தமிழில் அறிவியல் இதழ்கள் (நூல்)
இரா. பாவேந்தன் எழுதியுள்ள தமிழ் அறிவியல் இதழியல் பற்றிய நூல் தமிழில் அறிவியல் இதழ்கள் [1]. இந்நூலில் நான்கு இயல்களும் (அதிகாரங்களும்) இரண்டு இணைப்புகளும் உள்ளன. சுருக்கமாக மேலை நாடுகளில் அறிவியல் இதழியல் பற்றிக் கூறிவிட்டு (பக்கம் 17-30), தமிழில் வெளிவந்த அறிவியல் இதழ்கள் (பொது அறிவியல், ஆய்வு இதழ்கள் அல்ல) பற்றி முதல்நூல் சான்றுகளுடன் விரிவாக விளக்கிக் கூறுகின்றது. 1800 களில் இருந்து வெளிவந்த ஏறத்தாழ 200 அறிவியல் இதழ்களைப் பற்றி விளக்கியுள்ளார். அவற்றுள் சில தமிழ் மேகசின் (1831), "அறிவைப் பரப்பும் ஏஜன்சி"-யால் வெளியிடப்பட்ட விவேக சிந்தாமணி (1892), அறிவு விளக்கம் (1901), தொழிற்கல்வி (1914), மருத்துவன் (1928), விஞ்ஞான பாஸ்கரன் (1929)என்பன.
தமிழில் அறிவியல் இதழ்கள் | |
---|---|
நூல் பெயர்: | தமிழில் அறிவியல் இதழ்கள் |
ஆசிரியர்(கள்): | இரா. பாவேந்தன் |
வகை: | அறிவியல் இதழ்கள், வரலாறு |
துறை: | அறிவியல், வரலாறு, அறிவியல் இலக்கியம் |
காலம்: | 1998 |
இடம்: | கோயம்புத்தூர், இந்தியா |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 190 |
பதிப்பகர்: | சாமுவேல் ஃபிஷ்கிறீன் பதிப்பகம் , கோயம்புத்தூர் |
பதிப்பு: | 1998 |
ஆக்க அனுமதி: | இரா. பாவேந்தன் |
பெரும்பாலான இதழ்கள் மருத்துவம், வேளாண்மை பற்றிய இதழ்கள். சில இதழ்கள் பொது அறிவியல் இதழ்கள். இவற்றை இயல் 4 இல் பக்.139-143 இல் பகுத்து கூறியுள்ளார். தமிழ் அறிவியல் இதழ்களின் அகரவரிசையை இணைப்பு-2 இல் தந்துள்ளார்.