித்திர நைடதமும்" என்பது ஞானவெட்டியான் பாடல். அதிவீரராம பாண்டியன் காலம் கி.பி. 16 ஆம் நூற்றாண்டு. ஆதலால் ஞான வெட்டியான் கி.பி. 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியாக இருக்கவேண்டுமென்பர். இது காலத்தால் பிற்பட்டதாயினும் கருத்துக்கள் பழைமையானவை. இவை பதினெண் சித்தர்களின் கருத்துக்களை எடுத்துரைப்பவை.
நூலின் சிறப்பு
தொகுஇந்நூலில்,
- மக்கள் தாயின் வயிற்றில் கருக்கொள்ளுவது
- கருவிலே வளர்வது
- கருவில் வளரும் குழந்தைகளுக்கு அங்கக் குறைகள் ஏற்படுவதன் காரணம்
- அங்கக் குறைகள் ஏற்படாமல் நல்ல குழந்தைகளைப் பெறும் வழி
- குழந்தை பிறந்து வளரும் விதம்
- நோயணுகாமல் உடலைப் பேணிக்காக்கும் வழி
- உடலை வலுப்படுத்தும் யோகநெறி
- பிணிகளைத் தடுப்பதற்கான காயகல்பம்
- வாதமுறை
இவை பற்றி கூறப்பட்டுள்ளன.
பொதுவாக மக்கள் அனைவரும் ஒரே இனம் என்பதை இந்நூல் வலியுறுத்துகிறது. சாதி மத இனபேதம் பாராட்டுவோர் அறிவற்றவர்கள், மனித சமுதாய ஒற்றுமையை விரும்பாதவர் என்பதை இந்நூல் எடுத்துரைக்கிறது. மதம், சாத்திரம், தெய்வம், மதவேடம் முதலியவைகளால் மக்களை அறிவீனராக்கும் குருமார்களை இந்நூல் அம்பலப்படுத்துகிறது.
உசாத்துணை
தொகு- சாமி. சிதம்பரனார், 'சித்தர்கள் கண்ட விஞ்ஞானம்- தத்துவம்', விற்பனை உரிமை- என் சி பி எச்(பிரைவேட்) லிமிடெட், சென்னை. வெளியிட்டோர்- இலக்கிய நிலையம்.1961