தருமபுரி சாலை விநாயகர் கோயில்

தருமபுரி சாலை விநாயகர் கோயில் என்பது தருமபுரி மாவட்டம், தருமபுரி நகரில் உள்ள ஒரு விநாயகர் கோயிலாகும்.[1] இக்கோயில் அமைந்துள்ள சாலைக்கு சாலை விநாயகர் கோயில் தெரு என இக்கோயிலின் பெயராலேயே பெயர் உண்டானது.

கோயிலின் சிறப்பு

தொகு

இக்கோயில் நூறாண்டுகளுக்கு முற்பட்டக் கோயிலாகக் கருதப்படுகிறது. தருமபுரியில் புதிதாக வாகனம் வாங்குபவர்கள் பெரும்பாலும் இக்கோயிலில் வைத்தே பூசை செய்கின்றனர். திருமண நிகழ்ச்சிகளில் மாப்பிள்ளை அழைப்பும் பெரும்பாலும் இக்கோயிலில் இருந்தே துவங்குவது வழக்கம். நாக தோசத்துக்கு பரிகாரத் தலமாகவும் இக்கோயில் கருதப்படுகிறது.[2]

கோயிலமைப்பு

தொகு

இக்கோயில் திருவுண்ணாழி, மகாமண்டபம் ஆகியவற்றைக் கொண்ட சிறிய கோயிலாகும். கோயிலின் முதன்மை தெய்வமான விநாயகரின் இரு புறங்களிலும் நாகர் திருவுருவங்கள் உள்ளன. விநாயகர் நாற்கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் உள்ளார். இக்கோயில் கிழக்கு நோக்கியுள்ளது. இக்கோயில் திருச்சுற்றில் தென்மேற்கில் துர்கை திருமுன்னும், மேற்கே பாலசுப்பிரமணியர், சிவலிங்கம், கலைமகள் ஆகிய உருவங்களும் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. "தர்மபுரி விநாயகர் கோயில்". அறிமுகம். தினமலர். பார்க்கப்பட்ட நாள் 29 அக்டோபர் 2016.
  2. இரா. இராமகிருட்டிணன் (2016). தகடூர் நாட்டுத் திருக்கோயில்கள். சென்னை: நாம் தமிழர் பதிப்பகம். p. 125.