தலைமைச் செயலக மொழிபெயர்ப்புப் பிரிவு

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் பிரிவுகளில் ஒன்றாகத் தலைமைச் செயலக மொழிபெயர்ப்புப் பிரிவு இயங்கி வருகிறது.

பணிகள்

தொகு

இந்த மொழிபெயர்ப்புப் பிரிவின் வழியாக நீதியரசர்கள் தலைமையில் அரசு அமைக்கும் விசாரணை ஆணைய அறிக்கைகள், அரசிதழில் வெளியிடப்படும் அறிவிக்கைகள், அரசாணைகள், சுற்றோட்டக் குறிப்புகள், அமைச்சரவைக் கூட்டத்திற்கான குறிப்புகள், காவலர் பதக்க மதிப்புரைகள், அமைச்சர்களின் உரைகள், கொள்கை விளக்கக் குறிப்புகள், மானியக் கோரிக்கைகள், துணை மதிப்பீடுகள், விதிகள், அந்நியச் செலாவணி மற்றும் கள்ளக் கடத்தல் பாதுகாப்பு முறைப்படுத்துதல் தடுப்பு நடவடிக்கைகள், பொதுத்துறையின் மந்தணக் கோப்புகள், பொது நிறுவனங்கள் குழு மற்றும் பொதுக் கணக்குக் குழுக்களின் அறிக்கைகள், ஊடகச் செய்திக் குறிப்புகள் ஆகியவை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்க்கப்படுகின்றன.

மொழிபெயர்ப்புப் பிரிவு, மத்திய அரசிடமிருந்து இந்தியில் வரும் கடிதங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அளிக்கிறது. ஆளுநரின் உரை, நிதியமைச்சரின் வரவு செலவுத் திட்ட உரை, வரவு செலவுத் திட்ட ஆவணங்கள் ஆகியவற்றின் மொழியாக்கப் பணிக்காக நிதித்துறைக்கும், அவ்வாறே, சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது மொழிபெயர்ப்புப் பணிக்காகச் சட்டப்பேரவைச் செயலகத்திற்கும் அவ்வப்போது இப்பிரிவு அலுவலர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.