மாதோட்டம்

இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம்

மாதோட்டம் என்பது, இலங்கைத் தீவில், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சிறப்புடன் விளங்கிய துறைமுகப் பட்டினம் ஆகும். பாளி மொழியில் எழுதப்பட்ட இலங்கையின் பழைய வரலாற்று நூல்கள் இதனை மாதொட்ட அல்லது மகாதித்த என்று குறிப்பிடுகின்றன. தமிழ் மொழி மூலங்களிலிருந்து, இது தமிழில் மாந்தை என்றும் மாதோட்டம் என்றும் அழைக்கப்பட்டதாக அறியவருகின்றது. கி.பி 13 ஆம் நூற்றாண்டுக்கு முன், இலங்கைத் தீவின் முக்கிய துறைமுகமாக இது விளங்கியதுடன் உலகளாவிய வணிகத்திலும் சிறப்பிடம் பெற்றிருந்தது. பல்வேறு நூல் ஆதாரங்களும், தொல்பொருட்களும் இதற்குச் சான்றாக விளங்குகின்றன. பண்டைய உலகின் பல நாடுகளைச் சேர்ந்த நாணயங்களும், போசலின் பாண்டங்களும், மற்றும் பல வணிகப் பொருட்களும் அகழ்வாய்வுகள் மூலம் இவ்விடத்தில் கண்டறியப்பட்டுள்ளன. இந்தச் சான்றுகள், இப்பகுதியில் பெருமளவில் மக்கள் வாழ்ந்து வந்ததையும், மாதோட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெருமளவில் வேளாண்மை முயற்சிகள் இடம்பெற்றதையும் காட்டுவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

மாதோட்டம்
மாந்தை
මන්තොට
துறைமுக நகரம்
மாதோட்டம் is located in Northern Province
மாதோட்டம்
மாதோட்டம்
ஆள்கூறுகள்: 8°59′22″N 79°59′53″E / 8.98944°N 79.99806°E / 8.98944; 79.99806
நாடுஇலங்கை
மாகாணம்வடக்கு மாகாணம்
மாவட்டம்மன்னார்
பிரதேச செயலர்மாந்தை மேற்கு
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்)

அமைவிடம்

தொகு

இது இலங்கைத் தீவின் வடமேற்குக் கரையில், இன்றைய வடமாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் அமைந்திருந்தது. மல்வத்து ஓயா என அழைக்கப்படும் ஆற்றின் கழிமுகத்தை அண்டி அமைந்திருந்த இப் பட்டினம், அதே ஆற்றங்கரையில் அமைந்திருந்த பண்டைய தலைநகரமான அனுரதபுரத்துடன் சிறப்பான போக்குவரத்து வசதிகளையும் கொண்டிருந்தது. தமிழகத்திலிருந்து சில மைல்கள் தொலைவில் அமைந்திருந்த இது, தென்னிந்தியாவுடனான இலங்கையின் வணிகத் தொடர்புக்கு வசதியாக இருந்தது. மிகப் பழைய காலத்திலிருந்தே இந்நகரில் தென்னிந்தியர்களே பெருமளவில் வாழ்ந்து வந்ததாகத் தெரிகின்றது. இதன் அருகே திருக்கேதீச்சரம் எனப்படும் புகழ் பெற்ற சிவன்கோயில் இருந்தது.

பண்டைய மாதோட்டத்தின் முக்கியத்துவம்

தொகு

இத் துறைமுகத்தின் முக்கியத்துவம் கி.பி ஏழாம் நூற்றாண்டுகளுக்குப் பின்னர் குறையத் தொடங்கியது. தென்கிழக்கு ஆசியாவின் ஸ்ரீவிஜய இராச்சியம், கிழக்கு - மேற்குக் கடல் வணிகத்தின் முக்கிய மையமாக மாறியதால், அரபிக் கடல் பகுதியின் வணிக முக்கியத்துவம் வங்கக் கடலுக்கு மாறியது. மாதோட்டத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் தலைநகர் அனுரதபுரத்தையும் பாதித்ததாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஏழாம் நூற்றாண்டுக்குப் பின் தலைநகர் இலங்கையின் கிழக்குக் கரைக்கு அண்மையாக இருந்த பொலநறுவைக்கு மாற்றப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

ஏழாம் நூற்றாண்டுக்குப் பின்னரும் மாதோட்டம், இலங்கைக்கும் தென்னிந்தியாவுக்குமான வணிகத்துக்கு முக்கிய துறையாக விளங்கியது. 13 ஆம் நூற்றாண்டு வரை இந்நிலை நீடித்தது. இதன் பின்னர் இத் துறைமுகமும் பட்டினமும் பழைய முக்கியத்துவத்தை முற்றாகவே இழந்து விட்டன எனலாம்.

