டி.என்.ஏ. கூழ்ம மின்புல புரைநகர்ச்சி

(டி.என்.ஏ. கூழ்ம மின்புலத் தூள்நகர்ச்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

டி.என்.ஏ. கூழ்ம மின்புல புரைநகர்ச்சி (DNA gel electrophoresis) டி.என்.ஏ. கூழ் மூலக்கூற்று உயிரியலில் பயன்படுத்தபடும் ஒரு நுட்ப முறை ஆகும். இம்முறையின் துணையால் டி.என்.ஏ க்களை தனிமைப்படுத்தி, அவற்றை சாயமூட்டி, பின் புற ஊதாக்கதிர்களின் உதவியுடன் பார்க்க முடியும்..[1] மேலும் டி.என்.ஏ.க்கள் தரமானதா, தூய்மையானதா எனவும் அறிந்து கொள்ளலாம். தூய்மை எனில் இவ்விடத்தில் ஆர்.என்.ஏ பற்றி குறிக்கப்படும். ஆர்.என்.ஏ இல்லாத டி.என்.ஏக்கள் தூய்மையானதாகக் கருதப்படும்.

கூழ்ம மின்புல புரைநகர்ச்சி செய்நுட்பத்திற்குப் பயன்படும் கருவி. அகரோசு (agarose) கூழ்மத்தை இந்த இடைமம் நிரப்பிய தொட்டியில் வைக்க வேண்டும். தொட்டிக்கு பின்னே தெரிவது மின்னழுத்தம் தரவல்ல மின்வழங்கி (மின்வாய்). இந்த மின்வாயில் இருந்து மின்னழுத்தமும் மினோட்டமும் செலுத்தப்படுகின்றது. எதிர்மின் முனையானது கறுப்புக் கம்பி (பின்னே இருப்பது). சிவப்பு மின்கம்பி நேர்ம மின்முனை. ஆகவே டி.என்.ஏ ஒளிப்படக்கருவியை நோக்கி நகருகின்றது

டி.என்.ஏ. கூழ்மத்தின் மற்ற பயன்கள் தொகு

  • ஒரு கடத்தி (vector) எ.கோலி உயிரணுக்களில் இருந்து பிரிக்கப்படும் போது, அவற்றின் அடர்வை அல்லது செறிவை (concentration) தோராயமாகக் கணிக்கலாம். துல்லியமாகக் கணிக்க ஒளியலைமானி (Spectrophotometer) பயன்படுத்தப்படும்.
  • டி.என்.ஏ பரும அளவுகள் (எ.கா: 600bp அல்லது 1000bp முதலியன) பற்றி அறிந்துகொள்ளலாம்.
  • பக்டிரியல் படிவாக்கம் செய்யப்பட்ட டி.என்.ஏ வை , இரு கட்டுள்ள நொதிகளால் வெட்டி, அதன் அளவையும், டி.என்.ஏ நாம் விரும்பியதுதானா? இல்லை (அயல் பொருள்) மாசா(contamination) என தெரிந்துகொள்ளலாம்.

கருத்தில் கொள்ள வேண்டிய குறிப்புகள் தொகு

டி.என்.ஏ யை நகர்த்தப் பயன்படும் ஊடகமான கூழ் என்பது இங்கே அகார் எனப்படும் ஒரு வகை கடல் பாசிகளிடம் இருந்து பிரிக்கப்பட்ட ஒரு (Agarose) பொருளாகும். இவை கொதிநிலையில் வைத்து உருக்கி, அறை வெப்பநிலைக்கு கொண்டுவரும் பொழுது , திடமாக அதேவேளையில் மெதுமை உடையதாக (கூழ், gelly வடிவில்) மாறிவிடும். அகரோசில் உள்ள பலபடிகள் ஒன்றாக இணைந்து கூழ் போன்ற தன்மை ஏற்படுத்துவதோடு, மிக நுண்ணிய துளைகளையும் (புரைகள்) உருவாக்கும். மின் அழுத்தம் கொடுக்கும் போது, இக் கூழில் ஏற்பட்ட மிக நுண்ணிய துளைகள் (புரைகள்)(pore) வழியாக டி.என்.ஏ கள் மின்புல புரைநகர்ச்சி விளைவால் ஊடுருவி வெளியேறும். டி.என்.ஏ க்களில் பாசுபேட் (phospho group) உள்ளதால், எதிர்மின்ம நிலையைக் கொண்டிருக்கும். அதனால் நேர்மின்மத்தை நோக்கிய மின்னோட்டம் நடைபெறும்[2].

