தண்டாரணியம்
தண்டாரணியம் என்பது தண்டு ஆரணியம். இது இந்தியாவின் முதுகந்தண்டு போல அமைந்துள்ள தக்கணப் பீடபூமிக் காடுகள். [1]
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் பதிற்றுப்பத்து ஆறாம்பத்தின் பாட்டுடைத் தலைவன். இவன் தண்டாரணியத்துக் கோட்பட்ட வருடையைத் தொண்டியுள் தந்து கொடுப்பித்தான்.
இந்தச் செய்தி இவனைப் பாடிய 10 பாடல்களில் இல்லை.
“நாடுவரை அடுக்கத்து நாடு கைக்கொண்டு பொருது சினம் தணிந்த செருப் புகல் ஆண்மை” [2] என வரும் தொடரைக்கொண்டு விரித்துரைக்கப்பட்டதே வருடை என்னும் மலையாடு பிடித்துவந்த செய்தி.
தண்டாரணியம் என்னும் சொல் தென்னிந்திய முதுகந்தண்டு போல் அமைந்துள்ள காடுகளைக் குறிக்கும் வகையில் பதிற்றுப்பத்து ஆறாம்பத்துக்கு அமைந்த பதிகத்தில் மட்டுமே உள்ளது. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய சங்கப்பாடல்களில் காணப்படவில்லை.
ஆரணியம் என்னும் சொல் கூட சிலப்பதிகாரம் மணிமேகலை உட்பட எந்த நூலிலும் இல்லை.
இந்த உண்மை பதிற்றுப்பத்து நூலுக்கு அமைந்த பதிகம் மிகப் பிற்பட்டது என்பதைக் காட்டுகிறது.
வேதாரணியம் என்னும் ஊரின் பெயர் கூட ஏழாம் நூற்றாண்டு தேவாரத்தில் மறைக்காடு என்றே குறிப்பிடப்படுகிறது.
கம்பராமாயணத்தில் ஆரணிய காண்டம் என்னும் தொகுப்பு உள்ளது.
இவற்றையெல்லாம் இணைத்துப் பார்க்கும்போது தேவார காலத்துக்குப் பின்னர் கம்பராமாயண காலத்துக்கு முன்னர் தோன்றியது என்பது பொருத்தமானது.
இப்படிப் பார்க்கும்போது பதிற்றுப்பத்துப் பதிகம் தோன்றிய காலமும் இதுவே என்பது தெளிவாகிறது.
இதே பதிகத்தில் “கொடுப்பித்து” என வரும் வினைச்சொல்லில் உள்ள “இப்பி” என்னும் இடைச்சொல் வாய்பாடும் பதிகம் பிற்பட்டது என்பதைக் காட்டும் மற்றொரு சான்றாகும்.