தானியேல் (நூல்)

திருவிவிலிய நூல்

தானியேல் (Daniel) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும்.

சிங்கக் குகையில் தானியேல் (தானி 6:1-28). ஓவியர்: பீட்டர் பவுல் ரூபன்சு. ஓவியம் படைக்கப்பட்ட காலம்: 1613-1615. காப்பிடம்: வாசிங்க்டன், ஐக்கிய அமெரிக்க நாடுகள்.

பெயர்

தொகு

தானியேல் என்னும் நூல் மூல மொழியாகிய எபிரேயத்தில் דָּנִיֵּאל, (Daniyyel, Dāniyyêl) என்னும் பெயர் கொண்டது. "கடவுள் என் நடுவர்" என்பது அதன் பொருள். தானியேல் என்பவர் இந்நூலின் மைய கதாபாத்திரம் ஆவார்.

உள்ளடக்கம்

தொகு

தானியேல் என்னும் இந்நூல் யூதர்கள் வேற்றினத்து மன்னனால் ஒடுக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்டபோது எழுதப்பெற்றது. கொடுங்கோல் மன்னனை வீழ்த்தி இறைவன் தம் மக்களை மீண்டும் முன்னிருந்தவாறே சிறப்புறச் செய்வார் என்பதை வற்புறுத்துமாறு இந்நூலில் எடுத்துக்காட்டுகளும் காட்சிகளும் கையாளப்பட்டுள்ளன.

இந்நூல் இரு பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

பிரிவு 1: தானியேலும் அவருடைய தோழர்களும் கடவுள்மீது அசையாத நம்பிக்கை கொண்டு அவர்தம் கட்டளைகளுக்குப் பணிந்து நடந்ததால் தங்கள் எதிரிகளை மேற்கொண்டனர். இப்பகுதியில் காணப்படுபவை பாபிலோனிய, பாரசீகப் பேரரசுகளின் வரலாற்றுப் பின்னணியில் எழுதப்பட்டுள்ளன.

பிரிவு 2: தானியேல் கண்ட காட்சிகள் பாபிலோனியப் பேரரசு தொடங்கி அடுத்துவரும் எல்லாப் பேரரசுகளின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் சுட்டிக்காட்டும் உருவகங்களாக அமைந்து, வேற்றினத்துக் கொடுங்கோலனின் வீழ்ச்சியையும் இறைமக்களின் வெற்றியையும் முன்னுரைக்கின்றன.

நூல் அமைப்பில் பல மொழிகள்

தொகு

தானியேல் நூலின் ஒரு பகுதி எபிரேய மொழியிலும், மறு பகுதி அரமேய மொழியிலும் எழுதப்பட்டுள்ளன.

எபிரேய மொழிப் பகுதி:
தானியேல் 1:1-2:3;
தானியேல் 8:1-12:13.

அரமேய மொழிப் பகுதி:
தானியேல் 2:4-7:28.

மேலும், தானியேல் நூலின் நான்கு பகுதிகள் கிரேக்க மொழியில் மட்டும் காணப்படுகின்றன. அவை தானியேல்: இணைப்புகள் என்னும் இணைத்திருமுறை நூலில் இடம் பெற்றுள்ளன.

நான்கு கிரேக்க இணைப்புகள்:
"அசரியாவின் மன்றாட்டு";
"மூவர் பாடல்";
"சூசன்னா";
"பேலும் பறவைநாகமும்".

குறிப்பிடத்தக்க ஒரு சிறு பகுதி

தொகு

தானியேல் 2:19-23
தானியேல் விண்ணகக் கடவுளை வாழ்த்திப் போற்றினார்.
அவர் கூறியது:
கடவுளின் திருப்பெயர் என்றென்றும் வாழ்த்தப்படுவதாக!
ஏனெனில், ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியன!
காலங்களையும் பருவங்களையும் மாற்றுபவர் அவரே!
அரசர்களை விலக்கி மாற்று அரசர்களை நிலைநிறுத்துபவர் அவரே!
ஞானிகளுக்கு ஞானம் வழங்குபவர் அவரே!
அறிவாளிகளுக்கு அறிவை அருள்பவர் அவரே!
ஆழ்ந்த மறைபொருள்களை வெளிப்படுத்துபவர் அவரே!
இருளில் உள்ளதை அறிபவர் அவர்!
ஒளியும் வாழ்வது அவருடனே!
எங்கள் தந்தையரின் இறைவா!
உமக்கு நன்றியும் புகழும் கூறுகின்றேன்;
ஏனெனில் எனக்கு ஞானமும் ஆற்றலும் தந்தவர் நீரே!
நாங்கள் உம்மிடம் கேட்டதை இப்பொழுது எனக்குத் தெரியப்படுத்தியவர் நீரே!
அரசனது காரியத்தை எங்களுக்கு அறிவித்தவரும் நீரே!"

உட்பிரிவுகள்

தொகு
பொருளடக்கம் அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. தானியேலும் தோழர்களும் 1:1 - 6:28 1289 - 1302
2. தானியேலின் காட்சிகள்

அ) நான்கு விலங்குகள்
ஆ)செம்மறியும் வெள்ளாடும்
இ)வான தூதர்

7:1 - 11:45

7:1-28
8:1 - 9:27
10:1 - 11:45

1302 - 1312

1302 - 1304
1304 - 1308
1308 - 1312

3. முடிவின் காலம் 12:1-13 1312 - 1313
"https://ta.wikipedia.org/w/index.php?title=தானியேல்_(நூல்)&oldid=3923727" இலிருந்து மீள்விக்கப்பட்டது