டியோக்சிபஸ்
டியோக்சிபஸ் (Dioxippus, பண்டைக் கிரேக்கம்: Διώξιππος)) என்பவர் பண்டைய கிரேக்க ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கராசியம் என்ற விளையாட்டில் வெற்றிகளை ஈட்டியவர். இவரது புகழ் மற்றும் திறமை காரணமாக கிமு 336 ஆண்டைய ஒலிம்பிக் போட்டியில் எந்தப் போட்டியாளனும் இவருடன் போட்டியிடப் பயந்து ஒதுங்கிக் கொண்டாதால் இவருக்கு வாகையராக முடிசூட்டப்பட்டது. இந்த வகையான வெற்றி " அகோனிட்டி " என்று அழைக்கப்பட்டது (அதாவது: தூசி படாமல்). [1] டியோக்சிபசின் மிகவும் பிரபலமான கதை மாசிடோனிய இராணுவத்தைச் சேர்ந்தவரும் அலெக்சாந்தரின் தோழருமான காரக்ஸ் என்வருடன் துவந்தயுத்தத்தில் ஈடுபட்டு வென்றது ஆகும்.
காரக்ஸ்
தொகுஅப்போது முன்னாள் பங்கராசியரான டியோக்சிபஸ், பேரரசர் அலெக்சாந்தர் நடத்திய விருந்து ஒன்றில் கலந்து கொண்டார். மன்னர் விளையாட்டு வீரரை விரும்பி மதித்தார். கர்டியஸ் ரூஃபஸின் கூற்றுப்படி, அலெக்சாந்தரின் ஆட்கள் விருந்தினரை கேலி செய்தனர், அநேகமாக பொறாமையால் இவ்வாறு செய்தனர். இவரை ஒரு பெருந்தீனிக்காரர் என்று குறைகூறினர். விருந்தின் போது, காரக்ஸ் என்ற புகழ்பெற்ற மாசிடோனிய வீரர் குடிபோதையில் சண்டையிட்டு, டியோக்சிபசை அவமதித்து, தன்னுடன் போட்டிக்கு வருமாறு சவால் விடுத்தார். அவமதிக்கபட்ட டியோக்சிபஸ் உற்சாகமாக போட்டிக்கு ஒப்புக்கொண்டார். இருவரைம் சண்டையிடுவதைத் தடுக்க அலெக்சாந்தர் தடுக்க முயன்றார். ஆனால் முகாமில் மற்றவர்கள் இதில் உற்சாகமாக இருந்ததால் முடியவில்லை. மாசிடோனியர்கள் காரக்சை ஆதரித்தனர், மீதமுள்ள கிரேக்கர்கள் டியோக்சிபசை ஆதரித்தனர். [2]
அலெக்சாந்தர் போட்டிக்கு ஒரு நாளை முடிவுசெய்தார். இந்த சண்டையானது கர்டியஸ் ரூஃபஸால் நன்கு விளக்கப்பட்டுள்ளது. டியோக்சிபசோ, பிறந்த மேனியனாக, தேகம் முழுவதும் ஆலிவ் எண்ணெயை தேய்த்துக் கொண்டு, வெளியே வந்ததாகக் கூறப்படுகிறது, இடது கையில் ஒரு ஊதா நிற தளர் மேலங்கியையும் வலது கையில் ஒரு கனமான கிளப்பையும் (கதாயுதம்) சுமந்து சென்றார். ஆனால் காரக்ஸ் கையிலேவேல், ஈட்டி, சுத்தி முதலிய பயங்கர ஆயுதங்களுடன், உடல் முழுவதும் வெண்களக் கவசம் பூட்டிக் கொண்டு வந்து நின்றார். போட்டியின் போது, முதலில் காரக்ஸ் எறிந்த வேலை, கதையால் தட்டி விட்டுத் தப்பித்துக் கொண்டார் டியோக்சிபஸ். பிறகு குறிபார்த்து எறிந்த ஈட்டியையும் தடுத்துத் தள்ளி விட்டார். முயற்சியில் தோல்வியடைந்ததால் கோபமடைந்த காரக்ஸ், கத்தியை உறையிலிருந்து உருவ முயன்றபோது. ஒரு கையைப் பிடித்துக் கொண்டு, மறுகையால் அவரைத் தடுமாறி விழுமாறு தள்ளிவிட்டார். மல்யுத்த தந்திர முறைகள் தெரிந்திருந்ததால், அந்த காரக்சைத் தரையில் தள்ளிவிட்டு, மல்லாந்து விழுந்துகிடந்த அவனது கழுத்தில் ஒரு காலை வைத்து மிதித்து, கோபமாக அழுத்திக் கொண்டிருந்தார். அச்சமயம் அவரைக் கொன்றிருக்கலாம், ஆனால் அலெக்சாந்தர் இந்த கட்டத்தில் சண்டையை நிறுத்தினார். [2]
சிறப்பான வெற்றி என்றாலும் இந்த வெற்றி டியோக்சிபசின் வீழ்ச்சியாக மாறியது. அலெக்சாந்தரும், மாசிடோனியர்களும் போட்டியின் முடிவுகளால் ஏமாற்றமும் சங்கடமும் அடைந்தனர். குறிப்பாக சமீபத்தில் வெல்லபட்ட பாரசீக கைதிகளுக்கு முன்னால் தோல்வி ஏற்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அலெக்சாந்தரின் அதிருப்தியை மாசிடோனியர்கள் கவனித்தனர், டியோக்சிபசின் எதிரிகள் இவரது அறையில் தங்கக் கோப்பை ஒன்றை மறைத்து வைத்து, இவர் மீது திருட்டு குற்றச்சாட்டைக் கூறி டியோக்சிபசிசை சங்கடப்படுத்துக்கு உள்ளாக்க சதி செய்தார். டியோக்சிபசிஸ் இந்த அவமதிப்பை நன்கு உணர்ந்தார். இந்த சதியை மாசிடோனியர்கள் புனைந்ததுள்ளதை உணர்ந்து, சதித்திட்டத்தை விவரித்து அலெக்சாந்தருக்கு ஒரு கடிதம் எழுதினார், பின்னர் அவரது வாள் மீது விழுந்து தற்கொலை செய்து கொண்டார். [3]
இந்த கதையை பண்டைய வரலாற்றாசிரியர்களான டியோடோரஸ் சிக்குலஸ் "லைப்பரி ஆப் ஹிஸ்ட்ரி" மற்றும் குயின்டஸ் கர்டியஸ் ரூஃபஸ் "தி ஹிஸ்டரி ஆஃப் அலெக்சாண்டரில்" போன்றவற்றில் பதிவு செய்துள்ளார். டியோக்சிபசிசின் கதை, இரண்டாம் பிலிப் படுகொலை மற்றும் மாமன்னர் அலெக்சாண்டரின் உயர்வு ஆகியவை பீட்டர் கட்சியோனிஸின் புதினமான "பட்ரிடா" இல் விவரிக்கபட்டுள்ளது பரணிடப்பட்டது 2022-05-22 at the வந்தவழி இயந்திரம் .
குறிப்புகள்
தொகு- ↑ Harris, H. A. (1972). "The Method of Deciding Victory in the Pentathlon". Greece and Rome 19 (1): 61–62. https://archive.org/details/sim_greece-rome_1972-04_19_1/page/61.
- ↑ 2.0 2.1 Quintus Curtius Rufus, "The History of Alexander", Penguin Classics (c) 2004, pg. 229
- ↑ Quintus Curtius Rufus, "The History of Alexander", Penguin Classics (c) 2004, pg. 230