தமிழ்க் கிறித்தவப் பாடல் நூல்கள்

1853ம் ஆண்டில், “கிறிஸ்தவ இலக்கியச் சங்கம்” (Christian Literary Society - CLS), தமிழகத்தில் பல்வேறு சபைகளில் பாடப்பட்டு வந்த பாடல்களிருந்து நல்ல பாடல்களைத் தேர்வு செய்து, எல்லா சீர்திருத்தத் திருச்சபைகளும் பயன்படுத்தும் விதமாக கிறிஸ்தவப் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூல் ஒன்றினை வெளியிட்டது. இதனைத் திறம்பட செய்தவர் அருள்திரு. வெப் ஐயர் ஆவார்கள்.

அதன் பின்பு, 1870ம் ஆண்டில், கனம். வாஷர்பான் ஐயர் தலைமை வகித்து நடத்திய கிறிஸ்தவ இலக்கியச் சங்கக் கூட்டத்தில், புதிய பாடல்கள் சேர்க்கப்பட்டன. பழைய பாடல்கள் திருத்தப்பட்டன. இதனால் நூல் பெரிதானது. ஜே.எஸ். சாண்ட்லர் ஐயர், மூன்றாம் பதிப்பில் இன்னும் பல புதிய கீர்த்தனைகளைச் சேர்த்தார்.

1926ம் ஆண்டில் வெளிவந்த நான்காம் பதிப்பை, லுத்தரன் சபையைத் தவிர மற்ற எல்லா சீர்திருத்தத் திருச்சபைகளும் உபயோகப்படுத்தின.

1950ம் ஆண்டு, மே மாதம், எச்.ஏ. பாப்லி அவர்கள் தலைமையில், கிறிஸ்தவ இலக்கியச் சங்கம,; குன்னூரில் கூடி, லுத்தரன் சபைக்கான 35 பாடல்களையும், அத்தோடு, திருப்பத்தூர், “ஆசிரம பாமாலை“, சங்கை ஜே. ஏ. சாமுவேல் இயற்றிய “கைப்பிரதிப் பாடல்கள்”, கருணாகரபுரியில் அச்சிடப் பெற்ற “கிறிஸ்தவக் கீர்த்தனை மாலை”, “திருமறையூர் இன்னிசைப் பாக்கள்”, ஆசிரியர் எஸ். மாசிலாமணி இயற்றிய “கிறிஸ்தவ இன்னிசைப் பாக்கள்” ஆகிய நூல்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட கீர்த்தனைகளையும் சேர்த்து, மொத்தம் சுமார் 70 கீர்த்தனைகள், புதிய பொது கீர்த்தனை நூலில் இடம் பெறச் செய்தனர். அத்தோடு, அநேக பழைய, பயன்படுத்தாத கீர்த்தனைகளையும் நூலிலிருந்து நீக்கினர். இந்தப் புத்தகம் “கிறிஸ்தவக் கீர்த்தனைகள்”, என்கிற பாடல் புத்தகமாக வெளியிடப்பட்டது. இதில் இடம் பெற்ற அத்தனைப் பாடல்களும் கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்டு, ராகத்தோடும், தாளத்தோடும் அமைந்தவையாகும். இப்புத்தகத்தில் 400 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள், 132 பாடல்கள், 23 குருமார்களால் (ஐயர்), இயற்றப்பட்டவை.

1988ல், வழக்கில் இல்லாத பாடல்கள் நீக்கப்பட்டு, புதுப் பாடல்கள் சேர்க்கப்பட்டு, பதினான்காவது திருத்திய, விரிவாக்கப் பதிப்பு, “கிறிஸ்தவக் கீர்த்தனைகளும், புத்தெழுச்சி கீதங்களும்”, என்ற பாடல் புத்தகம் வெளியிடப்பட்டது. இத்தொகுப்பில் புதிதாக சேர்க்கப்பட்ட பெரும்பான்மையான பாடல்கள், தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் சுமார் இருபது ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பாடல்களாகும். இப்பாடல்கள் கர்நாடக இசையில் அமையாதவைகளாகும்.

1980ல், நெல்லை திருச்சபையின், இருநூறாண்டு நிறைவு விழா நினைவாக, திருநெல்வேலி திருமண்டலம், “கீதங்களும் கீர்த்தனைகளும்”, என்ற பாடல் புத்தகத்தை வெளியிட்டது. இதில் பாமாலைப் பாடல்கள், கீர்த்தனைப் பாடல்கள், புத்தெழுச்சிப் பாடல்கள், ஜெபப்புத்தகம் ஆகியவைகள் அடங்கும். இது ஒரு நல்ல புத்தகம். நாம் பாடும் அனைத்துப் பாடல்களும் ஒரே புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது போற்றுதற்குரியது. ஆனாலும் இந்நூலில் ஒரு குறை, அது யாதெனில், பாடலாசிரியர் அகராதி அல்லது கவிஞர் அகராதி விடுபட்டுப் போயிருப்பதுதான்.

வெளி இணைப்பு

தொகு