தாழிகுமாரன் கல்வெட்டு (மாதோட்டம்)
தாழிகுமாரன் கல்வெட்டு என்பது, இலங்கையின் வடபகுதியில் பண்டைக்காலத்து முக்கிய துறைமுகங்களில் ஒன்றான மாதோட்டத்தில், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியில் இடம்பெற்ற அகழ்வாய்வுகளின்போது கண்டுபிடிக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டுக்களில் ஒன்று. இக்கல்வெட்டு ஒரு தூணின் நான்கு பக்கங்களிலும் எழுதப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் சில பகுதிகள் வாசிக்க முடியாத அளவுக்குச் சிதைவடைந்துள்ளன.[1]
காலம்
தொகுஇக்கல்வெட்டின் வாசித்தறியக்கூடிய பகுதியில், இதன் காலத்தை அறியக்கூடிய நேரடியான தகவல்கள் எதுவும் இல்லை. இக்கல்வெட்டு எழுதப்பட்ட காலத்துக்குரிய அரசனின் பெயரும் ஆட்சியாண்டும் சிதைவடைந்த பகுதிகளில் இருந்திருக்கக்கூடும். எனினும், கல்வெட்டில் சொல்லப்பட்ட விடயங்களும், எழுத்து வடிவங்களும், இது இலங்கையில் சோழராட்சியின் தொடக்ககாலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் எனக் காட்டுகின்றன.[2] கிபி 9ம் நூற்றாண்டின் கடைசிப் பத்தாண்டில் தொடங்கி கிபி 1070 வரை இலங்கையில் சோழராட்சி நிலவியது.
கல்வெட்டின் உள்ளடக்கம்
தொகுமாதோட்டத்தில் சோழ அரசின் அதிகாரியாக இருந்த சிறுகூற்றநல்லூர் கிழவனான தாழிகுமாரன் என்பவனால் சிவாலயம் ஒன்று அமைக்கப்பட்டது குறித்தும், அதற்குத் தேவையான நிவந்தங்களுக்காகத் தானம் வழங்கப்பட்டது குறித்தும் இக்கல்வெட்டுக் கூறுகிறது.[3] அக்கோயிலின் பெயர் இராசராச ஈஸ்வரம் என்பதும், அக்கோயிலில் வைகாசி விசாகத்து ஏழுநாட்கள் விழாவுக்காகவும்,[4] அன்றாட வழிபாட்டுத் தேவைகளுக்காகவும்[5] நன்கொடையாக நிலத்துடன் அரசாங்கத்துக்குரிய வருமானங்கள் சிலவற்றைத் தாழிகுமாரன் வழங்கியதும் கல்வெட்டில் சொல்லப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்
தொகுஉசாத்துணைகள்
தொகு- பத்மநாதன், சி., இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள், கலாச்சார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு, 2006.