டேஞ்சரஸ் மூவ்ஸ்
டேஞ்சரஸ் மூவ்ஸ் (Dangerous Moves, பிரெஞ்சு மொழி: La Diagonale du fou ) என்பது 1984 ஆம் ஆண்டு வெளியான சதுரங்கம் பற்றிய ஒரு பிரெஞ்சு மொழித் திரைப்படமாகும். இதை அறிமுக இயக்குநர் ரிச்சர்ட் டெம்போ இயக்க, ஆர்தர் கோன் தயாரித்தார். இப்படத்தில் மைக்கேல் பிக்கோலி, அலெக்சாந்தரே அர்பாட், லிவ் உல்மேன் ஆகியோர் முதன்மை வேடங்களை ஏற்று நடிக்க லெஸ்லி கரோன், பெர்ன்ஹார்ட் விக்கி ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர்.
டேஞ்சரஸ் மூவ்ஸ் Dangerous Moves | |
---|---|
இயக்கம் | ரிச்சர்ட் டெம்போ |
தயாரிப்பு | ஆர்தர் கோன் மார்ட்டின் மரிக்னாக் |
கதை | ரிச்சர்ட் டெம்போ |
இசை | கேப்ரியல் யாரெட் |
நடிப்பு | மைக்கேல் பிக்கோலி அலெக்ஸாண்ட்ரே அர்பாட் லிவ் உல்மான் |
ஒளிப்பதிவு | ரவுல் கோடார்ட் |
படத்தொகுப்பு | ஆக்னெஸ் கில்லெமோட் |
விநியோகம் | கௌமோன்ட் |
வெளியீடு | ஏப்ரல் 25, 1984 |
ஓட்டம் | 110 நிமிடங்கள் |
நாடு | பிரான்சு சுவிசர்லாந்து |
மொழி | பிரஞ்சு மொழி |
மொத்த வருவாய் | $2.5 million[1] |
இந்தப் படம் பிரான்சு மற்றும் சுவிட்சர்லாந்தில் உள்ள நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பாக உருவானதாகும்.
கதைச்சுருக்கம்
தொகுகதை நடக்கும் காலம் சோவியத்துக்கும், அமெரிக்காவுக்கும் பனிப்போர் உச்சம் தொட்ட 90களின் நடுப்பகுதி ஆகும். அக்காலகட்டப் பின்னணியில் உலக சதுரங்க வாகையர் இறுதிப் போட்டியில் மோதும் இரண்டு வித்தியாசமான மனிதர்களின் கதையைச் சொல்கிறது. ஜெனிவாவில் உலக சதுரங்க வாகையர் போட்டி நடக்கிறது. அதன் இறுதிப்போட்டியில் எதிரும் புதிருமான இரண்டு உருசிய போட்டியாளர்கள் மோதுகின்றனர். மூத்தவரான 52 வயது அகிவா, பொதுவுடமை சித்தாந்தத்தின் தீவிர ஆதரவாளர். முதலாளித்துவத்தை ஒழித்தால் மட்டுமே உலகில் வறுமையை ஒழிக்கமுடியும் என்று நம்புபவர். அவரை எதிர்த்து மோதும் இன்னொரு உருசியரான 35 வயதான பாவியஸ் ஒரு முக்போ, சோவியல் ஒடுக்குதலில் இருந்து தப்பிக்க அவர் பல ஆண்டுகளுக்கு முன்பு தன் தாய் நாட்டைவிட்டு மேற்கத்திய நாடுகளுக்குச் சென்றவர். அங்கெல்லாம் அடையாளச் சிக்கலை எதிர்கொண்டவர்.
இயல்பாகவே போர்குணம் கொண்ட இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் இருவருக்கும் ஒரே நாட்டையும், இனத்தையும் சேர்ந்த சகோதரர்கள் என்ற உள்ளுணர்வு இருக்கிறது. ஆனால் அவர்கள் சார்ந்துள்ள சித்தாந்தம் அந்த விளையாட்டுக் களத்தில் அந்த சகோதர உணர்வை அழிக்கிறது. அகிவா-பாவியஸ் இடையேயான இறுதிப்போட்டியில், இருவருடைய சித்தாந்தங்களும் எவ்வாறு மோதி உடைகின்றன என்பதே கதையாகும்.
நடிகர்கள்
தொகு- அகிவா லீப்ஸ்கைண்டாக மைக்கேல் பிக்கோலி
- பாவியஸ் ஃப்ரோமாக அலெக்ஸாண்ட்ரே அர்பாட்
- ஃப்ரோமாக லிவ் உல்மான் மெரினா
- ஹெனியா லிப்ஸ்கைண்டாக லெஸ்லி கரோன்
- ஃபெல்டனாக வோஜ்சிக் ப்சோனியாக், ஃப்ரோமின் டீம்
- ஜேன்-ஹியூஸ் ஆங்லேட் மில்லராக, ஃப்ரோமின் டீம்
- லீப்ஸ்கைண்டின் நண்பராக டேனியல் ஓல்ப்ரிச்ஸ்கி டாக்-டாக்
- ஃபோல்டஸாக ஹூபர்ட் செயிண்ட்- மக்காரி
- லைப்ஸ்கைண்டின் நண்பரான கெரோசியனாக மைக்கேல் ஆமோன்ட்
- யாச்விலியாக பியர் மைக்கேல்
- ஃபடென்கோவாக செர்ஜ் அவேதிகியன்
- அன்டன் ஹெல்லராக பியர் வயல்
- பவுள் அர்பிடராக பெர்ன்ஹார்ட் விக்கி
- ஸ்டஃப்லியாக ஜாக் பௌடெட்
- பராபலாக பெனாய்ட் ரீஜண்ட்
விருதுகள்
தொகுஇந்தத் திரைப்படம் 1984 இல் சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படத்திற்கான அகாடமி விருதை வென்றது; [2] இது சுவிட்சர்லாந்து அரசாங்கத்தால் போட்டிக்கு அனுப்பபட்டது. மேலும் அந்த நாட்டிற்கு முதல் ஆஸ்கார் விருதை இது பெற்றுத் தந்தது. இது லூயிஸ் டெல்லூக் பரிசு, பிரிக்ஸ் டி எல் அகாடமி டு சினிமா மற்றும் சிறந்த அறிமுக இயக்குநருக்கான சீசர் விருதையும் வென்றது .
இசை
தொகுகேப்ரியல் யாரெட் இசையமைத்த குறுவட்டு ஒலிப்பதிவு மியூசிக் பாக்ஸ் ரெக்கார்ட்ஸ் லேபிளில் ( இணையதளம் பரணிடப்பட்டது 2013-12-18 at the வந்தவழி இயந்திரம் ) கிடைக்கிறது.
குறிப்புகள்
தொகு- ↑ "La Diagonale du fou (1984) - JPBox-Office".
- ↑ "The 57th Academy Awards (1985) Nominees and Winners". oscars.org. பார்க்கப்பட்ட நாள் 2013-10-30.