இரா. இளவரசு

முனைவர் இரா. இளவரசு (12 சூன் 1939 – 23 சனவரி 2015) ஒரு தமிழ்ப் பேராசிரியர் ஆவார். 'பெருங்கதையின் மொழியமைப்பு' என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். பேராசிரியர்கள் வ. சுப. மாணிக்கம், வ. ஐ. சுப்பிரமணியம் ஆகியோரிடம் பயின்றவர். தனித்தமிழ், பகுத்தறிவு, பொதுவுடைமை ஆகிய கொள்கைகளைப் பரப்ப "தமிழியக்கம்" என்னும் அமைப்பைத் தமிழ்க்குடிமகனுடன் சேர்ந்து உருவாக்கினார்.

கல்லூரி ஆசிரியர்கள் கழகத்தில் முன்னணியில் இருந்து போராடிச் சிறை சென்றார். தமிழக ஈழ நட்புறவுக்கழகம் என்னும் ஓர் அமைப்பைத் தொடங்கிப் பாடுபட்டார். இவர் மேற்பார்வையில் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் ஆய்வு செய்து எம் பில், பி எச் டி பட்டம் பெற்றனர். பிறர் எழுதிய தக்க நூல்களுக்கு அணிந்துரைகள் வரைந்துள்ளார். உலகத் தமிழ் மாநாடுகள், பல்கலைக்கழகக் கருத்தரங்குகள் முதலியவற்றில் கலந்து கொண்டு சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார். தென்மொழி இதழில் கவிதைகளும் கைகாட்டி மற்றும் தமிழியக்கம் இதழ்களில் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். பாரதிதாசன், தேவநேயப்பாவாணர், தெ. பொ. மீனாட்சிசுந்தரம், தனிநாயக அடிகள், பண்ணாராய்ச்சி வித்தகர், குடந்தை சுந்தரேசனார் முதலியவர்களைப் பற்றிய வரலாற்றுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். பாவாணர் நூற்றாண்டை ஒட்டி தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்ட பாவாணரின் அனைத்து நூல்களையும் அறிமுகப்படுத்த மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு இரண்டு முறை சென்று அங்குள்ள தமிழர்களுக்குத் தமிழ், தமிழின உணர்வை ஊட்டினார்.

ஆய்வாளர், நூலாசிரியர், கவிஞர், தமிழ்ப் போராளி, மாந்தநேயர் என்று பல நிலைகளில் இருந்து வாழ்ந்து வருபவர். சாதி ஒழிப்புப் பணியிலும் பிற நிலைகளிலும் உண்மையாக விளங்குபவர். ஐம்பதுக்கும் மேற்பட்ட சாதிமறுப்புக் காதல் திருமணங்களை நடத்தி வைத்தார். தமிழ்க் குடும்பச் சந்திப்பு நிகழ்ச்சிகளை தஞ்சை, கோவை, பாபநாசம், திருவானைக்காவல், படப்பை (சென்னை) ஆகிய ஊர்களில் நடத்தினார்.

வாழ்க்கைக் குறிப்பு தொகு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகில் உள்ள இராமநாதபுரத்தில் மு. இராமசாமி, அருக்காணி அம்மாள் என்னும் பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். அவர்களது குடும்பம் உழவைத் தொழிலாகக் கொண்டது.

புகுமுகவகுப்பில் கணிதம், இளங்கலையில் பொருளியல் முதுகலையில் தமிழ் படித்து திருவனந்தபுரம் கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியியலை பேரா. வ. ஐ. சுப்பிரமணியத்திடம் மாணவராக இருந்து பயின்று முனைவர் பட்டம் பெற்றார்.

இவரது மனைவி வேலம்மாள் ஒரு தமிழ்ப் பேராசிரியர். இவர்களது திருமணம் காதல் திருமணம். எதிர்ப்புகளை மீறித் திமுக தலைவர் அன்பில் தருமலிங்கம் முன்னிலையில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அன்பு என்ற மகளும் ஓவியன் என்ற மகனும் உள்ளனர். அவர்களது திருமணமும் சாதி மறுப்புத் திருமணமே.

