தமிழ் வரலாறு (நூல்)
தமிழ் வரலாறு என்பது, தமிழ் மொழியின் வரலாறு குறித்து எழுதப்பட்ட நூல் ஆகும். ஞா. தேவநேயப் பாவாணர் எழுதிய இந்நூல் 1967ம் ஆண்டு வெளிவந்தது. தமிழ் மொழி மீது பற்றுக்கொண்டவரும் நீண்ட காலம் தமிழ் ஆய்வுகளில் ஈடுபட்டவருமான நூலாசிரியர், அம்மொழியின் மேன்மை குறித்து இந்நூலில் விளக்குகிறார். தமிழ் இலக்கியத்தின் வரலாறும், தமிழ் பற்றிய பொதுவான செய்திகளுமே தமிழின் வரலாறாகச் சொல்லப்பட்ட ஒரு காலத்தில், தமிழின் வரலாற்றை மொழியியல் அடிப்படையில் ஆராய்ந்து எழுதிய முதல் நூல் இதுவாகும்.
நோக்கம்
தொகுதொன்மை வாய்ந்த தமிழ் மொழியின் பெருமையை மறந்து பிற்காலத்தில் சமசுக்கிருத மொழிக்கு முதன்மை கொடுத்துத் தமிழரே தம்மைத் தாழ்த்திக் கொண்டதாக நூலாசிரியர் கருதுகிறார். இந்தியா விடுதலை பெற்ற பின்னர், ஆரிய மொழிகளுக்கு உயர்வு கற்பித்துத் தமிழுக்கு எதிரான கருத்துக்கள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருவதாகவும், தமிழைக் காக்கவேண்டிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர்கள் பலரும்கூட அதை மறந்து செயற்படுவதாகவும் குறைகூறும் அவர், இந்நிலையில் தமிழின் உண்மையான வரலாறு வெளிவருவது இன்றியமையாதது என்று எண்ணினார்.
ஆங்கிலம் கற்ற தமிழ் அறிஞரும், பெரும்பாலான அரசியல் கட்சிகளும் தாய்மொழி உணர்ச்சி இல்லாது இருப்பதைச் சுட்டிக்காட்டிய நூலாசிரியர், தமிழ்ப் பண்பாட்டைத் தாங்கி நிற்க வேண்டிய உயர்நிலைப் பள்ளித் தமிழ் ஆசிரியர்களுக்கும், புதிய தலைமுறை மாணவர்களுக்கும், பட்டம் பெற்ற பல்கலைக்கழக ஆராய்ச்சி இளைஞர்களுக்கும் இந்நூல் பயன்படவேண்டும் என விரும்புகிறார்.