ஞெலி என்னும் சொல் தீப்பற்றி எரிதலைக் குறிக்கும். [1] ஞெலிகோல் என்பது தீக்கடைக்கோல். (sticks for producing fire by friction) இதன் பயன்பாட்டைச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ஞெகிழ், ஞெகிழி என்னும் சொற்கள் இதனோடு தொடர்புடையன.

  • மாடு மேய்க்கும் இடையன் கையால் முயன்று தீக்கடைக்கோலின் உதவியால் தீ மூட்டினான். அந்த்த் தீயின் உதவியால் காட்டு மூங்கில் துண்டில் துளை செய்து புல்லாங்குழல் செய்தான். அதில் பாலைப்பண் பாடி மேயும் மாடுகளை மகிழ்வித்தான். [2]
  • இடையன் தன் ஞெலிகோலை மழையில் நனையாமல் இருக்கத் தோல் பையில் கலப்பை அதள் போட்டுச் சுருக்கிக்கொண்டான். [3]
  • புலி களிற்றைக் கொன்று உண்டது போக விட்டுவிட்டுச் சென்ற மிச்சத்தைக் காட்டில் வாழும் பழங்குடி மக்கள் கோத்து உப்புக்கண்டம் போட்டு வைப்பார்கள். மிச்சத்தை உப்பு விற்க வரும் உமணர்களுக்கு ஞெலிகோலால் தீ மூட்டிச் சுட்டுத் தருவார்கள். [4]
  • அதியமான் அரண்மனையில் இருக்கும்போது வீட்டுக் கூரையில் செருகி வைத்திருக்கும் ஞெலிகோல் போன்றவன். போருக்குச் சென்றால் அது பற்றவைத்த தீ போன்றவன். [5]
ஞெலிகோலால் தீ மூட்டுதல்

அடிக்குறிப்பு தொகு

  1. ஐங்குறுநூறு 307 புறநானூறு 331-4
  2. ஒன்று அமர் உடுக்கை, கூழ் ஆர் இடையன்
    கன்று அமர் நிரையொடு கானத்து அல்கி,
    அம் நுண் அவிர் புகை கமழ, கைம் முயன்று
    ஞெலிகோல் கொண்ட பெரு விறல் ஞெகிழிச்
    செந் தீத் தோட்ட கருந் துளைக் குழலின்
    இன் தீம் பாலை (பெரும்பாணாற்றுப்படை 175 முதல்)

  3. வான் இகுபு சொரிந்த வயங்கு பெயற்கடை நாள்,
    பாணி கொண்ட பல் கால் மெல் உறி
    ஞெலி கோல் கலப் பை அதளொடு சுருக்கி,
    பறிப் புறத்து இட்ட பால் நொடை இடையன் (நற்றிணை 142)
  4. புனந்தலைப்,
    புலிதொலைத்து உண்ட பெருங்களிற்று ஒழிஊன்
    கலிகெழு மறவர் காழ்க்கோத்து ஒழிந்ததை
    ஞெலிகோற் சிறுதீ மாட்டி, ஒலிதிரைக்
    கடல்விளை அமிழ்தின் கணஞ்சால் உமணர்
    சுனைகொள் தீநீர்ச் சோற்றுஉலைக் கூட்டும்
    சுரம் (அகநானூறு 169)
  5. நெடுமான் அஞ்சி;
    இல்லிறைச் செரீஇய ஞெலிகோல் போலத்,
    தோன்றாது இருக்கவும் வல்லன்; மற்றதன்
    கான்றுபடு கனைஎரி போலத்,
    தோன்றவும் வல்லன்_ தான் தோன்றுங் காலே. புறநானூறு 315
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞெலிகோல்&oldid=3093474" இலிருந்து மீள்விக்கப்பட்டது