திணிவெண்
திணிவெண் அல்லது அணுத்திணிவெண் அல்லது நிறை எண் (Mass Number) எனப்படுவது, அணுக்கருவில் உள்ள புரோத்தன் (புரோட்டான்), நியூத்திரன் (நியூட்ரான்) ஆகியவற்றின் மொத்த எண்ணிக்கையைக் குறிக்கும். திணிவெண், ஒரு தனிமத்தின் ஒவ்வொரு ஓரிடத்தானுக்கும் தனித்துவமானதாகும். இந்த ஓரிடத்தான்களைக் குறிக்கக் குறிப்பிட்ட தனிமத்தின் பெயருக்கு அடுத்ததாக அல்லது குறியீட்டுக்கு இடதுபுறம் மேலெழுத்தாக இத் திணிவெண் எழுதப்படுகின்றது. எடுத்துக்காடாக, கரிமம்-12 (12C) எனக் குறிப்பிடப்படும் கரிமத்தின் ஓரிடத்தான், 6 புரோத்தன்களையும், 6 நியூத்திரன்களையும் கொண்டுள்ளது.திணிவெண் A என்பதனால் குறிக்கப்படும். இத் திணிவெண் ஆனது ஒரே மூலக் அணுக்களில் வேறுபடும் போது சமதானிகள் உருவாக்கப்படுகின்றன. திணிவெண் புரோத்தன்களையும் நியூத்திரன்களையும் கொண்டமைந்ததாகும்.