தளவரிசை
தளவரிசை, தோள் அல்லது பிரஸ்தரம் என்பது, இந்தியச் சிற்பநூல் விதிகளின் படி அமைக்கப்படும் கட்டிடங்களில், சுவர்களையும் தூண்களையும் கொண்ட பகுதிக்கு மேல் அமைக்கப்படும் அலங்கார அமைப்பு ஆகும். இது கூரைத் தளத்தின் விளிம்பை அண்டி அமைகின்றது. கபோதம், மஞ்சம், பிரச்சகாதனம், கோபானம், விதானம், வலபி, மத்த-வாரணம், லூப்பா ஆகிய சொற்களும் இந்த அலங்கார அமைக்கப் பயன்படுகின்ற என மானசாரம் என்னும் சிற்பநூல் குறிப்பிடுகிறது.[1] ஆனால், இச்சொற்களிற் சில தற்கால வழக்கில் தளவரிசையில் குறித்த சில பகுதிகளுக்கான பெயராகப் பயன்படுகின்றன.
உறுப்புக்கள்
தொகுதளவரிசை பல்வேறு உறுப்புக்களை உள்ளடக்கியது. கிடையாக, கீழிருந்து மேல் உத்தரம், ஏராதகம், கபோதம், யாழம் என்னும் உறுப்புக்கள் ஒன்றன்மீது ஒன்றாக அமைந்துள்ளன.[2] உத்தரம் என்பது கட்டிடத்தின் கூரையையும், அதன் மேலுள்ள பகுதிகளையும் தாங்கும் வளை ஆகும். இது தூண்களின் மேல் அமைந்த போதிகைகளின் மேல் அல்லது சுவர்களின் மேல் தாங்கப்பட்டிருக்கும். வளையின் மேல் விளிம்பை அண்டி வளை நீளத்துக்கு ஏராதகம் என்னும் அலங்கார அமைப்புக் காணப்படும். இதற்கு மேல் கபோதம் அமைந்திருக்கும். கபோதம் இரட்டை வளைவு கொண்ட நிலைக்குத்து வெட்டுமுக வடிவம் கொண்டது. இது இது கீழுள்ள சுவர் மேற்பரப்பில் இருந்து வெளிப்புறம் துருத்திக்கொண்டிருக்கும். கபோதத்தின் வெளிப்புற மூலைகளிலும், இடையில் தேவையான இடங்களிலும் கூடு என்னும் அலங்கார அமைப்பு இருக்கும். கூடுகள் வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு வகையான அலங்காரங்களுடன் அமைந்துள்ளன.[3] கபோதத்துக்கு மேல் குறுஞ் சுவர் போன்ற ஒரு உறுப்பு உண்டு. இது யாழம் எனப்படுகிறது. மேற்குறிப்பிட்ட குறுஞ் சுவரின் வெளி மேற்பரப்பில் குறித்த இடவெளிகளில் சிறிய யாழியின் முகங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இதனாலேயே இவ்வுறுப்பை யாழம் என்கின்றனர்.