தலைத்தோற்றம்

தலைத்தோற்றம் என்பது புறநானூற்றுப் பாடல்களுக்குத் தரப்பட்டுள்ள துறைகளில் ஒன்று.

இலக்கியம்

தொகு

புறநானூற்றுப் பாடல்களில் ஒரே ஒரு பாடல் இத் துறையினதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. வெட்சித் திணையில் வரும் இந்தப் பாடல் ஆனிரைகளைக் கவர்ந்துவரும் வீரனுக்கு மகளிர் விருந்தளிக்க வேண்டும் என்று கூறுகிறது.

பகைவர்களைப் போரில் வென்று அவர்களது ஆனிரைகளைக் கவர்ந்துவருகிறான் என் தலைவன். அவனை வரவேற்பதில் அவனுடைய உறவினரைக் காட்டிலும் மென்மையான சாயல் அழகு கொண்ட மகளிர் முன்னே நில்லுங்கள். நறவுக் கள்ளை மொண்டு வையுங்கள். மாட்டு இறைச்சி சமைக்கட்டும். கால் நட்டுப் பச்சைப் பந்தல் போடுங்கள். ஆற்றிலிருந்து ஈர மணல் கொண்டுவந்து அதில் பரப்புங்கள். இப்படி வரவேற்பது அக்கால வழக்கம்.[1] தமிழ் இலக்கணத்தில் புறப்பொருள் திணைகளுள் ஒன்றான வெட்சித் திணை தொடர்பில் தலைத்தோற்றம் என்பது அத்திணையின் ஒரு துறை அல்லது உட்பிரிவு ஆகும். பகைவரின் ஆநிரைகளைக் கைப்பற்றிக் கொண்டுவரும் வெட்சி மறவனை, அவனுடைய சுற்றத்தினர் மகிழ்ந்து வரவேற்று மொழிவது தலைத்தோற்றம் என்னும் துறையாகும்.

தலைத்தோற்றம் என்னும் பொருள்படும் பின்வரும் பாடல் புறப்பொருள் வெண்பாமாலையில் வருகிறது.

விதி

      உரவெய்யோன் இணந்தழீஇ
      வரவுணர்ந்து கிளைமகிழ்ந்தன்று

சான்று

மொய்யணல் ஆநிரை முன்செல்லப் பின்செல்லும் மையணற் காளை மகிழ்துடி, கையணல் வைத்த எயிற்றியர் வாட்கண் இடனாட உய்த்தன்று உவகை ஒருங்கு.

பொருள்

அடர்ந்த தாடியுடன் அலையும் பசுக்கூட்டங்கள் முன்னே செல்ல, அவற்றிற்குப்பின், அவற்றைக் காத்துச் செல்லும் வெட்சி வீரர்கள், துடியினை முழக்கிச் சென்றனர். தன் கணவர் பிரிவால் கையைக் கன்னத்தில் வைத்துத் தம் கணவர் வருகையை எதிர்பார்த்திருந்த தலைவிக்கு இடக்கண் துடித்தது. அத்துடி ஒலியும் கேட்டது. அதனால் அவள் மிகவும் மகிழ்ந்து படைத்தலைவன் வருகையை எல்லாருக்கும் கூறினாள் என்று இப்பாடலில் கூறப்பட்டுள்ளதால், இது தலைத்தோற்றம் என்ற துறைக்குச் சான்றாயிற்று.

இலக்கணம்

தொகு
  • தொல்காப்பியம் வெட்சித் திணையின் நிகழ்வுகளாகக் குறிப்பிடும் 14 இல் இதுவும் ஒன்று. தொல்காப்பியம், புறத்திணையியல் 3
  • புறப்பொருள் வெண்பாமாலை வெட்சிப் படலத்தில் வரும் 20 துறைகளில் ஒன்றாக இதனைக் குறிப்பிடுகிறது.

உர வெய்யோன் இனம் தழீஇ வரவு உணர்ந்து கிளை மகிழ்ந்தன்று. புறப்பொருள் வெண்பாமாலை 12

அடிக்குறிப்பு

தொகு
  1. நறவும் தொடுமின்; விடையும் வீழ்மின்;
    பாசவல் இட்ட புன்கால் பந்தல்
    புனல் தரும் இளமணல் நிறையப் பெய்மின்
    ஒன்னார் முன்னிலை முருக்கி, பின்னின்று
    நிரையொடு வரூஉம் என்னைக்கு
    உழையோர் தன்னினும் பெருஞ் சாயலரே
    (மதுரைப் பேராலவாயார் பாடியது - புறநானூறு 262)

சான்றாதாரம் முனைவர் கு.முத்துராசன், எளிய உரையில் புறப்பொருள் வெண்பாமாலை, ஐந்திணைப் பதிப்பகம், சென்னை, சூலை 2004, பக்.21-22. வெளி இணைப்பு

http://www.tamilvu.org/courses/degree/d021/d0213/html/d02132b1.htm

http://www.tamilvu.org/courses/degree/d021/d0213/html/d0213226.htm

"https://ta.wikipedia.org/w/index.php?title=தலைத்தோற்றம்&oldid=3877091" இலிருந்து மீள்விக்கப்பட்டது