ஆசிரியப்பணி தொகு

 • திருச்சி காசாமியான் உயர்நிலைப்பள்ளி- தமிழாசிரியர் (1963-64)
 • கேரளப் பல்கலைக் கழகம், திருவனந்தபுரம் -ஆய்வாளர் (1965-69)
 • காரைக்குடி அழகப்பா கல்லூரி -தமிழ் விரிவுரையாளர்.(1969-70)
 • புதுக்கோட்டை, தஞ்சை, கரூர் மற்றும் சென்னை அரசுக் கல்லூரிகள் -துணைப் பேராசிரியர் (1970-1997)
 • திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பாரதிதாசன் உயராய்வு மையம் -பேராசிரியர் & தலைவர் (1999-2004)
 • சென்னை இரத்தினவேல் சுப்பிரமணியம் செந்தமிழ்க் கல்லூரி, திருவள்ளுவர் தமிழ்க்கல்லூரி, காஞ்சி மணிமொழியார் தமிழ்க் கல்லூரி ஆகியவற்றில் முதுகலைப் பயின்றாருக்கு ஆசிரியர்.
 • ஐ ஏ எசு முதலிய நடுவணரசு போட்டித் தேர்வு எழுதும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்க்கான தனிப்பயிற்சி நிறுவனங்களில் பகுதிநேரப் பேராசிரியர்.

சிறப்புப்பணிகளும் பொறுப்புகளும் தொகு

 • தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் திட்டக்குழு உறுப்பினர்.
 • தில்லி இலக்கியக் கழக (சாகித்திய அகாதமி)ப் பரிசு நூல் தேர்வுக்குழு உறுப்பினர் .
 • திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகப் பாவேந்தர் உயராய்வு மையப் பேராசிரியர் மற்றும் தலைவர்.
 • உலகத் தமிழ்க் கழகம், கேரள மாநில அமைப்பாளர் (1968)
 • திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் -இணைச்செயலாளர் (1966)
 • உ.த .க . பொதுச்செயலாளர் (1971இல் பாவாணர் முதன்மொழி இதழில் 'இளவரசு பொதுச் செயலாளர் பொறுப்பை உ.த.க.முதலாட்டை விழாவில் ஏற்றுக்கொள்வார் ' என்று அறிவித்தார்)
 • தமிழியக்கம் -தலைவர்/ பொதுச்செயலாளர் (1972)....
 • தமிழக ஈழ நட்புறவுக் கழகம், தலைவர் (1977).....
 • உலகத் தமிழ்க் கல்வி, கலை, பண்பாட்டுக் கழகம் -செயலாளர்

( ஈழத்து ஓவியர் பெனடிக்ட்டு முயற்சியில் உருவானஅமைப்பு )

 • இளங்கோ இலக்கியக் கழகம், தலைவர் (1994)
 • தமிழ்வழிக் கல்வி இயக்கம், நெறியாளர் (1990)
 • தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம், மாநிலத் தலைவர்

(1995-96)

பெற்ற விருதுகள், பாராட்டுகள் தொகு

 • பாவேந்தர் புகழ் பரப்புநர் -தமிழக அரசு (1991)
 • பாவேந்தர் பைந்தமிழ்ச் செல்வர் -பாவேந்தர் பாசறை (1999)
 • பாண்டித்துரைத் தேவர் விருது -முருகாலயம் (24-09-2000)
 • தமிழ வேள் விருது -தலைநகர்த் தமிழ்ச்சங்கம்
 • உலகப் பெருந்தமிழர் விருது -உலகத் தமிழர் பேரமைப்பு
 • மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தமிழ்மாமணி விருது -திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்கம் (2004)
 • பாவேந்தர் பாரதிதாசன் விருது -தமிழ்நாடுஅரசு (2010)
 • தமிழ்நிதி விருது இலக்கிய இணையர்: பேரா.வேலம்மாள், முனைவர் இளவரசு -சென்னைக் கம்பன் கழகம் (2013)