கூழில் உள்ள நுண்ணிய புரைகள் அகரோசின் விழுக்காடு அளவை (அடர்வை அல்லது நூற்றன் பகுதியை (%)) பொறுத்து அமையும். பொதுவாக சிறிய அளவுள்ள (நீளம் குறைந்த) டி.என்.ஏ களை பார்ப்பதற்கு (எ.கா. 200bp - 10kb kb-kilo base, 1000bp=1 kb) 1- 1.2% கூழ் பயன்படுத்தப்படும். இவ்விடத்தில் விழுக்காட்டின் அளவை குறைந்தால், டி.என்.ஏ கள் விரைவாக வெளியேறுவது மட்டும் அல்லாமல், காணும் பட்டைகள் (DNA bands) தெளிவாகவும் தெரியாது.

பெரிய அளவுள்ள (நீளம் கூடுதலான) டி.என்.ஏ (10kb- 100kb அல்லது chromosome) மிகக் குறைவான கூழ் விழுக்காட்டில் (.7-. 9%) பயன்படுத்தப்படும்.

நகர்தலை பாதிக்கும் கரணிகள்: தொகு

இடைம அடர்வு அல்லது செறிவு (Buffer concentration) தொகு

டி.ஏ.இ. (TRIS, Acetic acid, EDTA), டி.பி.இ. (Tris, Borate, EDTA) அடங்கிய இடைமங்களைப் (Buffers) பயன்படுத்தி டி.என்.ஏ யை குறிப்பிட்ட ஆகரோசு (Agarose) கூழ்மத்தினூடாக நகர்த்தலாம். இடைமத்தில் மின்மமேறியன (அயனிகள்) உள்ளதால், இவற்றை ஒரு குறிப்பிட்ட அளவுள்ள அடர்வுடன் அல்லது செறிவுடன் பயன்படுத்த வேண்டும். மிகையான அடர்வு அல்லது செறிவுடன் மின்மமேறி (அயனி) கடத்தல் ஊக்குவிக்கப்பட்டு , வெப்பநிலை உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்படுகின்றன. இதனால் சில வேளைகளில் டி.என்.ஏ யை நகர்த்த தேவையான கூழ்மம் உருகுவதற்கான வாய்ப்புகள் கூட உண்டு. குறைவான அடர்வு அல்லது செறிவுலோ டி.என்.ஏ நகர்த்தல்களின் விரைவு குறைக்கப்பட்டு, டி.என்.ஏ பரவி ஒழுங்கான கற்றையாகத் தெரியாது.

மின் ஓட்டம் தொகு

டி.என்.ஏ கூழ்ம மின்புலத் புரைநகர்ச்சி மின் ஓட்டத்திற்கு நேரடியான தொடர்புடையது[3]. மிகையான மின் ஓட்டத்தில் விரைவாகவும், குறைவான மின் ஓட்டத்தில் மெதுவாகவும் நகரும்.

கூழ்ம அடர்வு அல்லது செறிவு தொகு

அடர்வு அல்லது செறிவு அளவு கூடும் போது குறைவாகவும், அடர்வு அல்லது செறிவு குறையும் போது விரைவாகவும் ஓடும்.

தேவையான பொருள்கள் தொகு

எத்திடியம் புரோமைடு டி.என்.ஏ க்களுக்கு சாயம் ஏற்றப் பயன்படுகிறது. இப்பொருள் புற்றுநோயைத் தூண்டும் பண்பு கொண்டது. மேலும் எத்திடியம் புரோமைடு டி.என்.ஏ க்களில் உள்-ஊடுருவி (inter chelating agent) அவற்றோடு பின்னிப் பிணைகின்றன. எத்திடியம் புரோமைடு புற ஊதா கதிர்களை (260-280 nm) உள்ளிழுந்து, காணும் அளவில் (செம்மஞ்சள்-சிகப்பு) (580-620 nm) கதிர்களை வெளியேற்றுவதால், நாம் டி.என்.ஏ களை பட்டைகளாக காணலாம்.

இவற்றையும் பாக்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Berg JM, Tymoczko JL Stryer L (2002). Biochemistry (5th ). WH Freeman. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7167-4955-6. http://www.ncbi.nlm.nih.gov/books/bv.fcgi?&rid=stryer.section.438#455. 
  2. Lodish H, Berk A, Matsudaira P, et al. (2004). Molecular Cell Biology (5th ). WH Freeman: New York, NY. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0716743668. http://www.ncbi.nlm.nih.gov/books/bv.fcgi?&rid=mcb.section.1637#1648. 
  3. Robyt, John F.; White, Bernard J. (1990). Biochemical Techniques Theory and Practice. Illinois: Waveland Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-88133-556-8. https://archive.org/details/biochemicaltechn0000roby. 

வெளி இணைப்புகள் தொகு