தமிழ்நாடு தனியார் பள்ளி கட்டண நிர்ணயக் குழு

தமிழ்நாட்டின் தனியார் பள்ளிக் கட்டண நிர்ணயக் குழு தமிழக அரசால் பெற்றோர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப தனியார் பள்ளிகளில் நிலவும் தன்னிச்சையான கட்டண வீதங்களை முறைப்படுத்தும் நோக்கத்துடன் திசம்பர் 2009இல் ஏற்படுத்தப்பட்டது. இதன் தலைவராக நீதியரசர் கோவிந்தராசன் நியமிக்கப்பட்டார். தமிழ்நாட்டிலுள்ள 10,233 மானியம் பெறாத பள்ளிகளின் கட்டுமானம், ஆசிரியர்களின் ஊதியம், மற்றபிற செலவினங்கள் ஆகியவை குறித்த தகவல்களைப் பெற்று, அவ்வகை தகவல்களைத் தர மறுத்த 701 பள்ளிகள் உள்ளிட்ட 10,934 தனியார் பள்ளிகளுக்கான கட்டணங்களை பரிந்துரைத்தது. 955 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையை தமிழக அரசு அக்டோபர் 21, 2010 அன்று தனது இணைய தளத்தில் வெளியிட்டது. [1]

ஆனால் இந்தக் கட்டண வீதங்களை ஏற்க மறுத்த 6,500 பள்ளிகள் இந்த கட்டணங்களை மீளாய்வு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றதில் முறையிட்டன. இதனை ஏற்ற நீதிமன்றம் இந்தப் பள்ளிகளுக்கான கட்டணங்களை நான்கு மாதங்களில் மீளாய்வு செய்யுமாறு உத்தரவிட்டது. கட்டண வீதங்களை வெளியிட்டபிறகு தனது பொறுப்பிலிருந்து கோவிந்தராசன் விலகியதால் அக்டோபர் 31, 2010 அன்று குழுத் தலைவராக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ரவிராஜ பாண்டியன் நியமிக்கப்பட்டார். [2]

தமிழ்நாடு தொழில்சார் கல்விநிறுவனங்களுக்கான சேர்க்கைக்கான நிரந்தரக் குழுவின் தலைவராக உள்ள ரவிராஜ பாண்டியன் தலைமையில் இந்தக் குழு மாவட்டம் வாரியாக பள்ளிகளை அழைத்து பள்ளிகளின் விவரங்களை கேட்டறிந்தது. நேர்முக கேட்பு 15.11.2010 முதல் 4.5.2011 வரை நடைபெற்றது. ஒவ்வொரு பள்ளியும் அளித்த விவரங்கள் மேல்முறையீடு செய்த போது அளித்த விவரங்கள் நேர்முக கேட்பின்போது அளித்த விவரங்கள் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து தணிக்கையாளர்களின் தணிக்கைக்கு உட்படுத்தி மீண்டும் சரிபார்த்து இறுதி கட்டணங்கள் கொண்ட தனது அறிக்கையை சூன் 13, 2011 அன்று வெளியிட்டது. இந்த கட்டண வீதங்கள் ஒவ்வொரு தனியார் பள்ளிக்கும் கட்டண விகிதத்தை வழங்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. மேலும் பள்ளிக் கட்டண முழு விவரமும் பள்ளி கல்வி இணைய தளத்தில் வெளியிடப்படும். மூன்று கல்வியாண்டுகளுக்கு இந்தக் கட்டணங்கள் செயலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. [3]

தனது அறிக்கையை வெளியிட்டபிறகு ரவிராஜ பாண்டியன் முந்தைய தலைவர் போலவே தம் பதவியிலிருந்து விலகினார். [3]

மேற்கோள்கள்

தொகு
  1. கோவிந்தராசன் குழு அறிக்கை வெளியானது
  2. "Justice Raviraja Pandian to head school fee panel". Archived from the original on 2011-08-08. பார்க்கப்பட்ட நாள் 2011-06-13.
  3. 3.0 3.1 "தட்ஸ்தமிழ் இணையதளத்தில்". Archived from the original on 2011-06-16. பார்க்கப்பட்ட நாள் 2011-06-13.