போதிகை என்பது, கட்டிடங்களில் தூண்களின் மேற்பகுதியாக அமைந்து மேலுள்ள வளையைத் தாங்கும் வகையில் அமைந்த, தூணின் ஒரு கூறு ஆகும். போதிகைகள் தூணின் வெட்டுமுக அளவைவிடக் கூடிய தாங்கு பரப்புக் கொண்டவை இதனால், கட்டிடத்தின் மேற்பகுதியின் சுமையைக் கூடிய பரப்பில் ஏற்றுத் தூணுக்குக் கடத்தும் பகுதியாக அவை தொழிற்படுகின்றன. அத்துடன், கட்டிடங்களுக்கு எழிலூட்டும் ஒரு கூறாகவும் அது உள்ளது.[1] போதிகைகள் வழக்கிலுள்ள இடங்களில் பல்வேறு காலகட்டங்களினூடாகக் கட்டிடக்கலை வளர்ச்சியடையும்போது போதிகைகளும் மாற்றங்களுக்கு உள்ளாகின்றன. அவற்றின் வடிவமும் வேலைப்பாடுகளும் அவற்றுக்கு மாறுபட்ட தோற்றத்தைக் கொடுக்கின்றன. இதனால், கட்டிடங்களின் காலத்தைக் கண்டறிவதற்குப் போதிகைகளும் உதவுகின்றன. பல்வேறு வடிவங்களைக் கொண்ட போதிகைகள் உலகின் பல பகுதிகளிலும் மிகப் பழைய காலத்திலிருந்தே பயன்பாட்டில் இருந்துள்ளன.

பல்லவர் காலத் தூண் மேல் காணப்படும் அலை அலங்காரத்தோடு கூடிய போதிகை

சிற்ப நூல்களும் போதிகைகளும்

தொகு

மானசாரம் போன்ற இந்தியச் சிற்ப நூல்களில் பல்வேறு வகையான போதிகைகள் குறித்தும் அவற்றின் அளவுகள் குறித்தும் விரிவாகப் பேசுகின்றன. போதிகைகளின் அலங்காரம், வேலைப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் சித்திர போதிகை, பத்திர போதிகை, தரங்கிணி போதிகை என்னும் மூன்று வகையான போதிகை வகைகளை மானசாரம் குறிப்பிடுகிறது.[2]

தமிழ்நாட்டுப் போதிகைகள்

தொகு

தமிழ்நாட்டில் பல்லவர் காலத்துக்கு முந்திய கட்டிடங்கள் எதுவும் இன்றுவரை நிலைக்காததால், அக்காலத்துப் போதிகைகள் குறித்த தகவல்கள் இல்லை. எனினும், மரத்தாலான போதிகைகள் இருந்திருக்கக்கூடும். பல்லவர் காலத்தில் கல்லாலான முதற் கோயில் அமைக்கப்பட்டதிலிருந்து, பல்லவர் காலம், பிற்காலச் சோழர் காலம், பிற்காலப் பாண்டியர் காலம், விசயநகரக் காலம், நாயக்கர் காலம் எனப் பல்வேறு காலகட்டங்களூடாகப் போதிகைகள் வளர்ச்சிபெற்று வந்துள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. இராகவன், அ., தமிழ்நாட்டுக் கோயிற் கட்டடக்கலை-1, அமிழ்தம் பதிப்பகம், 2007. பக் 229, 230
  2. பவுண்துரை, இராசு., தமிழகக் கோயிற்கட்டடக்கலை மரபு - மயன் அறிவியல் தொழில்நுட்பம், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2004, பக். 119-122
"https://ta.wikipedia.org/w/index.php?title=போதிகை&oldid=2993279" இலிருந்து மீள்விக்கப்பட்டது