தரம் பார்த்தல்
தரம் பார்த்தல்(Titration) என்பது அளவறி பகுப்பாய்வு வேதியியலில் ஒரு பொதுவான ஆய்வக முறையாகும். இம்முறை அடையாளம் தெரிந்த ஒரு சோதனைப்பொருளின் செறிவினைக் கண்டறிய உதவுகிறது. தரம் பார்த்தல் சோதனைகளில் கன அளவுகள் முக்கியமான பங்காற்றுவதால் தரம் பார்த்தலானது பருமனறி பகுப்பாய்வு எனவும் அழைக்கப்படுகிறது. செறிவு காணி எனப்படும் வேதிப்பொருளானது, திட்டக் கரைசலாக தயாரிக்கப்படுகிறது.[1] செறிவு மற்றும் பருமன் தெரிந்த ஒரு செறிவு காணி அல்லது தரம் பார்த்தல் கரைசலானது செறிவு காணப்பட வேண்டிய கரைசலுடன் அதன் செறிவினைக் காணும் பொருட்டு வினைபுரியச் செய்யப்படுகிறது.[2] செறிவு காணப்பட வேண்டிய திரவம் வினையில் ஈடுபட்ட கன அளவானது தரம் பார்த்தலின் கன அளவு என அழைக்கப்படுகிறது.