தமிழியக்கம் (அமைப்பு)

தமிழ் இயக்கம் என்னும் அமைப்பு தூய தமிழ், பகுத்தறிவு, பொதுவுடைமை ஆகிய மூன்று கொள்கைகளைச் செயல்படுத்த 8-10-1972இல் தஞ்சை நகரத்தில் தொடங்கப்பட்டது. இவ்வியக்கத்தின் தலைவராக பேரா. இரா. இளவரசும் பொதுச்செயலாளராக பேரா.தமிழ்க்குடிமகனும் பொறுப்பேற்றார்கள்.

நோக்கங்கள் தொகு

  • துறைதோறும் துறைதோறும் தமிழின் தூய்மையைப் பேணல்;அனைத்து நிலைகளிலும் வளமிக்க புத்துலக அறிவியல் மொழியாக வளர்த்தல்.
  • மூடநம்பிக்கையை ஒழித்து முற்போக்குக் குமுகாயத்தை உருவாக்குதல்.
  • சுரண்டலற்ற பொருளியல் சம நிலை காணல்; அதன் வாயிலாக முரண்பாடற்ற குமுகாயத்தை நிறுவுதல்.

துணை நோக்கம் தொகு

வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் மொழி,வாழ்வு உரிமைகளில் அவ்வப்பொழுது எழும் சிக்கல்களை அக்கறையோடு கண்டுணர்ந்து தீர்வு காணல்.

தொடக்க விழா தொகு

தமிழியக்கத்தின் தொடக்க விழா பேரா.இளவரசு தலைமையில் நடந்தது. புலவர் சேந்தமாங்குடியார் இயக்கக் கொடியை ஏற்றிவைத்தார்.அறிஞர்கள் இலக்குவனார் , ம. இலெ. தங்கப்பா மு.தமிழ்க்குடிமகன் வி. பொ. பழனிவேலன் அ.இறையன் இரா.நிலவழகன் செல்வி கோ.சாந்தி ஆகியோர் உரை நிகழ்த்தினர். பேரா.பா.வளனரசு தலைமையில் பட்டிமன்றமும்நடைபெற்றது. முன்னதாக கொடியேந்திய மிதிவண்டிகளின் அணிவகுப்பும் நிகழ்ந்தது.

தமிழியக்க அருஞ்செயல்கள் தொகு

  • தமிழியக்கக் கிளைகள் தஞ்சை மதுரை கோவை தென்னார்க்காடு திருச்சி புதுக்கோட்டை சென்னை புதுச்சேரி முதலிய இடங்களில் தொடங்கப்பட்டன.
  • திருவையாறு அரசர் கல்லூரி மாணவர்கள் தேவநேயப் பாவாணரின் 72ஆம் பிறந்த நாளை முன்னிட்டுப் "பாவாணர் யார்?" என்னும் இரண்டு பக்கத் துண்டறிக்கையை வெளியிட்டனர்.பாவாணரை அழைத்து விழா கொண்டாடினர்.
  • பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை சுந்தரேசனாரைக் கொண்டு தமிழிசை விழா திருவையாற்று மாணவர்கள் கொண்டாடினர். வேய்ங் குழலிசை, மெல்லிசை,வாய்ப்பாட்டு பெருவங்கிய இசை, தவில் இசை முதலியன இடம்பெற்றன.
  • தமிழியக்கத்தால் தொடங்கப் பெற்ற தமிழிசை விழா ஊர்ப்பெருமக்களால் விரிந்த அளவில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றது.
  • தமிழக ஈழ நட்புறவுக் கழகம் என்னும் அமைப்பு நடத்திய பேரணிகள் போராட்டங்கள் ஆகியவற்றிற்கு உறு துணையாக இருந்து தமிழியக்கம் செயல்பட்டது.
  • 21-6-1981 அன்று வேறு சில அமைப்புகளுடன் இணைந்து ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராகப் பேரணி நடத்தி தமிழக ஆளுநரிடம் கோரிக்கை அளித்தது.
  • தமிழ்வழிக்கல்விக்காக தஞ்சையில் ஊர்வலம் நடத்தி மாநாடு நடத்தியது.
  • தமிழுக்கும் பகுத்தறிவுக்கும் புறம்பாகச் செயல்பட்ட வானொலிக்கு எதிராகக் குரல் எழுப்பியது.
  • சில இதழ்களில் பரப்பப்படும் ஆங்கில மோகத்தை முறியடிக்கும் செயல்களில் ஈடுபட்டது.
  • அனைத்திந்திய அளவில் நடந்த தேசிய இனச்சிக்கல் மாநாட்டில் தமிழியக்கம் சார்பில் கட்டுரை படிக்கப்பட்டது.

இதழ்கள் தொகு

அறிவு கைகாட்டி, மாணாக்கன்,மீட்போலை,தமிழியக்கம் ஆகிய இதழ்கள் தமிழியக்கத்தின் நிகழ்ச்சிகளையும் செயல்களையும் வெளியிட்டு வந்தன.

மேற்கோள் தொகு

  • தேவநேயப்பாவாணர் நூற்றாண்டு நிறைவு விழா மலர் (21-4-2002)
  • பேராசிரியர் இளவரசு மணிவிழா மலர் (சூலை 2003)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழியக்கம்_(அமைப்பு)&oldid=3399450" இலிருந்து மீள்விக்கப்பட்டது