தமிழ் (சொல்)
தமிழ் என்னும் தமிழ் மொழியைக் குறிக்கும். அத்துடன் இந்தச் சொல் அதனோடு தொடர்புடைய வேறு பல பொருள்களையும் உணர்த்தும் வகையில் பண்டைய இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ளது. தமிழ் என்னும் சொல் தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்மக்கள், தமிழிசை, தமிழ்நெறி ஆகியவற்றை உணர்த்தும் ஆகுபெயர்ச் சொல்லாக இலக்கியங்களில் பயின்றுவந்துள்ளது. இதனை நிகண்டு என்னும் அகராதி நூல்களும் குறிப்பிடுகின்றன.
இலக்கிய ஆட்சி
தொகு- தமிழ்ப்பண்பாடு
- தமிழ் என்னும் சொல் தமிழ்ப்பண்பாட்டைக் குறிக்கும். சேரமான் தகடூர் எறிந்த பெருஞ் சேரல் இரும்பொறை முரசுகட்டில் அறியாது ஏறிய மோசிகீரனைத் தவறு செய்யாது, அவன் துயில் எழுந்துணையும் கவரி கொண்டு வீசியதைக் குறிப்பிடும் மோசிகீரனார் இரு பாற்படுக்கும் நின் வாள் வாய் ஒழித்ததை அதூஉம் சாலும், நல் தமிழ் முழுது அறிதல் [1] என்று குறிப்பிடும்போது தமிழ் என்னும் சொல் இப் பொருளைத் தருவதைக் காணலாம்.
- தமிழ் பேசும் மக்கள்
- தமிழ்நர் பெருமானை [2] தமிழர்[3] என்னும்போது தமிழ் என்னும் சொல் பகுதியாக நின்று தமிழ் பேசும் மக்களைக் குறிக்கிறது.
- தமிழ்நாடு
- தமிழ் என்னும் சொல்லின் அடிப்படையில் அதன் நாட்டைக் குறிக்கும் சொற்களாகத் தமிழகம் [4] தமிழ்நன்னாடு [5] தமிழ்நாடு [6] தமிழ்நாட்டகம் [7] தமிழ்மருங்கு [8] தமிழ் வரைப்பகம் [9] என்னும் சொற்கள் பண்டைய இலக்கியங்களில் பயின்றுவந்துள்ளன.
- தமிழ்நாடு
- தண்டமிழ் பொது எனப் பொறான் (போரிட்டுக் கொண்டி பெற்றான்)[10] என்னும்போது தமிழ் என்னும் சொல்லே தமிழ்நாட்டை உணர்த்துகிறது.
- தமிழிசை
- தமிழிசையுடன் முரசு முழக்கம் இருந்தது என்னும்போது தமிழிசை பற்றிய குறிப்பு உள்ளது. [11]
- தமிழ்மொழி
- தமிழ் நிலைபெற்ற … மதுரை [12] கொண்டி மிகைபடத் தண்டமிழ் செறித்து [13] தமிழ் கெழு கூடல் [14] என வரும் இடங்களில் தமிழ் என்னும் சொல் தமிழ்மொழியை உணர்த்துகிறது.
- தமிழர்
- தமிழ் தலைமயங்கிய தலையாலங்கானத்து … (போர்)[15] தண்டமிழ்க் கிழவர் முரசு முழங்கு தானை மூவர் [16] என்னும்போது தமிழ் என்னும் சொல்லால் தமிழர் குறிப்பிடப்படுகின்றனர்.
- இனிமை
- தமிழ் வையைத் தண்புனல்[17] என்னும்போது வையை ஆற்று இனிய நீர் என்று பொருள் தந்து தமிழ் என்னும் சொல் இனிமை என்னும் பொருளைத் தருகிறது.
- நீர்மை, நெறி
- ஊடியும் கூடியும் வாழ்வது தமிழர் இயல்பு. திருப்பரங்குன்றத்து மக்கள் பத்தி(பக்தி) மேலீட்டால் தண்-தமிழ் ஆய்வந்திலர் (தமிழின் நீர்மை ஆய்ந்து அறியாதவர்கள்) என்னும்போது தமிழ் என்னும் சொல் தமிழ் நீர்மை (தமிழ்நெறி) என்னும் பொருளைத் தருகிறது.[18] குறிஞ்சிப்பாட்டு ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது என்னும் குறிப்புடன் உள்ளது. இதில் தமிழ் என்னும் சொல் தமிழ்நெறியை உணர்த்துகிறது.
நிகண்டு குறிப்பு
தொகு- தமிழ் என்னும் சொல் இனிமை, நீர்மை, தமிழ்மொழி ஆகிய பொருகளைத் தரும். [19]
இதன் வேறுவகையான கண்ணோட்டம்
தொகுமேற்கோள் குறிப்பு
தொகு- ↑ புறநானூறு 50
- ↑ முத்தொள்ளாயிரம் - பாடல் 78 அடி 3
- ↑ முத்தொள்ளாயிரம் - பாடல் 45 அடி 3
- ↑ புறநானூறு 168
- ↑ சிலப்பதிகாரம் காதை 10 அடி 58
- ↑ சிலப்பதிகாரம் காதை 25 பாடலடி165
- ↑ பரிபாடல் திரட்டு 9
- ↑ மணிமேகலை காதை 17 அடி 52
- ↑ தமிழ் வரைப்பகம் கொண்டியாகப் (பெற்றான்) - புறநானூறு 198
- ↑ புறநானூறு 51
- ↑ தமிழ் அகப்படுத்த இமிழ் இசை முழவு - அகநானூறு 227
- ↑ சிறுபாணாற்றுப்படை அடி 66
- ↑ பதிற்றுப்பத்து 76
- ↑ புறநானூறு 58
- ↑ புறநானூறு 19
- ↑ புறநானூறு 35
- ↑ பரிபாடல் 6-60
- ↑ அகறல் அறியா அணி இழை நல்லார், இகல் தலைக்கொண்டு துனிக்கும் தவறு இலர்; இத், தள்ளாப் பொருள் இயல்பின் தண் தமிழ் ஆய்வந்திலார், கொள்ளார், இக் குன்று பயன். – பரிபாடல் 9-25
- ↑ தமிழ் என்ப இனிமை நீர்மை தமிழ் என்ற மொழிக்கும் பேர் - ஆசிரிய நிகண்டு