டைகர் பயிற்சி

டைகர் பயிற்சி (Exercise Tiger) அல்லது டைகர் நடவடிக்கை இரண்டாம் உலகப் போரில் நடந்த ஒரு ஒத்திகைப் பயிற்சி நடவடிக்கை. நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு மீதான நேச நாட்டு கடல் வழி படையெடுப்புக்கு ஒரு முழு அளவு ஒத்திகையாக நடத்தப்பட்டது. இந்த ஒத்திகை நடந்து கொண்டிருக்கும் போது ஒரு நேச நாட்டு கப்பல் கூட்டத்தை ஜெர்மானியக் கடற்படைக் கப்பல்கள் தாக்கியதால் 749 அமெரிக்கப் படை வீரர்கள் மரணமடைந்தனர்.

லைம் குடா சண்டை / டைகர் பயிற்சி
ஓவர்லார்ட் நடவடிக்கையின் பகுதி

லைம் குடா
நாள் ஏப்ரல் 28, 1944
இடம் போர்ட்லாந்து, இங்கிலாந்து, லைம் குடா, ஆங்கிலக் கால்வாய்
ஜெர்மானிய வெற்றி
பிரிவினர்
 ஐக்கிய அமெரிக்கா
 ஐக்கிய இராச்சியம்
 ஜெர்மனி
பலம்
1 [கோர்வெட் ரக கப்பல்
8 டாங்கு தரையிறக்கும் கப்பல்கள்
9 எந்திர நீர்மூழ்கிக் குண்டுப் படகுகள்
இழப்புகள்
749 மாண்டவர்
~200 காயமடைந்தவர்
2 கப்பல்கள் மூழ்கின
2 கப்பல்கள் சேதம்
0

1943ம் ஆண்டின் பிற்பகுதியில் பிரிட்டனின் தெற்குப் பகுதியில் டெவன் மாவட்டம் அருகே உள்ள சுலாப்டன் (slapton) என்ற ஊரில் குடியிருந்தவர்கள் அனைவரும் அகற்றப்பட்டு, அப்பபகுதி படையெடுப்பு ஒத்திகைகளுக்குப் பயன்படுத்தப்படலாயிற்று. டிசம்பர் 1943ல் கடல்வழி படையிறக்க ஒத்திகைகள் ஆரம்பித்தன. அவற்றுள் ஒன்று டைகர் பயிற்சி. சுலாப்டன் கடற்கரையின் புவியியல் அமைப்பு யூட்டா கடற்கரையை ஒத்து இருந்ததால் ஏப்ரல் 1944ல் இங்கு படைகளைத் தரையிறக்கும் ஒத்திகை நிகழ்த்தப்பட்டது. 9 டாங்கு தரையிறக்கும் கப்பல்களும் (Tank landing ships) 30,000 வீரர்களும் இதில் பங்கேற்றனர். இந்த கப்பல் கூட்டத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு பிரிட்டானியக் கடற்படையிடம் கொடுக்கப்பட்டிருந்தது.

ஏப்ரல் 28 அன்று ஒத்திகையில் ஈடுபட்டிருந்த நேசநாட்டுக் கப்பல் கூட்டம் லைம் குடா அருகே ஜெர்மானிய ரோந்துப் படகுகளின் கண்ணில் சிக்கியது. அடுத்து நடந்த சண்டையில் இரு தரையிறக்கக் கப்பல்கள் முழுவதும் சேதமடைந்தன. அவற்றில் இருந்த 638 வீரர்கள் மரணமடைந்தனர். மேலும் ஒத்திகையின் போது தங்கள் தரப்பினரின் தாக்குதலில் மேலும் நூற்றுக்கணக்கானோர் பலியானார்கள். இந்த மோதல் லைம் குடா சண்டை என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்கப் படைகளும், பிரிட்டானியப் படைகளும் வெவ்வேறு வானொலி அலைவரிசைகளைப் பயன்படுத்தியதால் தொடர்பு கொள்வதில் ஏற்பட்ட குழப்பம், உயிர்காப்புச்சட்டை அணிவதில் வீரர்களுக்குப் பயிற்சியின்மை, மூழ்கும் கப்பல்களிலிருந்து தப்பியவர்களைக் கடலிலிருந்து காப்பாற்ற சிறு படகுகள் இல்லாதது போன்ற பற்றாக்குறைகளால் உயிரிழப்பு அதிகமாக இருந்தது. டைகர் பயிற்சியில் கற்ற பாடங்களால் நேச நாட்டு உத்தியாளர்கள் இக்குறைகளை நிவர்த்தி செய்ய பல மாற்றங்களை மேற்கொண்டனர். இப்பயிற்சியில் இறந்த வீரர்களின் குடும்பங்களுக்கு அவர்களது மரணச்செய்தி சொல்லப்படவில்லை. நார்மாண்டி படையெடுப்புத் தொடர்பான அனைத்து விஷயங்களும் மிக இரகசியமாக வைக்கப்பட்டிருந்ததால் படையெடுப்பு நிகழ்ந்து சில மாதங்களுக்குப் பிறகே அவர்களது குடும்பங்களுக்குச் செய்தி அனுப்பப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டைகர்_பயிற்சி&oldid=3923979" இலிருந்து மீள்விக்கப்பட்டது