தன்பாலின திருமண வழக்கு (இந்தியா)

ஒரே பாலினம் திருமணம் தொடர்பான வழக்குகளை விசாரித்த இந்திய உச்ச நீதிமன்றம், அத்திருமணம் குற்றமல்ல எனக் கருத்து தெரிவித்து இருந்தது. 1954 சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் தன்பாலின திருமணம் செய்து கொள்ள முடியும் வழக்கின் மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இருப்பினும் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு இந்த வழக்குகளை உச்ச நீதிமன்றம் மாற்ற பரிந்துரை செய்துள்ளது.[1] 17 ஏப்ரல் 2023 இல் இவ்வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்த போது, ஒரே பாலின தம்பதிகளின் திருமணத்திற்கு அங்கீகாரம் இல்லாமல், காப்பீடு, வங்கிச்சேவை உள்ளிட்ட சமூக பலன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என இந்திய அரசுக்குக் கேள்வி எழுப்பினர். அதற்கு 3 மே 2023 அன்று இந்திய அரசு ஒரே பாலின தம்பதிகளுக்கு காப்பீடு, வங்கிச்சேவை உள்ளிட்ட சமூக பலன்கள் வழங்குவது குறித்து ஆராய குழு அமைக்கப்படும் எனக் கூறியுள்ளது.[2]

இந்தியக் குடும்ப அமைப்பில் ஆண், பெண் என உயிரியல் வேறுபாடுகள் கொண்ட இருவர் திருமண ஒப்பந்தம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வதே குடிமைச் சமூகத்தின் இயல்பாகும். தன் பாலின ஈர்ப்பாளர்களை குடும்ப அமைப்புடன் ஒப்பிடக்கூடாது. அரசியல் அமைப்புச் சட்டம் 19-ன் படி குடிமக்கள் சேர்ந்து வாழத்தடையில்லை. அதே நேரத்தில் தன்பாலின திருமணத்திற்கு சட்பூர்வ அங்கீகாரம் வழங்குவது பற்றி நாடாளுமன்றம் சட்டம் இயற்றி அறிவிக்க இயலும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. குடும்ப வன்முறை பாதுகாப்பு சட்டத்தில் தன்பாலின ஈர்ப்பாளர்களை சேர்க்க இயலாது என்றும், தன் பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்க கூடாது என இந்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தனது பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது.[3] [4][5]

நங்கை, நம்பி, ஈரர், திருனர் சமூகத்தினர் இந்த விசாரணையை மிகுந்த எதிர்பார்ப்புடன் உற்றுநோக்கி வருகின்றனர். "இரண்டு ஆண்களோ அல்லது இரண்டு பெண்களோ திருமணம் செய்து கொண்டு, தத்து எடுத்து வளர்க்கும் குழந்தைகளுக்கு அன்பைக் கொடுக்க முடியாது என்று சொல்ல முடியாது. தன்பாலின திருமணம் சட்டப்பூர்வமானால் சுகாதாரம், வீட்டுக் கடன் போன்ற அரசு சலுகைகளை பெற முடியும்,” என்று நங்கை, நம்பி, ஈரர், திருனர் சமூகத்தினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு