டயட் கோக்
டயட் கோக் (ஆங்கிலம்: diet coke) கொக்கக் கோலா நிறுவனத்தால் தயாரித்து சந்தைப் படுத்தப்படும் மென்பானங்களுள் ஒன்று. இது டயட் கொக்கக் கோலா, லைட் கொக்கக் கோலா, கோக் லைட் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இனிப்புச் சுவைக்கு இயற்கை சர்க்கரை வேதிப் பொருட்களைப் பயன்படுத்தாமல், செயற்கை வேதிப் பொருட்களை பயன்படுத்துவதால் இதன் கலோரி அளவு மற்றைய கோலா பானங்களை விட குறைவாக உள்ளது.
டயட் கோக் | |
---|---|
வகை | கோலா |
உற்பத்தி | கொக்கக் கோலா நிறுவனம் |
மூல நாடு | ஐக்கிய அமெரிக்கா |
அறிமுகம் | 1982 |
வரலாறு
தொகுஅமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டுள்ள கொக்கக் கோலா நிறுவனம், பல சுவைகளில் மென்பானங்களை தயாரித்து வெளியிடுகிறது. அவற்றுள் மிகவும் புகழ் பெற்றது கோக் (classic coke). 1886ம் ஆண்டுமுதல் கோக் தயாரித்து விற்கப்படுகிறது. இதில் இனிப்பு சுவைக்காக இயற்கையாக விளையும் கரும்பு அல்லது மக்காச்சோள சர்க்கரைப்பாகில் (high fructose corn syrup) இருந்து தயாரித்த சர்க்கரையை பயன்படுத்துவதால், உட்கொள்ளும் கலோரி அளவு அதிகமாக உள்ளது. எனவே கோக் பானத்தைப் பருகுவோர் உடல் எடை அதிகரித்து பருமன் கூடுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, கோக் போலவே சுவையும், ஆனால் அதில் உள்ளதை விடக் குறைந்த கலோரிகளையும் கொண்ட பானத்தை தயாரிக்க கொக்கக் கோலா நிறுவனம் முடிவு செய்தது.
1982 ஆம் ஆண்டு அமெரிக்க சுந்ததிர தினத்தன்று (ஜூலை 4) டயட் கோக் என்ற புதிய பானம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் சர்க்கரை பாகிற்கு பதிலாக ஆஸ்பர்டேம் (Aspertame) என்ற செயற்கை வேதிப்பொருள் இனிப்புச் சுவைக்காக சேர்க்கப் பட்டிருந்தது. அமெரிக்காவைத் தவிர வேறு சில நாடுகளில் 100 சதவிதம் ஆஸ்பர்டேம் பயன்படுத்துவதற்கு பதிலாக சோடியம் சைக்ளமேட், (Sodium cyclamate) ஆஸ்பர்டேம், ஏஸ்சல்ஃபேம் பொட்டாசியம் (Acesulfame pottasium) கொண்ட கலவை பயன்படுத்தப்பட்டது. 2005 ஆம் ஆண்டு முதல் ஆஸ்பர்டேம் பயன்பாடு நிறுத்தப்பட்டு அதனிடத்தில் சுக்ரலோஸ் (Sucralose), ஏஸ்சல்ஃபேம் பொட்டாசியம் கலவை பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில் 1990 களின் இறுதியில் இந்த பானம் அறிமுகப்படுத்தப்பட்டது.
சர்ச்சை
தொகுஆஸ்பர்டேம் போன்ற செயற்கை இனிப்பு வேதிப் பொருட்கள் பானம் பருகுவோரின் உடல்களில் பல உபாதைகளை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் சிலர் கருதுகிறார்கள், புற்று நோய், மூளைக் கழலை (tumour) ஆகிய நோய்களும் இதில் அடங்கும். இத்தகைய சர்ச்சைகளால் தற்போது ஆஸ்பர்டேம் பயன்படுத்தப் படுவதில்லை.
பிற பெயர்கள்
தொகுடயட் கோக், பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களால் விற்கப்படுகிறது. டயட் கோக் வனிலா, கஃபைன் ஃப்ரீ கோக், கொக்கக் கோலா லைட் சாங்கோ அவற்றுள் சில.