தருமபுரி சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்

தருமபுரி சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் என்பது தர்மபுரி மாவட்டம், தருமபுரி நகரின் மேற்குப் பகுதியான குமாரசாமிப்பேட்டையில் உள்ள ஒரு முருகன் கோயிலாகும்.

கோயில் வரலாறு தொகு

பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்ச காலத்தில் பல மக்கள் பஞ்ச பாதிப்பு இல்லாத இடங்களை நோக்கி கூட்டம் கூட்டமாக குடிபெயர்ந்தனர். இதேபோல வேலூர் பகுதியைச் சேர்ந்த நெசவுத் தொழிலில் வல்லவரான செல்வந்தர் வையாபுரி முதலியார் என்பவரின் தலைமையில் இருந்த செங்குந்த சமுதாயத்தினர் தருமபுரி பகுதியில் குடியேறினர். முருக பக்தரான வையாபுரி முதலியார் தங்கள் வழிபாட்டுக்காக முருகன் கோயில் கட்ட விரும்பி தகுந்த இடம்தேடியபோது அங்கு முன்பு வாழ்ந்து மறைந்த சித்தர் செயகணேசர் சமாதி அருகில் கோயில் கட்ட தகுந்த இடமாக உள்ளுணர்வால் உணர்ந்து, சமாதிக்கு அருகிலேயே முருகன் கோயில் திருவண்ணாழி வருமாறு திட்டமிடப்பட்டு, அவ்விடத்தில் முருகன் கோயில் கட்டத்துவங்கினர். திருவண்ணாமலை தலத்தில் இருந்து வள்ளி தெய்வானையுடன் மயில்மீது அமர்ந்த நிலையில் ஆறுமுகன் சிலைகளை நிறுவி கோயிலுக்கு திருக்குட நன்னீராட்டு செய்தனர். இக்கோயிலை சுற்றி உருவான குடியிருப்புக்கு குமாரசாமிப்பேட்டை என பெயர் ஏற்பட்டது.[1]

கோயிலமைப்பு தொகு

இக்கோயில் திருவுண்ணாழி, இடைநாழி, மகாமண்டபம் ஆகியவற்றைக் கொண்ட கோயிலாகும். கோயில் பிரகாரத்தில் சித்தர் செயகணேசரின் அதிட்டானம், சிறு விநாயகர் கோயில், வீரபத்திரர் கோயில், நாகர் சிற்பங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலுக்கு 1914 இல் ஐந்து மாட இராச கோபுரம் கட்டப்பட்டது. 1971 இல் இராச கோபுரத்திற்கு வெளியே நடராசருக்கு ஒரு பெரிய மண்டபம் கட்டப்பட்டது. கோயில் வளாகத்தில் திருமாலுக்கு ஒரு கோயில் உள்ளது.

தேர்த் திருவிழா தொகு

இக்கோயிலில் பங்குனி உத்திரத்தின்போது தேர்த்திருவிழா நடைபெறுகிறது. இதில் சற்று தொலைவுக்கு பெண்கள் மட்டுமே வடம்பிடித்து தேரை இழுக்கும் வழங்கம் இருக்கிறது. [2]

மேற்கோள்கள் தொகு

  1. இரா. இராமகிருட்டிணன் (2016). தகடூர் நாட்டுத் திருக்கோயில்கள். சென்னை: நாம் தமிழர் பதிப்பகம். p. 112.
  2. "சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம்". செய்தி. தினமணி. 29 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 29 அக்டோபர் 2016.