டையாப்ட்டர்

டையாப்ட்டர் (diopter) அல்லது தையொத்தர் என்பது வில்லை அல்லது வளைந்த கண்ணாடியொன்றின் ஒளியின் வலுவை அளக்கப் பயன்படும் அலகு ஆகும். இதன் பெறுமானம் குவியத்தூரத்தின் தலைகீழ் அளவு மீற்றரில் அளக்கப்படுவதற்குச் சமமானதாகும். டையாப்ட்டரிற்கேன்று ஒரு சுருக்கக் குறியீடு அனைத்துலக முறை அலகுகள் பட்டியலில் சர்வதேச அளவில் இல்லை. பெர்டினாண்ட் மோனயர் எனும் பிரஞ்சு கண்நோய் நிபுணர் இந்த அலகை 872 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தார்.[1]

இங்கு காட்டப்பட்டிருக்கும் குவிவு வில்லையின் குவியத்தூரம் 25 செ.மீ, ஆகவே இந்த வில்லையின் ஒளி வலு +4 டையாப்ட்டர்

பார்வை அளவையியலில்

தொகு

குவியமில் குறைபாடுகளான கிட்டப் பார்வை, தூரப் பார்வை போன்றவற்றிற்கு கண் வைத்தியரால் எழுதப்படும் மருந்துக்குறிப்பில் டையாப்ட்டர் பயன்படுத்தப்படுகிறது. குழிவு வில்லைகள் "எதிர்" பெறுமானத்தை உடையது, கிட்டப் பார்வையைச் சரிசெய்ய பயன்படுத்தப்படுகிறது. குவிவு வில்லைகள் "நேர்" பெறுமானத்தை உடையது, தூரப்பார்வையை சரிசெய்யப் பயன்படுகிறது. மிதமான மையோபியா (கிட்டப் பார்வை) கண்ணிற்கான வில்லையின் பெறுமானம் -1.00 இலிருந்து -3.00 வரையாகும், அதேநேரத்தில் தூரப்பார்வைக்கு +1.00 - +3.00 ஆகும்.[2]

மனிதக் கண்ணின் பார்வை வலு அதன் கருவிழிப்படலத்தின் ஒளிமுறிவு ஆற்றலிலும், வில்லையின் ஒளிமுறிவு ஆற்றலிலும் தங்கி உள்ளது. சாதாரண இளைப்பாறும் கண்ணுக்கான பார்வை வலு 60 டையாப்ட்டர்கள் ஆகும். அண்மையிலும் தூரத்திலும் கண் பொருட்களைப் பார்க்கும்போது இவை மாற்றி அமைக்கப் படும் இது விழியின் ஏற்பவமைவுத் தன்மை எனப்படும். மனித விழியின் பிசிர்த்தசை சுருங்கி விரிவடைதலால் அதனுடன் இணைக்கப்பட்டு உள்ள வில்லையும் சுருங்கி விரிகின்றது. வில்லை எவ்வளவு குவிவாகின்றதோ அவ்வளவு அதன் பார்வை வலு உயர்வடையும். மனிதன் வயதாக ஏற்பவமைவுத் தன்மையில் மாற்றம் ஏற்படுகின்றது. சிறுவர் பருவத்தில் 15 - 20 டையாப்ட்டர்கள் , 25 வயதளவில் 10 டையாப்ட்டர்கள் , 50 வயதளவில் 1 டையாப்ட்டர் என இவை மாறுபடுகின்றன.[3]

உசாத்துணைகள்

தொகு
  1. "Vergence, vision, and geometric optics". American Journal of Physics 43 (9): 766–769. 1975-09-01. doi:10.1119/1.9703. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-9505. http://homedirs.wtamu.edu/~dcraig/PHYS4330/1975_vergence_vision.pdf. 
  2. A K KHURANA. Comprehensive Ophthalmology. 4th Edition. 2007.
  3. Abel, Robert. The Eye Care Revolution: Prevent and Reverse Common Vision Problems. s.l. : Kensington Books, 2004.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டையாப்ட்டர்&oldid=2743647" இலிருந்து மீள்விக்கப்பட்டது