படைப்புகள் தொகு

 • விடுதலை (கவிதை நூல்-1972)
 • தமிழும் தமிழரும் (1997)
 • வரும் புயல் நாங்கள் (கவிதைகள் 2002)
 • நண்பகல் ஞாயிறு(கட்டுரைகள் 2002)
 • அலைகள் (நாள் குறிப்பு இலக்கியம் 2002)
 • நிறைந்த அன்புடன் ...அணிந்துரைகள் (2002)
 • பாவேந்தரின் உலக நோக்கு (ஆய்வு 2002)
 • பாவேந்தர் பாரதிதாசனின் பழம்புதுப் பாடல்கள். (முதன் முதல் நூல் வடிவம் பெறும் 353 பாடல்கள் )
 • இந்திய விடுதலை இயக்கத்தில் பாரதிதாசன்--ஆய்வு (1990)
 • பாரதிதாசன் கடிதங்கள் (ச. சு. இளங்கோவுடன் இணைந்து-2009)
 • பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள்--தலைப்பு அகர வரிசை

முதற் குறிப்பு அகர வரிசை (நோக்கு நூல் 2005)

 • பாரதிதாசன் நூற்றாண்டு விழா -5 இசைப்பாடல்கள் (இணைப்புரையுடன் வெளியீடு)
 • பாரதிதாசனின் திரைப் பாடல்கள் -குறுவட்டில் வெளியீடு
 • பாரதிதாசனின் நினைவு நாளில் புதுவை வானொலியில்

'கேட்டலும் கிளத்தலும்' நிகழ்ச்சி நடத்தியமை (1993)

 • புதுக்குறள்கள் [1]
 • நாவலர் சோமசுந்தரபாரதியாருக்கு அண்ணாமலைப் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கியபோது பாரதிதாசனின் முழுமையான தெளிவான பேச்சின் குறுவட்டு வெளியீடு

போராட்டங்கள், பேரணிகள் தொகு

 • 1985இல் தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டு 24 நாள்கள் சென்னை நடுவண் சிறையில் அடைக்கப்பட்டார்.
 • பேரா. வ .சுப. மாணிக்கம் தலைமையில் தமிழ்வழிக்கல்வி இயக்க நெறியாளாராக மதுரை, திருச்சி, நெல்லை. சென்னை போன்ற நகரங்களில் பரப்புரை ஆற்றினார் (1990).
 • வ. சுப மா. மறைவுக்குப்பின் புலவர் விருதாச்சலனார் தலைமையில் இளவரசு செயலாளராகப் பொறுப்பேற்றுத் தஞ்சையில் தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் மாநாடு, ஊர்வலம் ஆகியவற்றை நடத்தினார்.
 • 1981இல் ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து சென்னைப் பனகல் பூங்காவிலிருந்து ஆளுநர் மாளிகை வரைப் பேரணி நடத்திக் கோரிக்கை மடலை ஆளுநரிடம் அளித்தார்.
 • தமிழ்நாடு ஆசிரியர்-அலுவலர் கூட்டியக்கம் 1985இல் நடத்திய மாபெரும் போராட்டத்தில் கலந்துகொண்டு 24 நாள்கள் சென்னை நடுவண் சிறையில் வைக்கப்பட்டார்.
 • தமிழ்ச்சான்றோர் பேரவை சார்பில் 1995இல் தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்தி நூற்றிரண்டு பேர் கலந்து கொண்ட உண்ணாநோன்பு போராட்டத்தில் பங்கு கொண்டார்.
 • தலைநகர்த் தமிழ்ச் சங்கத்தில் இணைத்துக்கொண்டு பல்வேறு போராட்டங்களில் பங்கு பெற்று இயங்கி வந்தார்.
 • சில ஆண்டுகளாக உடல் நோயுற்றுத் தளர்ந்த நிலையிலும் உள்ளம் தளராமல் தமிழ் மொழி, தமிழின மீட்சிக்குப் போராடி வந்தார்.

மறைவு தொகு

2015 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 22ஆம் நாள் காலமானார்.

நாட்டுடைமையாக்கல் தொகு

இவரது படைப்புகளை தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது. அதற்கான பரிவுத் தொகை 20 சனவரி 2020 அன்று வழங்கப்பட்டது.[2]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._இளவரசு&oldid=3530769" இருந்து மீள்விக்கப்பட்டது