தேவாரங்களில் மாதோட்டம்

தொகு

இலங்கையில் உள்ள சிவத்தலங்களுள் பாடல் பெற்றதலங்கள் இரண்டு. அவற்றுள் மாதோட்டத்தில் அமைந்திருந்த திருக்கேதீச்சரமும் ஒன்று. சம்பந்தர், சுந்தரர் ஆகிய இரு நாயன்மார்கள் இங்குள்ள சிவன் மேல் தேவாரப் பதிகங்களைப் பாடியுள்ளார்கள். இவற்றில் அடங்கியுள்ள பெரும்பாலான பாடல்களில் மாதோட்டத்தின் சிறப்புப் பற்றிய அடிகள் உள்ளன.

சம்பந்தர் பாடிய விருது குன்றமா மேருவில் நாணற என்று தொடங்கும் பதிகத்தில் மாதோட்டத்தின் கடற்கரை அமைவிடச் சிறப்புப் பற்றியும், அங்கு அமைந்திருந்த, பூஞ்செடிகளையும், பயன்தரு பழ மரங்களையும் கொண்ட சோலைகள் பற்றியும், அதன் பொருள் வளம் குறித்தும், கற்றோரும், படைவீரரும் நிறைந்திருந்தமை பற்றியும் குறிப்புக்கள் காணப்படுகின்றன. [1]

சுந்தரமூர்த்தி நாயனாருடைய நத்தார்படை ஞானன் என்று தொடங்கும் பதிகத்திலும், இதே போன்ற குறிப்புக்கள் வருகின்றன[2]. அத்துடன், அங்கே கப்பல்கள் வந்து குவிவதையும் அவர் குறிப்பிடுகின்றார். [3].

குறிப்புகள்

தொகு
  1. சம்பந்தரின் பதிகத்தில் வரும் மாதோட்டத்தின் சிறப்பைக் கூறும் பகுதிகளைக் கீழே காண்க.
    • ....கனைகடற் கடிகமழ்
    பொழிலணி மாதோட்டங்....
    • ....இருங்கடற் கரையினில்
    எழில்திகழ் மாதோட்டம்....
    • ....இச்சையி னுழல்பவர்
    உயர்தரு மாதோட்டத்....
    • ....வடிகொள் மூவிலை வேலினர் நூலினர்
    மறிகடல் மாதோட்டத்....
    • ....வல்லர் பார்மிசை வான்பிறப் பிறப்பிலர்
    மலிகடல் மாதோட்டத்....
    • ...வாழை யம்பொழில் மந்திகள் களிப்புற
    மருவிய மாதோட்டக்....
    • ....வண்டு பண்செயு மாமலர்ப் பொழில்மஞ்ஞை
    நடமிடு மாதோட்டந்....
    • ....கடல்வாயப்
    பொன்னி லங்கிய முத்துமா மணிகளும் பொருந்திய மாதோட்டத்....
    • ....மாவும் பூகமுங் கதலியும் நெருங்குமா
    தோட்டநன் னகர்மன்னித்.....
    • ....மாதோட்டத்
    தத்தர் மன்னுபா லாவியின் கரையிற்....
    • ....முரசெனக் கடலின தொலிகவர் மாதோட்ட....
  2. சுந்தரமூர்த்தி நாயனாருடைய நத்தார்படை ஞானன் என்று தொடங்கும் பதிகத்தில் வரும் மாதோட்டம் பற்றிய குறிப்புக்கள்.
    • ....வரியசிறை வண்டியாழ்செயும் மாதோட்டநன் னகருட்....
    • ....வையம்மலி கின்றகடல் மாதோட்டநன் னகரிற்....
    • ....வானத்துறு மலியுங்கடல் மாதோட்டநன் னகரிற்....
    • ....மட்டுண்டுவண் டாலும்பொழில் மாதோட்டநன் னகரிற்....
    • ....மாவின்கனி தூங்கும்பொழில் மாதோட்டநன் னகரிற்....
    • ....கறையார்கடல் சூழ்ந்தகழி மாதோட்டநன் னகருட்....
  3. ....வங்கம்மலி கின்றகடல் மாதோட்டநன் னகரிற்....

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதோட்டம்&oldid=3623500" இலிருந்து மீள்விக்கப்பட்டது