தழல் என்பது ஒரு விளையாட்டுக் கருவி. வளைத்து இசை எழுப்பும் கருவி. சங்ககாலத்தில் காதலன் தன் காதலிக்குத் தரும் விளையாட்டுக் கருவி இது. தழல், தட்டை, குளிர், முறி என்பன அவன் தந்த விளையாட்டுப் பொருள்கள் எனச் சங்ககாலப் பாடல்கள் தெரிவிக்கின்றன. [1] [2] [3] இவற்றில் தட்டை, குளிர் ஆகியன விளையாட்டுப் பொருள்கள் எனபது வெளிப்படை. முறி என்பது காதலி உடுத்திக்கொள்ளத் தந்த தழையாடை.

தட்டையைத் தட்டிக் குறமகள் தினை கவர வரும் பறவைகளை ஓட்டினாள் எனக் கூறும் பாடல் தழலை வளைத்துப் பறவைகளை ஓட்டினாள் எனவும் குறிப்பிடுகிறது.

'தழங்கு குரல்' என்னும் தொடர் இடி முழக்கத்தையும், [4] [5] முரசு முழக்கத்தையும், [6] நாத் தழுதழுக்கும் பேச்சையும் [7] உணர்த்துவதைச் சங்கப் பாடல்கள் தெரிவிக்கின்றன.

இவற்றால் தழங்கும் ஓசை எழுப்புவது தழல் என்னும் கருவி என்பது தெரியவருகிறது. ஆண்பால் பிள்ளைத்தமிழ் பாடல்களில் வரும் சிறுபறை போல இந்தத் தழல் மகளிர் முழக்கும் பறை என உணரமுடிகிறது. ஆண்டாள் முழக்கிய பறை இந்தக் கருத்தோட்டத்தில் நினைவுக்கு வருகிறது.

அடிக்குறிப்புதொகு

 1. தழலும் தட்டையும் முறியும் தந்திவை
  ஒத்தன நினக்கெனப் பொய்த்தன கூறி (குறுந்தொகை 223)
 2. தழலும் தட்டையும் குளிரும் பிறவும்
  கிளிகடி மரபின ஊழ் ஊழ் வாங்கி (குறிஞ்சிப்பாட்டு 43-44)
 3. தழலை வாங்கியும், தட்டை ஓப்பியும்,
  அழல் ஏர் செயலை அம் தழை அசைஇயும்,
  குறமகள் காக்கும் ஏனல் (அகநானூறு 188)
 4. வயப்புலி பாய்ந்தெனக் கிளையொடு
  நெடுவரை இயம்பும் இடியுமிழ் தழங்குகுரல்
  கைக்கோண் மறந்த கருவிரன் மந்தி (மலைபடுகடாம் 309)
 5. தழங்கு குரல் ஏறொடு முழங்கி, வானம்
  இன்னே பெய்ய மின்னுமால் (நற்றிணை 7)
 6. தழங்குரல் முரசம் காலை இயம்ப, (ஐங்குறுநூறு 448)
 7. உண்டுமகிழ் தட்ட மழலை நாவிற்
  பழஞ்செருக் காளர் தழங்குகுரல் தோன்ற (மதுரைக்காஞ்சி 668)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தழல்&oldid=1422944" இருந்து மீள்விக்கப்பட்டது